செல்வம், இன்பத்தை வாரி வாரி வழங்கும் வள்ளல்!

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019
‘அன்பே சிவம்’ என்பது ஆன்றோர் வாக்கு.  சிவபெருமானை அன்புருவாகக் காண்பதில் ஆனந்தம் கொள்பவர் அநேகர்.  அன்பு கலந்த இறைவனிடம் அச்சமும் நமக்கு இருக்க வேண்டும்.  இறையச்சம் குறைந்த காரணத்தால்தான் இக்கலியுகத்தில் பாதகச்செயல்கள் அதிகமாகிவிட்டன.  தீயவர்களுக்கு அச்சத்தை ஊட்டி, அவர்களை அடக்கி, நல்லோருக்கு அச்சத்தைப் போக்குபவர் பைரவர். பைரவர் என்பதற்கு பயத்தைப் போக்குபவர் என்பது பொருளாகும்.  ஹிரண்யாட்சன் மகனான அந்தகாசூரனை சம்ஹாரம் செய்து, தேவர்களின் துன்பம் அகற்ற சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோலமே பைரவமூர்த்தி.

பைரவரிடம் அழித்தல், அடக்குதல், காத்தல் எனும் முப்பெருஞ்சேவைகள் இழைந்து நிற்கின்றன.  சிவாலயங்களில் ஈசான்ய மூலையில், நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கும் பைரவர் ‘மண்ணின் மைந்தர்’ எனப் பொருள்படும் ‘தல பாலகர்’ எனும் பெயரில் வர்ணிக்கப்படுகிறார்.  சகல உலகங்களையும், திருத்தலங்களையும், தீர்த்தங்களையும் காத்து வருபவர் பைரவர்.  சிவாலயங்களில் தினமும் பூஜைகள் முடிந்து, அர்த்தஜாமப் பூஜைக்குப் பின், கதவுகளைப் பூட்டி, பிரதான கதவைப் பூட்டுவதற்குமுன், பைரவப் பெருமானிடம் அவரது சன்னிதியில் திறவியல்களை (சாவி) வைத்து எடுத்துச்செல்வது வழக்கம்.  காவல் தெய்வமாக விளங்குவதால் அவருடைய வாகனமாக நாய் விளங்குகிறது.  பைரவரின் நாய், நான்கு வேதங்களின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

கிரகங்களின் பிராணனாக பைரவர் இருப்பதால், கிரகப் பெயர்ச்சியின்போது பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் பைரவரை வணங்கி, பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.  இப்பிரபஞ்சத்தில் சகல உயிர்களும், நவக்கிரகங்களும், நட்சத்திரங்களும் காலச்சக்கரத்தின் ஆளுமைக்கு உட்பட்டதே.  காலச்சக்கரத்தை இயக்குபவர் பைரவர்தான்.  எனவே, காலத்தின் கட்டுப்பாட்டை மீறிக் காப்பவர் பைரவர்.

சனீஸ்வரரின் குருவாகவும் பைரவர் விளங்குகிறார். பைரவரை வணங்கி, அவருடைய பேரருளால் நவக்கிரகங்களுள் வலிமை வாய்ந்தவரானார் சனி பகவான்.  ஆகவே, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனிக் காலங்களில் பைரவரை வழிபட்டு, அவதிகள் நீங்கப் பெறலாம்.

தன்னிடம் வேண்டும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வச் சிறப்பையும், இன்பத்தையும் வாரி வாரி வழங்கும் வள்ளல், பைரவர்.  மாறாந்தை இரட்டை பைரவரை வழிபடுவோருக்கு, தொழிலில் அமோக லாபம் ஏற்படுகிறது.

தென்பாண்டி நாட்டை ஆட்சி செய்து வந்த ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன் திக் விஜயம் செய்தபோது, இப்பகுதிக்கு வந்துள்ளார்.  அப்போது மாலை வேளையாகிவிடவே, ஈசனை வழிபட ஆலயத்தைத் தேடியுள்ளார்.  ஆலயம் எதுவுமில்லாததால் ஊர்மக்கள் அங்கிருந்த குளத்து மண்ணில் லிங்கம் அமைக்க எத்தனித்தனர்.  இதற்காக குளத்தில் மூழ்கியபோது, கல்லாலான சிவலிங்கத்தின் பாணப்பகுதி கிடைத்துள்ளது.  அதனை, அவர்கள் மன்னனிடம் வழங்க, ஸ்ரீவல்லபன் மகிழ்ந்து பூஜை செய்து வழிபட்டு மன நிறைவடைந்துள்ளார்.  பின்னர் இப்பகுதியில் சிவாலயம் அமைத்தார்.

ஆலயம் நிர்மாணித்து 400 ஆண்டுகள் கடந்தபோது, இயற்கைச் சீற்றத்தாலும், பராமரிப்பு இல்லாததாலும் மண்ணுக்குள் புதைந்துபோனது  ஸ்ரீவல்லபன் எழுப்பிய ஆலயம்.  அக்காலத்தில், மேய்ச்சலுக்குச் சென்ற பசு ஓரிடத்தில் பால் சொரிந்ததைக் கண்டு, அருகிலிருந்தவர்கள் அப்பசுவை விரட்டியுள்ளனர்.  பின்னர் அருகே சென்று பார்த்தபோது பாணலிங்கம் இருப்பதையும், அதன் மீது குளம்படித்தடங்கள் பதிந்திருப்பதையும் கண்டனர்.  இதைத் தொடர்ந்து, ஊர்மக்கள் புதையுண்டு போன கோயிலை மீட்டுருவாக்கினர்.  15 கல்வெட்டுகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.  அதில் இத்தல ஈசன் கைலாசமுடைய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஸ்ரீவல்லபப் பாண்டியன், விக்கிரமப் பாண்டியன், குலசேகரப் பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ள விவரங்கள் கல்வெட்டுகளில் உள்ளன.  மன்னரின் வரிவிலக்கு பெற்ற ஊராக இவ்வூர் விளங்கியுள்ளது.  தம் முன்னோர் சிவ வழிபாடு செய்யவும், கோயில் அமைக்க இப்பகுதி மக்கள் உதவி புரிந்ததற்காகவும் மாறவர்மன் சுந்தர பாண்டியன், மக்கள் செலுத்த வேண்டிய வரியிலிருந்து விலக்களிக்கும் தனி உரிமையை (தாயம்) வழங்கியதாகவும், மாறனால் தாயம் வழங்கப்பட்ட நல்லூர் என்று இவ்வூர் பெயர் பெற்றதாகவும் வரலாறு உள்ளது.  ‘மாறன் தாய நல்லூர்’ என்று வழங்கப்பட்டது மருவி ‘மாறாந்தை’ என அழைக்கப்படுகிறது.  

1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் இது. இங்கு சதுர வடிவ ஆவுடை எனப்படும் அடிமட்டத்துடன் சிவலிங்கம் உள்ளது.  இவ்வமைப்பு மிக அரிதாகவே காணப்படுகிறது.  திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இந்த சிவபெருமானையும் ஆவுடையம்மனையும் வழிபட்டுப் பலன் பெறுகின்றனர்.  இவ்வாலயத்தில் விசித்திரமாக தட்சிணாமூர்த்தி சிரசில் சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.  இந்த அபூர்வ வடிவ தட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்கு சிறந்த கல்வி, உயர் பதவி, தொழில் முன்னேற்றம் கிடைக்கின்றன.  பாலாபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து இவரை வழிபடலாம்.

சிறப்புகள் மிகுந்த இத்திருக்கோயிலில் கோமளவல்லி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளும் எழுந்தருளியுள்ளார்.  கற்கண்டு, பூந்தி, லட்டு படைத்து, துளசி மாலை சார்த்தி, நெய் தீபமிட்டு இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்னைகள் தீர்கின்றன.

நவக்கிரகங்களும் இங்கு தத்தமது வாகனத்துடன் வீற்றிருந்து அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் மற்றுமொரு சிறப்பு.  மேலும், ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் எழுந்தருளி, பக்தர்களின் வாழ்வை வளமாக்கி வருகின்றனர்.  ஒரு பைரவர் உயரமாகவும் வாகனமின்றியும், மற்றொரு பைரவர் சற்று உயரம் குறைந்தவராகவும் வாகனத்துடனும் அருட்காட்சி தருவது இத்தலத்தின் தனி சிறப்பு.  தேய்பிறை அஷ்டமித் திதி நாளில் 60 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலமிட்டு, அதனை நல்லெண்ணெய்யில் நனைத்து, இரண்டு தீபமேற்றி, தயிர் சாதம் படைத்து இந்த இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி, தொழிலில் பெருத்த லாபம் ஏற்படுகிறது.  புதிதாகத் தொழில் தொடங்குவோரும் இந்த இரட்டை பைரவரை வழிபாடு செய்து மேன்மை பெறலாம்.

இரு கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ. மேற்கேயும், ஆலங்குளத்திலிருந்து 11 கி.மீ. கிழக்கேயும் மாறாந்தை உள்ளது.

தொடர்புக்கு :  77085 40706

– கீழப்பாவூர்  கி. ஸ்ரீமுருகன்