துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 19

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2019

வரலாறு போற்றும் வ.வே.சு. ஐயர்

தலை சிறந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரும் மிகச் சிறந்த இலக்கிய வாதியுமான வ.வேசு. ஐயர் என அறியப்படும் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் குறித்த வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றை இந்த வாரம் காண்போம்.

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த வேங்கடேச ஐயர், காமாட்சி அம்மாள் தம்பதியருக்கு 2.4.1881ல் மகனாகப் பிறந்தவர் வேங்கடேச சுப்பிரமணியம். மிகச்சிறந்த கல்விமானாகத் திகழ்ந்த இவர் 12ம் வயதிலேயே மெட்ரிகுலேசன் தேர்வு எழுதி மாநிலத்திலேயே 5ம் இடம் பெற்றுத் தேறினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 16ம் வயதில் பி.ஏ.பட்டத்தேர்வு எழுதி மாநிலத்தில் முதல் இடம் பெற்றுத் தேறினார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு பிளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.

தமது 19வது வயதில் வக்கீல் பட்டத்துடன் திருச்சிக்கு வந்து அங்கும் வக்கீலாக பணி புரிந்தார். இவருடைய மைத்துனர் பசுபதி ஐயர் உதவியுடன் ரங்கூன் வழியாக லண்டன் சென்ற வ.வே.சு. ஐயர் அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என விரும்பினார். லண்டன் இந்தியா ஹவுசில் இவர் தங்கி இருந்தபோது தான், சுதந்திர வேட்கை இவரது நெஞ்சில் குடிகொண்டது. அந்தக் கால கட்டத்தில், அங்கு (லண்டனில்) தங்கி இருந்த தீவிர தேசிய இயக்க வாதிகளான வீர சாவர்க்கர், ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாரீமாதர் சாவர்க்கர், டிஎஸ்எஸ்.ராஜன் போன்றவர்களின் நட்பு கிடைத்தது.

சாவர்க்கர் உள்ளிட்டோரோடு மிக நெருக்கமாக பழகி வந்த வ.வே.சு ஐயர் லண்டன் இந்தியா ஹவுஸில் ரகசியமாக செயல்பட்டு வந்த ‘அபி நவபாரத்’ சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். பிபின் சந்திரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா ஆகியோருடனும் நெருங்கிப் பழகிய ஐயர், அங்கிருந்தே தேச விடுதலைக்கான பயிற்சிகளை பெற்றார்.

இந்திய விடுதலைக்காக களமாடும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் பணியில் அபி நவபாரத் சங்கம் ஈடுபட்டிருந்தது. வ.வே.சு. ஐயரும் அங்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட ராணுவ வீரருக்கு உரிய பயிற்சிகளை கற்றுக்கொண்டார். இந்நிலையில், பாரிஸ்டர் படிப்பையும் முடித்து வெற்றிகரமாக பட்டமும் பெற்றார். லண்டன் மாநகரில் இருந்த காலத்திலேயே பாரதியார் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் தேசபக்திக் கட்டுரைகளை எழுதி அனுப்பி வந்தார்.

1909–ம் ஆண்டு இந்தியா ஹவுசில் தசரா பண்டிகை இந்திய தேசிய விழாவாக கொண்டாடப்பட்டபோது அதில் சிறப்பு விருந்தினராக காந்தி அடிகள் கலந்து கொண்டார். இந்த விழா முடிந்த ஒன்றிரண்டு மாதங்களில், பிரிட்டிஷ் அதிகாரியான ‘கர்னல் கர்ஸான் வைலீ’ என்பவரை இந்தியா ஹவுஸில் தங்கி இருந்த, இந்திய மாணவரான மதன்லால் திங்காரா என்பவர் சுட்டுக் கொலை செய்தார். இந்த வீரச் செயலுக்கு திங்காரவை தயார்படுத்தி பயிற்சி அளித்தவர் வ.வே.சு. ஐயர். இந்த படுகொலை தொடர்பாக வீர சாவர்க்கர் கைது செய்யப்பட்டார்.  இந்தியா ஹவுஸில் தங்கி இருந்த சுதந்திர தேச தீவிர தியாகிகள் பலர் தலைமறைவாகினர்.

பாரிஸ்டர் படிப்பை முடித்த ஐயர், அங்கு நடைபெறும் விழாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கான ராஜ விசுவாசப் பிரமானம் எடுத்தால் மட்டுமே பட்டம் கிடைக்கும் என்ற நிலையில், அதை மறுத்து எனக்கு பட்டமே வேண்டாம் என்ற துணிச்சலான முடிவெடுத்தார். இதனால் அவரை கைது செய்யுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. அப்போது வினாயக் தாமோதர் சாவர்க்கரை, ஐயர் சந்தித்தார். எப்படியாவது மாறு வேடத்தில் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விடு என அவர் ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி ஐயர், சீக்கியர் போல மாறுவேடம் பூண்டு பலரையும் ஏமாற்றி துருக்கி, கொழும்பு வழியாக இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய வ.வே.சு. ஐயர் 1910–ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்தார். அங்கிருந்த மகாகவி பாரதியார், மண்டயம் ஸ்ரீநிவாச்சாரியார், அரவிந்தகோஷ், நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா. போன்ற தீவிரவாத தேசபக்தர்களோடு இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடினார்.

புதுவையில் ‘தர்மாலயம்’ என்ற பெயரில் இல்லம் ஒன்றை அமைத்த வ.வே.சு. ஐயர், சுதந்திரப் போரில் தீவிர ஆர்வம் கொண்ட இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு குத்துச் சண்டை, சிலம்பம், குஸ்தி மற்றும் துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினார். தேர்ச்சி பெற்ற சில வீரர்களுக்கு கொரில்லா போர்ப் பயிற்சி முறைகளையும் இவர் கற்றுத்தந்தார்.

தலைமறைவாக இருக்கும் தேசப் போர் வீரர்கள் பரிமாறிக் கொள்வதற்கான பல சங்கேத பாஷைகளை இவர்தான் உருவாக்கியுள்ளார். நெல்லை காலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வீரவாஞ்சி நாதனுக்கு வ.வே.சு.ஐயர்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்துள்ளார். வாஞ்சிநாதன் பயன்படுத்திய பிரெஞ்ச் நாட்டுத் துப்பாக்கியை வ.வே.சு. ஐயர்தான் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆஷ் படுகொலைக்கு பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியவில்லை. ஐயர் மீது குறிப்பிடத்தக்க குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என்றாலும், பிரிட்டிஷ் உளவாளிகளால், அவருக்கும், அவரது மனைவி பாக்கியலட்சுமி அம்மாளுக்கும் பல துன்பங்கள் நேர்ந்தன. இதனால் மனம் வெறுத்துப் போன ஐயர், மகாத்மா காந்தியை சந்தித்து, தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

சுமார் 14 ஆண்டுகள் தீவிரவாதக் குழுக்களோடு இருந்து போராடிய வ.வேசு. ஐயர் 1920ம் ஆண்டில் பொது மன்னிப்பு பெற்று, தமது திருச்சி வரகனேரி இல்லத்திற்கு திரும்பினார். சுதந்திர தாகம் நெஞ்சில் கனன்று கொண்டே இருந்ததால் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு போராடினார். ‘தேச பக்தன்’ இதழிலிருந்து திரு.வி.கல்யாண சுந்தரனார் விலகியதும் அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற வ.வே.சு. ஐயர், சில காலம் சென்னையில் தங்கியிருந்து பத்திரிகைப் பணியை மேற்கொண்டார். ‘தேச பக்தன்’ இதழில் இவர் பல தேசபக்த கட்டுரைகளையும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வீரர்கள் உருவான விதம் குறித்த கட்டுரைகளையும் எழுதினார். இதனால், இவர் எழுதாத ஒரு கட்டுரையைக் காட்டி, ராஜ துவேச குற்றம் சாட்டி, கைது செய்த பிரிட்டிஷ் அரசு இவரை பெல்லாரி சிறையில் அடைத்தது.

தலித் சமுதாயத்தை சேர்ந்த ரா.கனகலிங்கம் என்பவருக்கு பாரதியார் பூனூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தியபோது அதற்கு வ.வே.சு. ஐயர்தான் தலைமை வகித்தார்.

1922ம் ஆண்டு சேரன்மாதேவி பகுதியில் ‘தமிழ்க் குருகுலம்’ என்ற கல்வி நிலையத்தையும், அதை நிர்வகிக்க பரத்வாஜ் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றையும் ஐயர் அமைத்தார், 1924ம் ஆண்டில் ‘பாலபாரதி’ என்ற இதழைத் தொடங்கினார்.

தமிழ்க் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நடத்தை விதிகளும், அறிவியலும், கலை, இலக்கியங்களும், உடல் வலிவு பயிற்சி முறைகளும் போதிக்கப்பட்டன.

மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான வ.வே.சு.ஐயர் இலக்கியப் புலமையிலும் மிகச்சிறந்து விளங்கினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

தமிழில் முதன் முதலில் வெளிவந்த ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்ற சிறுகதை தொகுப்பு வ.வே.சு. ஐயர் எழுதி வெளியிட்டது. கிரேக்கம், லத்தீன், பிரெஞ்ச், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் பாண்டித்யம் பெற்றவராக ஐயர் திகழ்ந்தார்.

மாஜினியின் சுயசரிதை, கரிபால்டியின் வரலாறு, ‘நெப்போலியனின் தன்னம்பிக்கை’, ‘கம்பராமாயணம் – ஓர் ஆராய்ச்சி’ என்பது உள்ளிட்ட பல நூல்களை எழுதிய வ.வே.சு ஐயர் ‘கம்ப நிலையம்’ எனும் பெயரில் நூல் விற்பனையகம் ஒன்றை நிறுவி பல நூல்களை வெளியிட்டார்.

1925ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி குருகுல மாணவர்களுடன், தமது மகள் சுபத்ரா, மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் அம்பா சமுத்திரத்திலுள்ள பாபநாசம் அருவிக்கு சென்ற வ.வே.சு.ஐயர், அருவியில் தவறி விழுந்த தமது மகளை காப்பாற்றுவதற்காக குதித்து அங்கேயே பரிதாபமாக, தமது 44–வது வயதில் உயிரிழந்தார்.