கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 170

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2019

எம்.எஸ்.வி. பாடிய ஆரம்பகால பாடல்கள்!

‘பாடு­வ­தற்கு எனக்கு இறை­வன் வள­மான குரல் தர­வில்லை என்ற ஏக்­கத்­தில் நான் சில இர­வு­கள் அழு­தி­ருக்­கி­றேன்...’ என்­றொரு முறை எம்.எஸ்.வி.  என்­னி­டம் கூறி­னார்.

பாட­வேண்­டும் என்ற எண்­ணம் அவர் கூடவே இருந்­தது. ஆனால், இசை­ய­மைப்­பா­ளர் என்ற முறை­யிலே அவர் தெளி­வா­கவே இருந்­தார்.  ‘‘நான் பாட வைப்­ப­வன்­தான்... பாட­கன் அல்ல...பாடு­வ­தற்­கென்று வள­மான குரல் உள்­ள­வர்­கள் இருக்­கி­றார்­கள்... அவர்­க­ளுக்­குப் பொருத்­த­மான மெட்­டுக்­க­ளைத் தந்து வேலை வாங்­கு­ப­வன் நான்.’’

மெட்­ட­மைத்த பின் பாட­கர்­க­ளுக்கு அதைப் பாடிப்­பா­டிக் காண்­பிப்­பார்.‘‘ஒவ்­வொரு பாட்­டும் ரிக்­கார்ட் ஆவ­தற்­குள் நானூறு தடவை பாடி­யி­ருப்­பேன்,’’ என்று என்­னி­டம் கூறி­னார்.

இசை­ய­மைத்து மெட்­டுக்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கும் பொழுது தயா­ரிப்­பா­ளர்/இயக்­கு­நர்/நடி­க­ரி­டம் பாடிக் காண்­பிப்­பது. பாட­கர்­க­ளுக்­குப் புரிய வைக்க அவர்­க­ளி­ட­மும் பாடிக் காண்­பிப்­பது, ஒலிப்­ப­தி­வின் போது பாடிக் காண்­பிப்­பது என்று எம்.எஸ்.வியின் குரல் ரீங்­கா­ர­மிட்­டுக் கொண்­டி­ருக்­கும்.

ஒரு முறை எம்.எஸ்.வியி­டம் எம்.ஜி.ஆர் கேட்­டார் --‘‘நீ பாடிப் பாடிக் காட்டி ஆளை மயக்­குறே...கடை­சி­யில் ரிக்­கார்­டா­கிப் பாட­லைக் கேட்­கும்­போது நீ பாடி­ன­திலே பாதி கூட இருக்­கி­றது இல்லே. பின்­ன­ணிப் பாட­கர்­களை என்ன வேலை வாங்­குறே நீ? ’’

குரல் வள­மும், நல்ல தமி­ழும், உணர்ச்சி வெளிப்­பா­டும் கொண்ட அற்­பு­த­மான பாட­கர்­கள் எம்.எஸ்.வி.க்கு வாய்த்­தார்­கள். ஆனால் அவர்­கள் என்ன செய்­வார்­கள்? எம்.எஸ்.வி. என்ற இசை வெள்­ளத்­தில் கிளைத்த வாய்க்­கால்­கள்­தானே அவர் அமைத்த பாடல்­கள்!  அவர்­க­ளால் மொள்ள முடிந்­ததை, அள்ள முடிந்­த­ததை, கொள்ள முடிந்­த­தைக் கொண்­டார்­கள்...நமக்­குத் தந்­தார்­கள்.

‘பாகப்­பி­ரி­வி­னை’­யில் ‘தாழை­யாம் பூ முடிச்­சுப்’ பாட்­டில் ஏதோ ஒரு குடி­யா­ன­வ­னின் ஹம்­மிங் எம்.எஸ்.வி.யின் குர­லில் அற்­பு­த­மாக ஒலித்­தது.

பீம்­சிங்­கிற்­கும் எம்.எஸ்.விக்­கும் ஒத்­து­வ­ரு­கிற அலை­வ­ரிசை. ‘பாச­ம­ல’­ரில் டைட்­டில் பாடலை, ‘நீ பாடுடா’ என்­றார் கண்­ண­தா­சன். பீம்­பாய்க்­கும் அதே எண்­ணம். வித்­தி­யா­ச­மான அந்த அண்­ணன்- – தங்கை கதைக்கு எம்.எஸ்.வியின் குர­லில் ஒரு மாறு­பட்ட அறி­மு­கம் கிடைத்­தது. ‘பாவ­மன்­னி’ப்­பில் ‘‘பாலி­ருக்­கும்’’ பாட­லி­லும் மறக்­க­மு­டி­யாத எம்.எஸ்.வியின் ஹம்­மிங் இருந்­தது.

எழு­ப­து­க­ளில் வந்த நாட்­டுப்­புற இசை­ய­லை­யைப் பற்றி எல்­லோ­ரும் பேசு­வார்­கள். ‘மணி­யோ­சை’­யில் ‘வரு­ஷம் மாசம் தேதி பார்த்து’ என்று துள்ளி வருமே அது என்­ன­வாம் (1963)? ஜான­கியை ராகத்தை இழுக்­கச் சொல்­வது வாடிக்­கை­யாக இருந்த நேரத்­திலே, ஜானகி பாட்­டிற்கு ஹம் செய்­தார் எம்.எஸ்.வி. ‘ஓஹோஹோ ஹோய்யா’ என்று பாட­லுக்கு முத்­தாய்ப்பு வைக்­கும் அந்த அழகை மறக்க முடி­யுமா?

மீண்­டும் பீம்­சிங் படம் -- ‘பார் மகளே பார்’ (1963).  இதில் டைட்­டில் பாட­லாக ஒலிக்­கும் ‘பார் மகளே பார்,’ என்ற பாடலை எம்.எஸ்.வி. பாடி­னார். ‘‘வாசம் என்­பது மலர்­க­ளில் தானா, மனங்­க­ளில் ஏன் இல்லை? பாசம் என்­பது பிறப்­பி­னில்­தானா, வளர்­வ­தில் ஏன் இல்லை?’’ என்­றது பாடல். ‘குழந்­தை­யும் தெய்­வ­மும்’ படத்­தில்,  ‘நான் நன்றி சொல்­வேன், என் கண்­க­ளுக்கு’ பாட­லில், பி.சுசீ­லா­வின் குர­லு­டன் வரும் எம்.எஸ்.வியின் குரல், கேட்க கேட்க இன்­பம் கொடுப்­ப­தாக இருந்­தது. சுசீ­லா­வின் குயி­லி­சைக்­குத் துணை­யாக வரும் அடி­நா­த­மாக அது விளங்­கி­யது.

எழு­ப­து­க­ளில்­தான் எம்.எஸ்.வியின் குரல் ஓர­ள­வுக்கு ஓங்கி ஒலிக்க ஆரம்­பித்­தது..அதற்கு நல்ல ரச­னை­யுள்ள இயக்­கு­நர்­கள் தேவைப்­பட்­டார்­கள் போலும். இந்தி ‘மம்­தா’வை சவு­கார் ஜானகி தமி­ழில் ‘காவி­யத்­த­லை­வி’­யா­கத் தயா­ரித்­தார். திரைக்­கதை,வச­னம், இயக்­கம் கே.பால­சந்­தர். பால­சந்­தர், எம்.எஸ்.வி, கண்­ண­தா­சன் என்ற கூட்டு விஸ்­வ­நா­த­னின் இசை­யில் புதிய அழ­கு­களை வெளிப்­ப­டுத்­தத் தொடங்­கிய காலம். ‘காவி­யத்­த­லை­வி’­யில் ‘நேரான நெடுஞ்­சாலை’ என்று எம்.எஸ்.வி. பாடி வரி­கள், அந்­த­ராத்­மா­வின் குர­லாக ஒலித்­தன.

 ‘நிலவே நீ சாட்­சி’­யில் ஏறக்­கு­றைய ‘நெஞ்­சில் ஓர் ஆல­யம்’ மாதி­ரி­யான ஒரு முக்­கோ­ணம் (1970). எம்.எஸ்.வி. அபூர்­வ­மா­கப் பாடிய காதல் டூயட் இதில் இடம்­பெ­று­கி­றது. ‘நீ நினைத்­தால் இந்­நே­ரத்­திலே ஏதேதோ நடக்­கும்’­என்ற சிருங்­கா­ரப் பாடலை எம்.எஸ்.வியு­டன் பாடி­ய­வர் எல்.ஆர்.ஈஸ்­வரி. காதல் டூயட்­டில் எம்.எஸ்.வி.யின் ஹம்­மிங்கை ரசித்த அள­விற்கு இந்­தப் பாடலை ரசிக்க முடி­ய­வில்லை.

சோவின் ‘முக­ம­து­பின் துக்­ளக்’ மேடை­நா­ட­கம் திரைப்­ப­ட­மாக உரு­வா­னது. டைட்­டில் இசை­யில் ஒரு அல்லா பாட­லைப் போட­லாம் என்று தயா­ரிப்­பா­ளர்­கள் எண்­ணி­னார்­கள். வாலி எழு­திய பாடலை யாரைப் பாட­வைக்­க­லாம் என்று சிந்­தித்­த­போது, முக­மத் ரபியை எம்.எஸ்.வி. நினை­வு­கூர்ந்­தார். ஹஜ்  பய­ணம் போய்­விட்டு வந்து பாடு­கி­றேன் என்­றார் ரபி. இதன்­பின், பித்­துக்­குளி முரு­க­தாஸ், சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன், நாகூர் ஹனீபா ஆகி­யோர்  பெய­ரைச் சொன்­னார் விஸ்­வ­நா­தன்.  கடை­சி­யில், சோவின் விருப்­பப்­படி, எம்.எஸ்.வி. அந்­தப் பாட­லைப் பாடி­னார்.

எம்.எஸ்.வி.யின் பாணி­யைப் பின்­பற்­றிப்  படத்­திற்­குப் படம் அழ­கான மெல­டி­க­ளைத் தந்த இசை­ய­மைப்­பா­ளர், வி.குமார். எம்.எஸ்.வியைப் பாட­வைக்­க­வேண்­டும் என்று ஆவல் அவ­ருக்கு.  ‘வெள்ளி விழா’­வில் ‘உனக்­கென்ன குறைச்­சல்’ என்று பாட­வைத்து மிகப்­பெ­ரிய வெற்­றியை அடைந்­து­விட்­டார் (1972). வய­தான ஜெமினி கணே­ச­னுக்­காக ஒலிக்­கும் இந்­தப் பாடல், முதி­யோ­ரின் தனி­மைக்கு மருந்­தாக அமைந்த பாடல்.

சோவு­டன் ஏற்­பட்ட தொடர்பு, ‘மிஸ்­டர் சம்­பத்’­தில் தொடர்ந்­தது --‘ஒரே கேள்வி உனைக்­கேட்­பேன் ஹரே ராம ஹரே கிருஷ்ணா..உல­கம் எப்போ உருப்­ப­டுமோ ஹரே ராம ஹரே கிருஷ்ணா’ (1972). ‘நவாப் நாற்­கா­லி’­யில் (1972) ‘பொன்­னாற் மேனி­யனே’ என்ற தேவா­ரம், விஸ்­வ­நா­தன் குர­லில் ஒரு கதம்ப பாட­லில் ஒலித்­தது.

முழு­நீள காமெ­டிப் பட­மான ‘காசே­தான் கட­வு­ள­டா’­வில் ‘ஆண்­ட­வன தொடங்கி ஆண்­டி­கள் வரைக்­கும் காசே­தான் கட­வு­ளடா’ சிரிப்பு நடி­கர்­க­ளின் யதார்த்த மொழி­யாக இடம்­பெ­று­கி­றது (1972). கே. வீர­மணி, ஏ.எல். ராக­வன் (மெட்­ராஸ் பாஷை) ஆகி­யோ­ரு­டன் இசை­ய­மைத்த விஸ்­வ­நா­த­னும் கோதா­வில் இறங்­கி­வி­டு­கி­றார்.

எம்.எஸ்.வி. அபூர்­வ­மா­கப் பாடிய முழு டூயட் --‘சொல்­லத்­தான் நினைக்­கி­றேன்’ (1973). காதல் நெஞ்­சங்­க­ளில் போராட்­ட­மான மவு­னங்­கள் இந்­தப் பாட்­டில் இசை­யாக வந்­தன. எம்.எஸ்.வி.யும் ஜான­கி­யும் காதல் தாபத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்­கள்.

மகோன்­னத வெற்றி பெற்ற ‘ஆரா­தனா’ என்ற இந்­திப் படம், ‘சிவ­கா­மி­யின் செல்­வன்’ என்று தமி­ழில் வந்­தது. எஸ்.டி.பர்­மன் ‘ஸபல் ஹோகி தேரி ஆரா­தனா‘ என்ற பாட­லைப் பாடி­யி­ருந்­தார். ‘எதற்­கும் ஒரு காலம் உண்டு பொறுத்­திரு மகளே,’ என்று பாடி­னார் எம்.எஸ்.வி. தாதா பாடி­ய­தில் ஒரு பங்கு கூட என்­னு­டைய பாட்­டில் இல்லை, என்று என்­னி­டம் கூறி­னார் எம்.எஸ்.வி. அதை ஏற்க நான் மறுத்­து­விட்­டேன். பர்­ம­னின் பாணி அவ­ரு­டைய வழி­யில் நன்­றா­கத்­தான் இருந்­தது. நீங்­கள் பாடி­ய­தும் சிறப்­பாக அமைந்­தி­ருக்­கி­றது என்று கூறி­னேன்.

‘இந்­திய நாடு பழம்­பெ­ரும் நாடு’ என்­பார் பாரதி. ‘தொன்று நிகழ்ந்­த­த­னைத்­தும் உணர்ந்­திடு,  சூழ கலை­வா­ணர்­க­ளும், இவள், என்று பிறந்­த­னன் என்­று­ண­ராத இயல்­பி­ன­ளாம் எங்­கள் தாய்’.....என்று பார­தத்­தின் பழ­மை­யைப் பாடி­னார் பாரதி. சாவித்­திரி நடித்து அவ­ரது மர­ணத்­திற்­குப் பிறகு வந்த ‘எங்­கள் தாய்’ படத்­தில், இந்­தப் பாடலை எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் மெட்­ட­மைத்­துப் பாடி­னார்.

 தத்­து­வம் (‘இக்­க­ரைக்கு அக்­க­ரைப் பச்சை -– அக்­க­ரைப் பச்சை’ 1974), ‘உப­தே­சம்’ (‘கண்­ட­தைச் சொல்­லு­கி­றேன் -– சில நேரங்­க­ளில் சில மனி­தர்­கள்’ 1976), டைட்­டில் பாடல் (பய­ணம் 1976, இளைய தலை­முறை 1977), உற்­சா­கம் (‘ஜகமே தந்­தி­ரம்’ – ‘நினைத்­தாலே இனிக்­கும்’ 1979), காதல் (‘சிந்து நதிப் பூவே’ – -சங்­கர் சலீம் சைமன் 1978), பக்தி (இத்­தனை மாந்­த­ருக்­கும் ஒரு கோயில் போதாது – ‘உண்­மையே உன் விலை என்ன?’-1977), நம்­பிக்கை (திருப்­பதி மலை­மேல் ஏறு­கி­றாய் – ‘-வாழ்வு என் பக்­கம்’ 1976), சோகம் (வசந்­தங்­கள் வரும் முன்னே – ‘-லலிதா’ 1976) என்று     எம்.எஸ்.வியின் குர­லுக்­குப் பல பயன்­பா­டு­க­ளும் மெய்ப்­பா­டு­க­ளும் கிட்­டின.

‘யாருக்­கும் வாழ்க்கை உண்டு, அதற்­கொரு நேரம் உண்டு’ என்று தொடங்­கு­கி­றது ‘தாய்­வீட்­டுச் சீத­னம்’ (1975) பாடல். இதில், திரு­ம­ணச் சூழலை காட்­டும் பின்­னணி இசை­யு­டன், நெஞ்­சு­ரத்தை தரும் வரி­கள் கலந்து வரு­கின்­றன.

 ‘எனக்­கொரு காதலி இருக்­கின்­றாள்’ என்று ‘இசை­ய­மைப்­பா­ளர்’  வேடத்­தில் வந்த தேங்­காய் சீனி­வா­ச­னுக்­குப் பாடிய எம்.எஸ்.வி (‘முத்­தான முத்­தல்­லவோ’),  ‘குடி­கா­ரர்’ தேங்­காய்க்கு, ‘தாகத்­துக்கு தண்ணி குடிச்­சேன்’, பாவத்­துக்­குத் தண்ணி அடிச்­சேன்’ என்று பாடி­னார், படம்  ‘நீலக்­க­ட­லின் ஓரத்­திலே’  (1979).

‘தீர்ப்பு’ படத்­தில் வரும் ‘ஆளுக்­கொரு தேதி வச்சு ஆண்­ட­வன் அழைப்­பான்’ என்ற பாடல், வாழ்க்­கை­யின் நிலை­யற்ற தன்­மை­யை­யும் மர­ணத்­தின் நிச்­ச­யத்­தை­யும் குறிப்­பிட்­டது.

‘ஆயி­ரம் பொன்னை பூமி­யில் கண்­டான்’  (‘அவன் ஒரு சரித்­தி­ரம்’- 1977)  தேசி­ய­கீ­தப் பாணி­யிலே ஒலித்­தது. ‘வெள்­ளைக் கலை உடுத்­தும் கலை­வாணி, நீ விதவை அல்ல அதை நான் அறி­வேன்’ (‘இறை­வன் கொடுத்த வரம்’ 1978) என்­கிற பாடல், வித­வைக்கு வாழ்வு தேடி­யது.

குடும்­பப் பிரச்­னை­களை சுட்­டும் பாடல்­கள் எம்.எஸ்.வி. குர­லில் ஒலிக்க ஆரம்­பித்­தன. மவு­லி­யின் முதல் இயக்­கத்­தில் வந்த படம் ‘இவர்­கள் வித்­தி­யா­ச­மா­ன­வர்­கள்’ (1980). இரண்டு பெண்­டாட்­டிக் கார­னின் அவ­ல­மான நிலையை, பேஸ் குர­லில் அவ­ச­ர­மில்­லா­மல்  எம்.எஸ்.வி. பாடிக் காட்­டி­னார் -- ‘இரண்டு வீடு இரண்டு கட்­டில், தூங்க இட­மில்லை’ !

‘எங்­கள் வாத்­தி­யார்’ படத்­தில்  ‘என்றோ புல­வன் பாடி­யதை, நான் இன்றே பாடு­கி­றேன்’ என்று நாகே­ஷுக்­காப் பாடி­னார் எம்.எஸ்.வி. சங்க இலக்­கி­யப் பாட­லான,  ‘நாராய் நாராய் செங்­கால் நாராய்’  என்­ப­து­டன்  தொடங்­கும் இந்­தப் பாடல்,  ஒரு ஏழை வாத்­தி­யா­ரின் ஏக்­கத்­தைக் காட்­டி­யது.

கூட்­டுக்­கு­டும்­பம் சந்­திக்­கும் நெருக்­க­டி­களை  எம்.எஸ்.வி. பாடிய  ‘குடும்­பம் ஒரு கதம்­பம் பல வண்­ணம் பல எண்­ணம்’ சித்­த­ரிப்­ப­தைப்­போல் வெளி­யி­டும் பாடல்­கள்  குறைவு (‘குடும்­பம் ஒரு கதம்­பம்’ -1981)    

‘அம­ர­ஜீ­வி­தம் அமு­த­வா­ச­கம்’ என்ற கண்­ண­தா­ச­னின் சமஸ்­கி­ரு­தப் பாடலை, ‘கிருஷ்­ண­கா­னம்’ என்ற பிர­பல பக்­திப் பாடல் தொகுப்­பில் எம்.எஸ்.வி. பாடி­னார்.  தனிப்­பா­டல் கேசட்­டு­க­ளில் எம்.எஸ்.வி. நிறைய பாடி­யி­ருக்­கி­றார். எம்.எஸ்.வி. இசை­ய­மைத்­துப் பாடிய, கவி­ஞர் தமிழ் நம்­பி­யின் முரு­கன் பாடல்­களை  கேட்­பது ஒரு பாக்­கி­யம். நான் எழு­திய பத்து கிருஷ்ண பக்­திப் பாடல்­களை இரண்டே மணி நேரத்­தில் எம்.எஸ்.வி. இசை­ய­மைத்­தார். அவர் பாடி வெளி­வந்த என்­னு­டைய ‘கிருஷ்­ணாம்­ரு­தம்’ ஒலிப்­பேழை பல­ரு­டைய நெஞ்சை உருக்­கி­யது.

‘பொன் பொருள் தேடி, பூமி­யில் மிக வாடி

செல்­வரை நாடி, தினம் தினம் திண்­டாடி

மூர்க்­க­ரைக் கூடி, அறி­ஞர் நீரென அவர் புகழ் பாடி, அவ­ல­மு­றா­மல்’ என்று நான் எழு­திய வரி­களை அனு­ப­வித்­துப் பாடி­னார் எம்.எஸ்.வி!

பொன்­னால் செய்த குரல்­க­ளும், வைரத்­தில் இழைத்த குரல்­க­ளும், தேனில் தோய்ந்த குரல்­க­ளும் உண்டு. இவற்­றின் மத்­தி­யிலே இத­யத்­தால் அமைந்து, உணர்­வில் தோய்ந்த குரல் எம்.எஸ்.வி.யுடை­யது.

பின்­னா­ளில், ஏ.ஆர். ரஹ்­மான் முத­லி­யோர் எம்.எஸ்.வி.யின் இந்­தக் குரல் மகி­மையை உணர்ந்து, தேவைப்­பட்­ட­போது அதைப் பயன்­ப­டுத்­தி­னார்­கள்.

(தொட­ரும்)