உரித்த பழம்!

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019

ஒரு ஊரில், சோம்பேறி இளைஞன் ஒருவன் இருந்தான்; தகப்பன் இல்லை. வீட்டு வேலைகள் செய்து, அவனைப் காப்பாற்றி வந்தாள் தாய். வேலைக்கு சென்று, சம்பாதிப்பது, அவனுக்கு பாகற்காய் போல் கசக்கும். ஊர் சுற்றுவதும், துாங்குவதும் தான் அவனுக்கு பிடித்தவை.

ஒரே மகனை திருத்த முயற்சித்து தோற்றுப் போனாள் தாய்.  ஒரு நாள் - ஊர் பூங்கா பெஞ்சில், யோசித்தவாறே படுத்திருந்தான். அப்போது, வேர்க்கடலை விற்று வந்தவரை அழைத்து, 'வேர்க்கடலை தோலுடன் உள்ளதா, உரித்துள்ளதா...' என்று கேட்டான்.

'தோலுடன் உள்ளது; உரித்துத் தான் சாப்பிட வேண்டும்...' என்றார் வியாபாரி.

'உரிக்காத வேர்க்கடலை வேண்டாம்; உரித்துத் தின்ன நேரம் இல்லை...' என்று கூறி அனுப்பினான்.

சிறிது நேரத்தில், வாழைப்பழம் விற்பவன் வந்தான். அவனை அழைத்த இளைஞன், 'உரித்த வாழைப்பழம் உள்ளதா...' என்று கேட்டான்.

'தோலுரித்த வாழைப்பழம் எங்கும் கிடைக்காது; உரித்துத் தான் சாப்பிட வேண்டும்...' என்றான்.

'அடுத்தமுறை வரும் போது, தோலுரித்த வாழைப்பழம் எடுத்து வா...' என்றான்.

'உன்னைப் போன்ற, முழு சோம்பேறியை இதுவரை பார்த்ததில்லை...' என்றபடி நடையைக் கட்டினான் வியாபாரி.

சூரியன் உச்சிக்கு வந்தான். வெயில், 'சுளீர்' என, விழுந்தது. படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான். அப்போது, 'மோர் வேண்டுமா...' என்று கேட்டாள் ஒரு மூதாட்டி.

'வெயிலில் தாகமாக உள்ளது; மோர் சாப்பிட்டால், நன்றாக இருக்கும். ஆனால், மோர் குவளையை கையால் வாங்கி குடிக்க முடியாது; நீங்களே, மோரை என் வாயில் ஊற்றி, என் சட்டை பையில் உள்ள காசை எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றான்.

இதைக் கேட்டு, 'சேம்பேறிக்கெல்லாம் அரசனாக இருப்பாய் போலிருக்கிறதே...' என்று கூறி, சென்றாள் மூதாட்டி.  இப்படிப்பட்ட சாகசங்களை செய்து வந்தான் இளைஞன்.

ஒரு சமயம் -

ஊரில், நல்ல மழை பெய்து, ஆறு, குளம், குட்டையெல்லாம் நிரம்பி, எங்கு பார்த்தாலும், தண்ணீராக காட்சி அளித்தது. சிறுவர் முதல் வயோதிகர் வரை, துாண்டிலுடன் மீன் பிடிக்க சென்றனர்.

சோம்பேறி இளைஞனின் தாய், 'வீட்டில் மீன் குழம்பு வைத்து, நீண்ட நாட்கள் ஆகி விட்டன; பக்கத்து வீட்டில், துாண்டில் முள் வாங்கித் தருகிறேன்; குளத்தில், மீன் பிடித்து வா...' என்று கூறினாள்.

'வேளா வேளைக்கு தவறாமல் சாப்பாடு போடும் தாய் சொல்வதை கண்டிப்பாக செய்ய வேண்டும்' என்று எண்ணிய சோம்பேறி இளைஞன், துாண்டில் முள்ளுடன் குளத்துக்குச் சென்றான்.

துாண்டிலை போட்டு, நீண்டநேரமாக காத்திருந்தான். அப்போது, அந்தப் பக்கம் வந்த வழிப்போக்கனிடம், 'ஐயா... நீங்கள் இந்த ஊருக்கு புதிது போல் தெரிகிறதே...' என்றான். அவசரமாக சென்று கொண்டிருந்த வழிப்போக்கன், 'உனக்கு என்ன வேண்டும்...' என்றான்.

'ஐயா... துாண்டில் முள்ளை குளத்தில் வீசி, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கிறேன்; மீன் ஏதாவது மாட்டியிருக்கிறதா என்று முள்ளை இழுத்துப் பார்த்து சொல்லுங்கள்...' என்றான்.

இதைக் கேட்ட வழிப்போக்கனுக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை; முழு சோம்பேறி இவன் என்பதை புரிந்து தலையில் அடித்தபடி, வேகமாக நடந்தான்.

குட்டீஸ்... இது போன்ற சோம்பேறிகளால் தான் நாடு முன்னேறமால் இருக்கிறது. இவனைப் போல் இல்லாமல் சுறுசுறுப்பாக வாழ பழகுங்கள்.