கடைசி ஓவரில் இந்தியா ‘திரில்’ வெற்றி: விராத் கோஹ்லி அசத்தல் சதம்

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2019 02:19


நாக்பூர்,:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போடடியில் கடைசி ஓவரில் விஜய் ஷங்கர் 2 விக்கெட் வீழ்த்த இந்தியா 8 ரன்னிலக் ‘திரில்’ வெற்றி பெற்றது. முன்னதாக வீராத் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். இந்த வெற்றியால் ஒருநாள் தரவரிசையில் இந்தியா ‘நம்பர்-1’ இடத்தைப் படித்து அசத்தியது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1&0 என முன்னிலை வகித்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. மீண்டும் ‘டாஸ்’ வென்ற ஆஸி., முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. ஆஸி., அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. பெஹ்ரன்டர்ப், டர்னர் இருவருக்கு பதில் ஷான் மார்ஷ், நாதன் லியான் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் ஜோடி துவக்கம் தந்தது. கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா ‘டக்&அவுட்’ ஆனார். பின் தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். முதல் போட்டியில் சொதப்பிய தவான், இந்த முறை தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அற்புதமாக நான்கு பவுண்டரிகள் விசினார். இருந்தும் இவர் 21 ரன் எடுத்த நிலையில், மேக்ஸ்வெல் பந்தில் எல்.பி.டபுள்யு., ஆனார். அடுத்து வந்த அம்பதி ராயுடு (18) ஏமாறினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய கோஹ்,யுடன் விஜய் ஷங்கர் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சரிவிலிருந்து இந்தியா மீளத்துவங்கியது. ஒருகட்டத்தில் இருவரும் பவுண்டரிகளாக விளாசி வந்தனர். 20.1 ஓவரில் இந்தியா 100 ரன் எடுத்தது.

அதிரடியாக விளையாடி வந்த கோஹ்லி 55 பந்தில் அரைசதம் அடித்தார். எதிர்முனையில் விஜய் சங்கர் அனாயசமாக விளையாடி தனது தேர்வை நியாயப்படுத்தினார். எதிர்பாராத விதமாக விஜய் ஷங்கர் 46 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பரிதாபமாக ரன் அவுட் ஆனார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. ஆட்டத்தின் 33வது ஓவரை ஜாம்பா வீசினார். இந்த ஓவரில் கடந்த போட்டியின் கதாநாயகர்களான கேதர் ஜாதவ் (11), தோனி (0) அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜாம்பாவுக்கு ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ஜடேஜா நிராகரித்தார்.

ஒருமுனயில் விக்கெட்டுகள் சரிந்து வந்த போதும் கோஹ்லி, தொடர்ந்து அசத்தலாக விளையாடி வந்தார். இவருக்கு தடுமாற்றத்துடன் விளையாடி வந்த ஜடேஜா ஓரளவுக்கு கம்பெனி கொடுத்தார். எழுச்சியுடன் விளையாடிய கோஹ்லி, ஒருநாள் போட்டியில் தனது 40வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 107 பந்தில் சதம் விளாசினார். நல்ல முறையில் சென்று கொண்டிருந்த நிலையில் கம்மின்ஸ் பந்தை தேவை இல்லாமல் தூக்கி அடித்து ஜடேஜா (21) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய கம்மின்ஸ் கோஹ்லி விக்கெட்டையும் வீழ்த்தினார். கோஹ்லி 116 ரன் (120 பந்து, 10 பவுண்டரி) எடுத்தார். குல்தீப் (3) ரன் எடுத்தார். கடைசியாக கூல்டர் நைல் பந்தில் பும்ரா (0) போல்டாக இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. முகமது ஷமி (2) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் கம்மின்ஸ் 4, ஜாம்பா 2 விக்கெட் சாய்த்தனர்.

எளிதான இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், கவாஜா இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்திய பந்து வீச்சை அடித்து நொறுக்கி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த நிலையில், குலதீப் ‘சுழலில்’ ஆரோன் பின்ச் (37) சிக்கினார். இவரைத் தொடர்ந்து கவாஜா (38) வெளியேறினார். ஜடேஜா பந்தில் மார்ஷ் (16) நடையை கட்டினார். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் (4) குல்தீப் பந்தில் கிளீன் போல்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஹேண்ட்ஸ்கோம்ப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு ஸ்டாய்னிஸ் கம்பெனி கொடுத்தார்.

அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஹேண்ட்ஸ்கோம்ப் (48) ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். குல்தீப் ‘சுழலில்’ அலெக்ஸ் கேரி (22) நடையை கட்ட ஆட்டம் பரபரப்பானது. இருந்தும் ஒருமுனையில் ஸ்டாய்னிஸ் பொறுப்புடன் விளையாடி வந்தார். 5 ஓவரில் 29 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் அபாரமாக பந்து வீசிய பும்ரா ஓரே ஓவரில் கூல்டர் நைல் (5), கம்மின்ஸ் (0) விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் இந்தியா வசம் வந்தது. பரபரப்பான இந்த நேரத்தில் ஸ்டாய்னிஸ், நாதன் லியான் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். கடைசி ஓவரில் 11 ரன் தேவை என்ற நிலையில், நட்சத்திர பவுலர்கள் அனைவரும் 10 ஓவர்கள் வீசிய நிலையில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் 52 ரன் (65 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து எல்.பி.டபுள்யு., ஆனார். கடைசி வீரராக களம் வந்த ஜாம்பா, 2வது பந்தில் 2 ரன் எடுத்தார். 4 பந்தில் 9 ரன் தேவை என்ற நிலையில், 3வது பந்தை ஷங்கர் யார்க்கராக வீச ஜாம்பா (2) கிளீன் போல்டானார். இதையடுத்து இந்தியா 8 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாதன் லியான் (6) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் குல்தீப் 3, பும்ரா, விஜய் சங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக விராத் கோஹ்லி தேர்வானார். தவிர இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தரவரிசையில் இந்தியா 124 புள்ளிகளுடன் ‘நம்பர்&1’ இடத்தைப் பிடித்து அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 2&0 என முன்னிலை வகிக்கிறது. 3வது போட்டி ராஷ்சியில் வரும் 8ம் தேதி நடக்க உள்ளது.

முடிஞ்சா பிடி... தோனி ஜாலி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தோனி கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து பீல்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கிய போது, பாதுகாவலர்களுக்கு 'அல்வா' கொடுத்த ரசிகர் ஒருவர், மைதானத்திற்குள் புகுந்தார். தோனியை நோக்கி அந்த நபர் வர, தோனியும் விளையாட்டாக ஓட துவங்கினார். இதனை இந்திய அணியின் வீரர்கள் சிரித்த படி ரசிக்க, ஒரே முறை எனக்கூறி கடைசியில் தோனியை கட்டியணைத்தார். பின்னர் பாதுகாவலர்கள் வந்து அந்த ரசிகரை பிடித்துச் சென்றனர். இதை மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்தனர். இந்த போட்டியில் இந்தியா 8 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது.