இட்லியில் பாயும் சாம்பார் நதி!

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019

மதுரை மாவட்டம், ஷெனாய் நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் வகுப்பு ஆசிரியர், டேவிட் ஆசிர்வாதம்; உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். வரலாறு, புவியியல் பாட வகுப்புகளை நடத்துவார்.

புவியியல் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன். இதனால், அந்த பாடத்தில், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள கூறியிருந்தார் ஆசிரியர்.

பொறாமைப்பட்ட, சில மாணவர்கள், என்னை மாட்டி விட சூழ்ச்சி செய்தனர்.

ஒரு நாள், 'சாம்பார் நதி எங்கிருக்கு...' என, கேட்டனர் சக மாணவர்கள்.

'அது மாதிரி, ஒரு நதியில்லை; சம்பல் என்ற நதி தான், யமுனையின் கிளையாக, மத்தியபிரதேச மாநிலத்தில் ஓடுகிறது...' என்றேன்.

ஏளனமாக சிரித்தபடியே, 'சாம்பார் நதி இருப்பது கூட, உனக்கு தெரியவில்லை... வேண்டுமானால், ஆசிரியரிடம் கேட்டுப் பார்...' என்று ஏவி விட்டனர்.

ஓய்வு அறையில் இருந்த ஆசிரியரிடம், சாம்பார் நதி பற்றி கேட்டேன். உடன் இருந்த ஆசிரியர்கள், 'கொல்' என, சிரித்தனர். என் ஆசிரியர் கடும் கோபத்தில், கன்னத்தில் அறைந்து, 'சாம்பார் நதி, இட்லி மேல் தான் ஓடும்...' என்றார்.

பின்னர், கோபம் தணிந்து, 'அது மாதிரி ஒரு நதி இல்லை; ஐரோப்பாவில் பிரான்சிலிருந்து, பெல்ஜியத்திற்குள், 'சாம்பெர்' என்ற நதி பாய்கிறது; இது, மியூஸ் நதியின் கிளை...' என்று விளக்கியபடி, 'உன்னை யாரோ தவறாக வழி நடத்துகின்றனர்; வீண் வாதத்தில் ஈடுபடாமல், தேர்வுக்கு தயாராகு...' என்று அறிவுறுத்தினார்.

நன்றாக படித்து, இறுதித் தேர்வில், முதல் மதிப்பெண் வாங்கிய என்னை, மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்!

–- பி.விஜய குமார், கோவை.