கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 54

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019

 ‘படிக்காத மேதை’க்கு எடுப்பான பாடல்கள்!

‘பா’ வரிசைப் படங்கள் 1961ல் வந்து திரையிசையைப் புரட்டிப்போட்டன என்று சொல்வதுண்டு...ஆனால் அவற்றுக்கெல்லாம் ஓர் ஆண்டுக்கு முன்பே தன் இசையின் அற்புத கைவரிசையை ‘ப’ வரிசை கொள்ளும் ‘படிக்காத மேதை’யில் காட்டிவிட்டார் மகாதேவன்.

கண்ணதாசனின்  கவிமணம், மகாதேவனின் ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் தரத்தில் அசைக்கமுடியாத மெட்டு வாகனங்களில் ஏறி ஊரெங்கும் மணந்தது.

‘ஒரே ஒரு ஊரிலே’, ‘படித்ததனால் அறிவு பெற்றோர்’, ‘உண்மையைச் சொல்வேன்’ முதலிய பாடல்களில் ஒரு புதிய நாதத்தின் புறப்பாடு கேட்டது...ஒரு புதிய கவிஞர் தென்பட்டார், பாடல்களின் வாயிலாக தன்னுடைய அற்புதமான நடிப்பைக் காட்டுவதில் சிவாஜி இன்னும் கூடுதலாக மிளிர்ந்தார். மகாதேவனின் இசை மேதைமை புதிய காலத்திற்கு ஏற்ப புத்தொளி பெற்றது.  படத்தின் உயிர்நாடியான, பாரதியாரின் ‘எங்கிருந்தோ வந்தான்’ பாடலிலோ, திரையிசையின் ஒரு சிகரத்தையே தொட்டார் மகாதேவன். வரிக்கு வரி, சொற்களில் உள்ள உணர்ச்சிகளை இசையால் தீபமேற்றிக் காட்டுவதுபோன்ற பாணியை அவர் வெற்றிகரமாக மேற்கொண்டார்.

‘எங்கிருந்தோ வந்தான்’ பாடல் பிரதியை சீர்காழி கோவிந்தராஜனிடம் கொடுத்து, அது இடம்பெறும் உணர்ச்சிகரமான கட்டத்தை விளக்கினார்கள். பின்பு, மகாதேவனின் மெட்டை அவருடைய முன்னிலையில் சீர்காழிக்கு புகழேந்தி பாடிக் காட்டினார். ‘நண்பனாய்... மந்திரியாய்.... நல்ல ஆசிரியனுமாய்.... பண்பிலே தெய்வமாய்.... பார்வையிலே சேவகனாய்... ’ என்று வருகிறபோது, ஒவ்வொரு சொல்லையும் பிரித்துக் காட்டி, ஒவ்வொரு சொல்லுக்கும் வரவேண்டிய உணர்ச்சியை ‘மாமா’ கையை அசைத்துக் காட்ட, சீர்காழி கோவிந்தராஜன் பாடலை தனதாக்கிக் கொண்டார்.

ஒத்திகை பார்க்கும் போதெல்லாம், பாடலில் வரவேண்டிய உணர்ச்சிக்குத்தான் அழுத்தம் கொடுப்பார் மகாதேவன். திரைப்பாட்டில் உணர்ச்சிக்குத்தான் முதலிடம். அதுவும் ‘எங்கிருந்தோ வந்தான்’ போன்ற உயிர்நிலை பாடல்களோ, உணர்ச்சிப்பிழம்பாக இருக்க வேண்டும்.

நன்றாக ஒத்திகை பார்த்துவிட்டு, ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்தால், நாலு கட்டையில் வாத்தியங்கள் ஸ்ருதி சேர்க்கப்பட்டு பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது. தனக்கு சொல்லி கொடுத்தது இரண்டு கட்டையில் ஆயிற்றே என்று சீர்காழி யோசித்துக்கொண்டிருக்கும் போது, மகாதேவன் சொன்னார் - ‘‘கோவிந்து, கொஞ்ச அட்ஜஸ்ட் பண்ணி நாலுல பாடிடு. உன் சாரீரத்துக்கு நல்லா இருக்கும்... ஆர்கெஸ்டிராவும் நாலு ஸ்ருதிக்கு சவுண்டிங் நல்லா இருக்கு’’.

சரி, எப்படியும் ரெண்டு கட்டையிலே பயிற்சி பண்ணி, சங்கதிகள் எல்லாம் அழுத்தமா குரல்ல பதிஞ்சிருக்கு.... இப்போ நாலு கட்டையிலே பாடும் போது மேல் ஸ்தாயியில கொஞ்சம் ஸ்டிரைன் பண்ணாலும், பழகிப்போன உணர்ச்சி சரியா வெளிப்படும் என்று பாடினார் சீர்காழி.

பாட்டில் எத்தனை தரிசனங்கள்! ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’, என்கிற போது, பெற்ற பேறுக்கான நன்றி உணர்ச்சி ததும்பி நின்றது. ‘சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்...’ என்கிற போது, உடனே தாலாட்டின் திகட்டாத மணமும் அதன் தாள லயமும்  கமழ்கின்றன.

ரங்கனின் பன்முகப் பரிமாணங்கள் ஒவ்வொன்றாகக் கூறும் போது....படிப் படியாக அவன் ஆகிருதி உயர்ந்து, தெய்வ வடிவின் விஸ்ரூபமாய் வளர்ந்து நின்று, ‘பார்வையிலே சேவகனாய்’ என்பதில் தெய்வமே சேவகனாய் நிற்கும் திருக்கோலம் விளங்குகிறது. ‘அணோர் அணீயான் மகதோ மகீயான்’ என்று வேதம் கூறும், அணுவிற்கு அணுவாகவும் மிகப்பெரிய வஸ்துக்களை விட மிகப் பெரியதாகவும் பரம்பொருள் விளங்கும் என்பதன் விளக்கத்தை ஒரு திரைப்பாடலில் கண்டுவிடுகிறோம்.

கதைகள் கூறியே மக்களுக்கு நல்வழி காட்டிய பாரத நாட்டில், ‘ஒரே ஒரு ஊரிலே’ என்கிற ஒரே ஒரு கதைப்பாட்டு ஒரே ஒரு தத்துவக் காட்சியையா காட்டுகிறது? ஒரேஏஏஏஏ தத்துவ மயம்தானே இந்தப் பாடல்.

ஒன்பது பிள்ளைகளில் ஒன்றாவது உருப்படியாக அமையும் என்பதில்லை.....(திருதராட்டிரனுக்கு நூறும் ஊறுதானே செய்தன?)

பேதமைக்கு ஒரே வழி என்பதில்லை, நூறு வழிகள் உண்டு. -- படுக்கையில் முள்ளை வைத்து போற்றுவது முதல் பெண்டாட்டியின் திருவடிக்கு திருவிழா கொண்டாடுவது வரை!

குருதியால் வரும் சொந்தங்களைவிட, உள்ளத்து உறுதியால் வரும் சொந்தங்கள் சுடர்விட்டு ஒளிரும்!

இப்படி தொடர்ந்து வந்த சத்திய வார்த்தைகளையெல்லாம், பக்குவமாக அவற்றின் இடத்தில் வைத்து, பிள்ளைக்கு வாயில் அன்னம் ஊட்டுவதுபோல் என்னமாய் எடுத்து வைத்தார் மகாதேவன்!

அவர் வெறும் சங்கீத மேதை அல்ல...சங்கீதத்தின் மகத்துவத்தை அனைவரும் உணரும்படி, புதிய ஆத்திச்சூடிகளுக்கு நாத வாகனம் நல்கும் வள்ளன்மை பொருந்திய பெரும் சங்கீத மேதை!

‘படிக்காத மேதை’யிலே சிவாஜி கணேசன் தன்னை ஒரு நடிப்பு மேதையாக நிரூபித்தார்..வங்காள எழுத்தாளர் ஆஷாபூர்ணதேவியின் கதாபாத்திரத்தை அவர் நம் கண்முன்னே காட்டினார். இது ஏதோ யதேச்சையாக நடந்துவிட்ட சமாசாரம் அல்ல என்று கண்டு கொண்ட ஒரு வாரப்பத்திரிகை, அவர் எந்த அளவிற்கு சிந்தித்து இதை செய்திருப்பார் என்பதை, ‘சிவாஜியின் சாதுரியமான நடிப்பு’ என்று குறிப்பிட்டது. அத்தகைய நடிப்பிற்குத் துணையாக நின்றது எஸ்.வி. ரங்கா ராவ் வாழ்ந்து காட்டிய ராவ் பகதூர் சந்திரசேகரன் பாத்திரம். இத்தகைய உன்னதங்களுக்கு, தன்னுடைய இனிமையான, எளிமையான, ஆனால் ஆழமான இசையால் மகாதேவன் மகத்துவம் சேர்த்தார். ‘உள்ளதைச் சொல்வேன்’ என்று துள்ளி வரும் பாடல்,  ‘படிக்காத மேதை’யான ரங்கனின் அழைப்பு அட்டையாக அல்லவா தொனிக்கிறது!

கல்வியின் சிறப்பை குறள் விழுந்து விழுந்து கூறினாலும், ‘நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்று கோடிட்டுக் காட்டும் போது,  முறையான கல்வி முக்கியம் என்றாலும் உணர்வோடு கலந்த அறிவு அதைவிட முக்கியம் என்று விளங்கவில்லையா?

‘படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு’ என்று கண்ணதாசன் எழுதிச்சென்றது, தோற்றத்திற்கு முட்டாளாகத் தெரியும் ரங்கனை ஆசுவாசப்படுத்த அவனுடைய அன்பு மனைவி பாடுவதாக அமைந்தது. ஆனால், பாடம் படிப்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல் பொதுச்சேவை ஒன்றையே கற்ற அன்றைய முதல்வர் காமராஜரைக் குறிப்பதாகவும் மக்கள் கொண்டது, திரைப்பாடலுக்கு திரையைக் கடந்த பரிமாணம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது.

ஆழமான கதை, உன்னதமான கதாபாத்திரங்கள், உருக்கமான சம்பவங்கள் ஆகியவற்றுடன் உள்ளத்தைத் தொடும் பாடல்கள் இணையும் போது என்னதான் நடக்காது?

படத்திற்கு மகாதேவனை ஒப்பந்தம் செய்தால் இத்தகைய பாடல்களைத் தருவார் என்று தயாரிப்பாளர் கிருஷ்ணசாமியிடம் சிவாஜி தொடக்கத்திலேயே கூறிவிட்டார் என்பது, அவர் மகாதேவனைக்குறித்து மனதில் கொண்டிருந்த புரிதலைக் காட்டியது!

(தொடரும்)