பதவிக்கு வயது தடையல்ல!

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019

நாயன்மார் அறுபத்து மூவரில் 12 வயதிலேயே, சிவபெருமானின் அருளைப் பெற்றவர், சண்டிகேஸ்வரர். சிவன் கோயிலை நிர்வகிக்கும் பதவியில் இருக்கும் இவரை, 'சிறிய பெருந்தகையார்' (வயதில் சிறியவர் ஆனால் செயலில் பெரியவர்) என சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

கோயிலின் வடக்கு பிராகாரத்தில் தீர்த்தம் விழும், கோமுகியை ஒட்டி இவருக்கு சன்னிதி இருக்கும். சிவ வழிபாட்டுக்குரிய பலனை அருளும் இவர், தெற்கு நோக்கி வீற்றிருப்பார். கோயில் வரவு, செலவு கணக்கை இவர் பெயரில் எழுதும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. அர்த்தஜாம பூஜையின் போது, சிவனுக்கு படைத்த நைவேத்யத்தில் நாலில் ஒரு பங்கை இவருக்கு படைப்பர்.

அதை கோயில் குளத்திலுள்ள மீன்களுக்கு இரையாக இட வேண்டும் என்பர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சுவாமி சன்னிதியிலுள்ள சண்டேச அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம் கலைநயம் மிக்கதாகும்.