ரோஜா செடியின் கதை!

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019

திருநெல்வேலி மாவட்டம், குறுக்குத்துறை, புனித ஜார்ஜ் பள்ளியில், 1947ல், 6ம் வகுப்பு படித்தேன்.

தினமும், நீதி போதனை வகுப்பு நடக்கும். ஒரு கதையைச் சொல்லி, அது போதிக்கும் நீதியை, விளக்குவார் ஆசிரியர்.

மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, மயிலுக்குப் போர்வை தந்த, பேகன் கதை என, மன்னர் சார்ந்த கதைகளாக தான் இருக்கும்.

அப்போது, நீதி போதனை வகுப்புக்கு, புதிய ஆசிரியர், ஜீவானந்தம் நியமிக்கப்பட்டார். அவர் கூறிய கதைகள் அனைத்தும் அற்புதம்!

ஒரு நாள் ரோஜா செடி பற்றி கதை சொன்னார்!

அது, கடும் வெயில் நாள். நீர் கிடைக்காமல், ரோஜா செடி, வாடிக்கொண்டிருந்தது. அப்போது, ஒரு கருப்பு மேகம், வானில் பறந்து போனது.

'மேகமே... மேகமே... தாகத்தில் தவிக்கிறேன்... ஒரே ஒரு துளியை சிந்தி விட்டுப் போ...' என, ரோஜா செடி கெஞ்சியது.

குனிந்து பார்த்த மேகம், 'அவசரமா போறேன்; திரும்பி வரும் போது தருகிறேன்...' என்று பறந்தது. மாலையில் திரும்பிய மேகம், அந்த ரோஜா செடி கருகியதை பார்த்து, 'உதவி கேட்ட போதே செய்திருக்கலாமே!' என, வருந்தியது.

இந்த கதை, அரை நுாற்றாண்டு தாண்டியும், என் மனதில் நிற்கிறது.

எனக்கு, 84 வயதாகிறது.

'தேவைப்படும் போது செய்வது தான் உதவியே தவிர, கூடுதலாக இருப்பதை கொடுப்பது அல்ல...' என்பதை, அந்த கதை மூலம் உணர்ந்து, வாழ்வில் பின்பற்றுகிறேன்.

அந்த ஆசிரியரை மனதில் கொண்டு, உதவிகள் செய்கிறேன்!

–- கே.வெங்கடராமன், சென்னை.