ராஞ்சியில் இந்தியா ‘பஞ்சர்’: கோஹ்லி சதம் வீண்

பதிவு செய்த நாள் : 08 மார்ச் 2019 22:21


ராஞ்சி:

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கவாஜா (104), கேப்டன் ஆரோன் பின்ச் (93) கைகொடுக்க ஆஸி., 32 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் கோஹ்லி அடித்த சதம் இந்த முறை வீணானது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2&0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இந்த போட்டியில் ஆஸி., வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மாறாக இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் முதல் முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கூல்டர் நைலுக்குப் பதில் ஜேய் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டார்.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு முற்றிலும் சாதகமாக இருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், கவாஜா ஜோடி மிகச் சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருந்தும் கவாஜா 17 ரன் எடுத்த போது ஜடேஜா பந்தில் கொடுத்த கேட்சை ஷிகர் தவான் கோட்டை விட்டார். இஐதப் பயன்படுத்திய கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே நேரம் துவக்கம் முதலே பின்ச் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 16.3 ஓவரில் ஆஸி., 100 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து பின்ச் 51 பந்தில் அரைசதம் அடித்தார். தன்பவங்கிற்கு கவாஜா 56 பந்தில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 193 ரன் (31.5 ஓவர்) சேர்த்த நிலையில், குல்தீப் ‘சுழலில்’ பின்ச் சிக்கினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவர் 93 ரன் (99 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த முறை 3வது வீரராக மேக்ஸ்வெல் களம் வந்தார். இவர் வழக்கமான ஆட்டத்தை விளையாட ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. அதே நேரம் எழுச்சியுடன் விளையாடிய கவாஜா ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். இவர் 107 பந்தில் சதம் விளாசினார். இவர் 104 ரன் (113 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில், முகமது ஷமி வேகத்தில் சரிந்தார். மேக்ஸ்வெல் (47) அரைசத வாய்ப்பை தவறவிட்டு பரிதாபமாக ரன் அவுட் ஆனார். குல்தீப் பந்தில் மார்ஷ் (7), ஹேண்ட்ஸ்கோம்ப் (0) வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஸடாய்னிஸ் (31), அலெக்ஸ் கேரி (21) அவுட்டாகாமல் கைகொடுக்க ஆஸி., 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் குல்தீப் 3, முகமது ஷமி 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தவான் (1), ரோகித் சர்மா (14) ஏமாற்றினர். அம்பதி ராயுடு (2) மீண்டும் வாய்ப்பை வீணடித்தார். பின் கோஹ்லியுடன் மண்ணின் மைந்தன் தோனி இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். தோனி 28 ரன் எடுத்த நிலையில், ஜாம்பா ‘சுழலி,’ கிளீன் போல்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த போதும் கேப்டன் கோஹ்லி தனிமனிதனாக போராடினார். இவர் 52 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு கேதர் ஜாதவ் சிறப்பான முறையில் கம்பெனி கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. நல்ல முறையில் சென்று கொண்டிருந்த போது ஜாம்பா பந்தை தேவை இல்லாமல் ஸ்வீவ் செய்த கேதர் ஜாதவ், எல்.பி.டபுள்யு., ஆனார்.

பொறுப்புடன் விளையாடிய கோஹ்லி ஒருநாள் போட்டியில் தனது 41வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இந்த தொடரில் இவர் பதிவு செய்யும் இரண்டாவது சதம் இதுவாகும். 26வது ஓவரில் இந்தியா 200 ரன் கடந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 123 ரன் (95 ரன், 16 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில், ஜாம்பா பந்தில் போல்டானார். 10 ஓவரில் 87 ரன் தேவைப்பட்டது. முக்கிய கட்டத்தில் விஜய் ஷங்கர் (32) வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதியானது. ஜடேஜா (24), முகமது ஷமி (8), குல்தீப் (10) வௌயேற இந்திய அணி 48.2 ஓவரில் 281 ரன்னுக்கு ஆட்டமிழந்து 32 ரன்னில் பரிதாபமாக தோற்றது. பும்ரா (0) வுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஜாம்பா தலா 3 விக்கெட் சாய்த்தனர். சதம் விளாசிய கவாஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆஸி., 1–2 என பின்தங்கியுள்ளது. நான்காவது போட்டி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நாளை நடக்க உள்ளது.

புல்வாமா தாக்குதல்: இந்திய வீரர்கள் உதவி

ராஞ்சி ஒருநாள் போட்டிக்கான சம்பளத்தை புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்கள் குடும்ப நிதிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வழங்கினர்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது, பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி தரும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது ராஞ்சி போட்டிக்கான சம்பளத்தை வழங்கினர். தவிர தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்போட்டியில் ராணுவ வீரர்கள் அணியும் வகையிலான பச்சை நிற தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்து களமிறங்கினர். இந்திய வீரர்களுக்கு தொப்பியை தோனி வழங்கினர்.