சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா: 10 ஆயிரம் கலைஞர்கள் நடனம் உலக சாதனை

பதிவு செய்த நாள் : 03 மார்ச் 2019 12:43

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோயிலில், பத்தாயிரம் நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி விழா கின்னஸ் சாதனையாக இடம்பிடித்தது.

மார்ச் 4, 2019 சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும்.

அந்த வகையில் 10,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் நாட்டியமாடி நடராஜருக்கு அஞ்சலி செலுத்தும் விழா இன்று காலை தொடங்கியது.

கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த நாட்டியாஞ்சலியில், நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆயிரங்கால் மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகாரத்தில் 10,000 பேரும் திரண்டு ஒரே நேரத்தில் நாட்டியமாடினர். 20 நிமிடங்களுக்கும் மேலாக நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

இதை பதிவு செய்வதற்காக லண்டனைச் சேர்ந்த கின்னஸ் குழுவினர் வந்திருந்தனர். விழா முடிவடைந்த பின்னர், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவை விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே சிவராத்திரியை முன்னிட்டு நாளை தொடங்கி எட்டாம் தேதி வரை 5 நாட்கள் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்களது நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணிக்கவுள்ளனர்.