பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது சரியா-? தவறா-? – ஜோதிடர் டாக்டர் என். ஞானரதம்

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019

பிள்ளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் சந்தேகம் என்னவென்றால் பிறந்த உடனேயே ஜாதகம் பார்ப்பது சரியா தவறா என்பதுதான். அவ்வாறு ஜாதகம் பார்ப்பதால் நன்மை விளையுமா அல்லது தீமை விளையுமா என்பதுதான் அவர்களின் சந்தேகம். ஒரு சில பெற்றோருக்கு வாய்க்கும் பிள்ளைகள் பிறந்த உடனேயே இறத்தல், ஓரிரு வயதில் இறப்பது இன்னும் ஒரு சிலருக்கு பத்து அல்லது பன்னிரன்டு வயதில் மரணத்தை தழுவுவது அல்லது இளம் வயதிலேயே தம் பிள்ளைகளை பெற்றோர் பறிகொடுப்பது போன்றவை நிகழ்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் பாலாரிஷ்டம் உள்ளது. அதனால்தான் தங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என ஜோதிடர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். மேலும், இதேப் போன்றுதான் குழந்தையின் ஜாதகத்தால்தான் தாய்மாமாவுக்கு ஆகவில்லை என்றும், தந்தைக்கு ஆகவில்லை  என்றும், அம்மாவுக்கு ஆகவில்லை என்றும் பலர் சொல்வதை கேட்டிருக்கின்றோம். இவை அத்தனைக்கும் உள்ள வினாவிற்கு இதோ இங்கேயே விடை இருக்கின்றது. பால என்பது குழந்தை பருவத்தை குறிக்கும் சொல். அரிஷ்டம் என்பது மரணம் என்ற பொருளை குறிப்பது. அதாவது குழந்தைகளுக்கு ஏற்படும் மரணத்தை குறிப்பதைத்தான் பாலாரிஷ்டம் என்பர். பால + அரிஷ்டம் என்பதுதான் பாலாரிஷ்டம் என்ற பெயர் பெற்றது.

பொதுவாக ஆயுளை அற்பாயுள் என்றும், மத்திம ஆயுள் என்றும், தீர்க்காயுள் என்றும் மூன்று வகையாக பிரிப்பர். அற்பாயுளின் ஆயுட் காலம் என்பது 33 வயதிற்குள் மரணத்தை தழுவது ஆகும். மத்திம ஆயுள் என்பது 55 வயதிற்குள் மரணத்தை தழுவது ஆகும். தீர்க்காயுள் என்பது 100 வயதிற்குள் மரணத்தை தழுவது ஆகும்.  இதில் இந்த பாலாரிஷ்டம் என்பது அற்பாயுளில் வரக்கூடியது. அற்பாயுளின் வருடங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அற்பத்தில் அற்பம் என்பது குழந்தை பிறந்த 12 வயதிற்குள் இறப்பதைத்தான் அற்பத்தில் அற்பம் என்பர். அற்பத்தில் மத்திமம் என்பது குழந்தை பிறந்த 22 வயதிற்குள் இறப்பதைத்தான் அற்பத்தில் மத்திமம் என்பர்.அற்பத்தில் தீர்க்கம் என்பது குழந்தை பிறந்த 33 வயதிற்குள் இறப்பதைத்தான் அற்பத்தில் தீர்க்கம் என்பர். மத்திமத்தில் அற்பம் என்பது 44 வயதிற்குள் இறப்பதைத்தான் மத்திமத்தில் அற்பம் என்பர். மத்திமத்தில் மத்திமம் என்பது 55 வயதிற்குள் இறப்பதைத்தான் மத்திமத்தில் மத்திமம் என்பர். மத்திமத்தில் தீர்க்கம் என்பது 66 வயதிற்குள் இறப்பதைத்தான் மத்திமத்தில் தீர்க்கம் என்பர். தீர்க்காயுளில் அற்பம் என்பது 77 வயதிற்குள் இறப்பதைத்தான் தீர்க்காயுளில் அற்பம் என்பர். தீர்க்காயுளில் மத்திமம் என்பது 88 வயதிற்குள் இறப்பதைத்தான் தீர்க்காயுளில் மத்திமம் என்பர். தீர்க்காயுளில் தீர்க்கம் என்பது 100 வயதிற்குள் இறப்பதைத்தான் தீர்க்காயுளில் தீர்க்கம் என்பர்.

பாலாரிஷ்டம் எவ்வகை ஆயுளுடன் சம்பந்தப்பட்டது?

முப்பத்தி மூன்று வயதிற்குள் இறப்பதை அற்பாயுள் என்று சொல்கிறோம். இதில் பிறந்தது முதல் பன்னிரண்டு வயதிற்குள் இறப்பதைத்தான் பாலாரிஷ்டம் என்பர். பாலாரிஷ்டம் இரு வகைப்படும். அவை: 1. சவும்ய பாலாரிஷ்டம், 2. சத்யோ பாலாரிஷ்டம் என்பதாகும்.

1. சவும்ய பாலாரிஷ்டம்: சவும்ய பாலாரிஷ்டம் என்பது குழந்தை பிறந்தவுடனேயோ அல்லது இரண்டு அல்லது மூன்றுமாதங்களிலேயோ அதாவது குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளோ இறப்பதைத்தான் சவும்ய பாலாரிஷ்டம் என்று அழைப்பர்.

2. சத்யோ பாலாரிஷ்டம்: சத்யோ பாலாரிஷ்டம் என்பது குழந்தை பிறந்த திசை முடிவதற்குள் இறப்பது சத்யோ பாலாரிஷ்டம் என்பர். அதாவது குழந்தை அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் கேது திசை நடக்கும். கேது திசை முடிவதற்குள் குழந்தை இறந்து விட்டால் சத்யோ பாலாரிஷ்டம் என்று பொருள்படும்.

அதாவது பாலாரிஷ்டம் என்பது ஆயுள் சம்பந்தமான விஷயத்தை குறிப்பது என்பதால் பிறந்த குழந்தையின் ஜாதகத்திலேயே அவர்களின் ஆயுள் விவரத்தை  அறிந்து கொள்ள முடியும். சில பெற்றோர் குழந்தை பிறந்த முதல் ஒரு வருடம் அல்லது குழந்தை பிறந்த முதல் ஐந்து வருடங்கள் வரை ஜாதகம் எழுதக் கூடாது என்றும், பார்க்கக்கூடாது என்றும் நினைத்துக் கொண்டு பார்க்காமல் விட்டுவிடுகின்றனர். அவர்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி எனலாம். காரணம் எப்படியென்றால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் மாமாவுக்கு ஏதேனும் தோஷம் உண்டா, அதனைத்தான் இவ்வாறு மாமாவுக்கு ஆகுமா என்றும், தந்தைக்கு ஆகுமா என்றும் தாயாருக்கு ஆகுமா என்றும், ஜோதிடரிடம் இவ்வாறான கேள்விகளை கேட்பதை நாம் கேட்டிருக்கின்றோம். ஆதலால்தான் பிறந்தவுடனேயே ஜாதகம் பார்க்கக்கூடாது என்று கூறுகிறார்கள். இவ்வாறு கேட்பது நன்மையல்ல. காரணம் குழந்தை பிறந்தவுடனேயே தகப்பனாருக்கு ஆகாத ஜாதகம் என்று ஜோதிடர் சொல்வி விட்டால் மனரீதியாக அந்த குழந்தையின் தந்தைக்கு அக்குழந்தை மேல் பாசத்திற்கு மாறாக வெறுப்பை அடையச்செய்யும். அதுவே குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்கு பின் ஜாதகம் பார்த்து தந்தைக்கு ஆகாது என்று சொன்னால் மனம் ஜோதிடர் சொல்வதை ஏற்காது. காரணம் நம்மைவிட தம் குழந்தையின் எதிர்காலத்தை மட்டும்தான் நினைத்து பார்ப்பர். ஏனென்றால், அந்த ஒரு வருடத்திற்குள் அனைவரும் அக்குழந்தையின் மீது அளவு கடந்த அன்பு வைத்து விடுகிறோம். அதனால் எந்த தோஷமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை நமக்கு வந்து விடுகிறது. எனவே குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் ஆயுளைப் பற்றி மட்டும்தான் ஜோதிடரிடம் கேட்க வேண்டும். குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் உள்ளதா என ஜோதிடரை பார்த்து விளக்கம் கேட்டு அதற்கான தகுந்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம் அல்லது மனதை திடப்படுத்திக் கொள்ளலாம்.

* * *