ராகு-கேது சர்ப்பதோஷம் நீக்கும் காளஹஸ்தி திருத்தலம்!

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019

காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி - சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: “வாயுதேவனே... நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்,”. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும், வாலாலும், கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.

வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும் கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

இங்கு காளத்திநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு (காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியன போன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.

கண்ணப்பர் வாய் கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு (விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. இது ராகு, கேது தலம் என்பதால் கோயிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே - அப்பிர தட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக் கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது. கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேஸ்வரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி  செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு ‘மணி கர்ணிகா கட்டம்’ என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விஸ்வநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது. அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச்  சாய்த்துக் கிடத்தினால் சாகிற பொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள். சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில்  நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.

ராகு, கேது, சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால  பிரச்னைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

* * *