அழகு தேவதை!

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019

அக்பர் சக்கரவர்த்திக்கு, பேரன் குர்ரத்திடம் அளவற்ற வாஞ்சை; அவனைக் கொஞ்சும் போது, அரச காரியங்களைக் கூட மறந்து விடுவார்.

ஒருநாள் அரசவையில், 'பேரன் குர்ரத்தை விட, அழகான குழந்தை வேறு எங்காவது உண்டா...' என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், 'இல்லை அரசே...' என்றனர்.

ஆனால், பீர்பல் மட்டும் பதில் கூற வில்லை.

'நீ ஏன், பதில் அளிக்கவில்லை...' என்றார் அக்பர்.

'அரசே... உங்கள் கேள்வி மிகவும் சிக்கலானது; உண்மையான அழகை எப்படிக் கண்டு பிடிப்பது...'

'ஏன்... பார்த்தால் தெரியாதா... ஆந்தை அவலட்சணமாக இருக்கிறது; மான் அழகாக இருக்கிறது; இது கூடத் தெரியாதா...'

'அரசே... நாளைய தினம் ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வரச் சொல்வோம்; அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்...' என்றார், முல்லா தோபியாசா.

'நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நாளை குழந்தைகளுக்கு அழகுப் போட்டி நடத்துவோம்; ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வாருங்கள்; அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்...' என்றார், அக்பர்.

மறுநாள் -

அரசவை கூடியது. அரச பிரதிநிதிகள், ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வந்திருந்தனர். அக்பர் சக்கரவர்த்தி எல்லா குழந்தைகளையும் பார்த்தபடியே வந்தார்; எதுவுமே, அழகாக தோன்றவில்லை. அவருடைய பேரன் குர்ரமே மட்டும் தான், அழகு என, தோன்றியது.

வெறுங்கையுடன் நின்ற பீர்பாலைப் பார்த்து, 'நீ அழகிய குழந்தை எதையும் எடுத்து வரவில்லையா...' என்று கேட்டார்.

'அரசே... நாட்டிலேயே அதிக அழகுள்ள குழந்தையை பார்த்தேன். அதை அரண்மனைக்குக் கூட்டிச் செல்வதாக, தாயாரிடம் கேட்ட போது, 'மற்றவர் கண் திருஷ்டி பட்டுவிடும்' என்று கூறி, மறுத்து விட்டாள்...' என்றார்.

'அப்படியானால் மாறுவேடம் அணிந்து, அக்குழந்தையை பார்க்கச் செல்வோம்...' என்றார் அக்பர்.

அவருடன், அரசவை பிரதானிகளும், மாறுவேடம் அணிந்து சென்றனர். நகரத்தை விட்டு வெகுதுாரம் அழைத்து வந்தார் பீர்பல். ஒரு குடிசைப் பகுதியை அடைந்தனர்.

'என்ன பீர்பல், நீ சொன்ன அழகான குழந்தை, இந்த அவலட்சணமான இடத்தில் தான் இருக்கிறதா...' என்று, கேட்டார் அக்பர்.

'சேற்றில் கூட செந்தாமரை பூக்கும்; குப்பையில், மாணிக்கமும் இருக்கும்; ஒருவேளை, பீர்பல் சொன்ன அழகுக் குழந்தையும், இங்கு இருக்கலாம்...' என்றார் ஒரு அமைச்சர்.

'அதோ பாருங்கள்... ஒரு குழந்தை விளையாடுகிறதே...' என்று, துாரத்தில் ஒரு குழந்தையைக் காட்டினார், பீர்பல்.

கன்னங்கரேல் என, மிக விகாரமாக ஒரு குழந்தை, புழுதியில் விளையாடியதை, அக்பரும், மற்றவர்களும் பார்த்தனர். அப்போது, அக்குழந்தை தரையில் தடுக்கி விழுந்து, 'ஓ...' என, அழ ஆரம்பித்தது.

உடனே, குடிசையில் இருந்து வெளியே வந்த பெண், 'என் தங்கக்கட்டி, அழகு தேவதை... இந்த குப்பை தொட்டி உன்னைத் தள்ளி விட்டதா... அதை அடிப்போம்; நீ அழாதே... என் அழகு ராஜா...' என, குழந்தையை சமாதானப்படுத்தினாள்.

இதைக் கேட்ட அக்பர், 'இவளுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா... எவ்வளவு அசிங்கமாக, அவலட்சணமாக குழந்தை இருக்கிறது. இதைப் போய், அழகு தேவதை என்கிறாளே...' என்றார்.

'யாரு ஐயா நீ... என் அழகு செல்வத்தை, இன்னொரு முறை அசிங்கம்ன்னு சொன்னா... நாக்கை அறுத்துப் போடுவேன்; இந்த உலகம் முழுவதும் தேடிப் பார்! என் குழந்தை மாதிரி, அழகான ஒன்றை பார்க்க முடியாது...' என்று பொரிந்து தள்ளினாள், அக்குழந்தையின் தாய்.

மறுமொழி பேசாமல் திரும்பிய அக்பர் வழியில், 'பீர்பால்! நீ கூறியது உண்மை தான்; ஒவ்வொரு குழந்தையும், அதன் பெற்றோருக்கு அழகு தேவதை தான்...' என்றார்.

'பெற்றோருக்கு மட்டுமல்ல, பாட்டனார்களுக்கும்...' என்றார் பீர்பல், ஒரு நக்கல் சிரிப்புடன்.

அதன் பொருள் உணர்ந்து, சிரித்தார் பாட்டனார் அக்பர்!

குட்டீஸ்... அழகு என்பது, நம் பார்வை சார்ந்தது. எல்லா பொருட்களும் அதற்கு உரிய அழகுடன் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.