ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019

* குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதுவது கட்டாயமா...ஏன்? பி. தண்டபாணி, நாகர்கோவில்.

பிறந்தவுடன் ஜாதகம் கணிக்கக்கூடாது. ஒரு வயது நிரம்பிய பிறகுதான் கணிக்க வேண்டும். வாழ்க்கையின் எதிர்கால விஷயங்களை அறிந்து அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஜாதகம் கணிப்பது அவசியமாகிறது.

* ஒரு வயது குழந்தை சன்னிதியில் சிறுநீர் கழித்து விட்டது. பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? ஐ.கே. வளர்மதி, தூத்துக்குடி.

குழந்தையும் தெய்வமும் ஒன்று. அது சிறுநீர் கழித்ததால் தோஷம் ஒன்றும் ஏற்படாது. இடத்தைத் துாய்மை செய்து கொடுத்தால் போதும்.

* எப்போதும் நிம்மதியாக வாழ ஆன்மிகரீதியாக என்ன செய்ய வேண்டும்? த. ராமநாதன், குறுக்குத்துறை.

பிறர் விஷயங்களில் தலையிடுவது, அவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவது, அல்லது தனது உயர்வைக் கண்டு  பெருமைப் பட்டுக்கொள்வது, தனது தாழ்ந்த நிலை யினால் வருந்துவது என்ற எண்ணங்களை விட்டு, “இறைவன் அருளிய வாழ்க்கையை இன்பமாய் வாழ்வோம்’’ என்ற எண்ணம் மேலோங்கினால் எப்போதுமே நிம்மதிதான்!

* கோயில்களில் அங்கப் பிரதட்சிணம் செய்வது பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? எஸ். அகிலாண்டேஸ்வரி, குமரி.

 நடந்து வலம் வருதல், பிரதோஷத்தில் சோமசூத்திர பிரதட்சிணம் செய்தல், மற்றும் அங்கப்பிரதட்சிணம் செய்தல் என மூவகையாக வலம் வருதல் பற்றி சாத்திரங்கள் விரிவாகக் கூறியுள்ளன. ஒரு முறை அங்கப்பிரதட்சிணம் செய்தால் ஆயிரம் முறை நடந்து வலம் வருதலுக்கு சமமான புண்ணியம் தரும்.