பெண் புத்தி, ‘முன்’ புத்தி!

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019

மதுரை மாவட்டம், நகைக்கடை பஜார், கான்சா மேட்டு தெரு, மாநகராட்சி பள்ளியில், 1966ல், 8ம் வகுப்பு படித்தேன். எங்கள் வகுப்பில், 30 பேர் இருந்தோம்; இதில், 10 மாணவியர்.

வகுப்பு ஆசிரியர் ஐயம்பெருமாள், 'பெண் தான் புத்திசாலி; ஆண்களுக்கு, அவ்வளவாக புத்தி இல்லை...' என்று அடிக்கடி கூறுவார்.

ஒரு மாணவன், 'பெண் புத்தி, பின்புத்தி என, கிண்டல் செய்கின்றனரே...' என, கேட்டான்.

'பின்னால் நடக்கப் போவதை, அறிந்து கொள்வதால், அப்படி சொல்கின்றனர்... அறிவுத் திறனில், பெண்களின் மேன்மையை விரைவில் நிரூபிக்கிறேன்...' என்று சவால் விட்டார்.

ஒரு நாள் காலை, அந்த ஆசிரியர் வகுப்புக்கு வந்த போது, கண்கள் சிவந்து இருந்தன. ஒரு மாணவன் எழுந்து, 'சார்... இரவு முழுவதும் துாங்கலயா அல்லது அழுதீங்களா...' என, கேட்டான்.

அவர் பதில் கூறவில்லை. ஒரு மாணவி எழுந்து, 'சார்... இன்று புதன் கிழமை... எண்ணெய் தேய்த்து, குளிக்கும் போது, சீயக்காய் துாள் கண்ணில் விழுந்து விட்டதா...' என, கேட்டாள்.

'நீ சொல்வது தான் உண்மை... இப்போதாவது, பெண் புத்திசாலி தான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்...' என்றார் ஆசிரியர். எங்களால் பதில் பேச முடியவில்லை.

–- கே.பொன்னையா ராஜேந்திரன், மதுரை.