உலக இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டுக்கு சுஷ்மாவுக்கு சிறப்பு அழைப்பு

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2019 18:27

புதுடில்லி,

உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசி (Organisation of Islamic Cooperation) அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் கவுரவ விருந்தினராக  கலந்துகொள்ள முதல்முறையாக இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


ஓஐசி அழைப்பை ஏற்று இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க கடந்த 1969-ம் ஆண்டு இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்பட்டது.  இந்த அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் 46-வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு வரும் மார்ச் மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் அபுதாபியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கவுரவ விருந்தினராகவும் பார்வையாளராகவும் பங்கேற்க முதன்முதலாக இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ள இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு முதன்முறையாக இந்தியாவுக்கு தற்போது அழைப்பு அனுப்பியுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை முன்னிட்டு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக எடுத்துவரும் நிலையில் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் 

‘‘இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்ற வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜயத் அல் நாஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்’’

‘‘இந்த அழைப்பு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே உள்ள நட்புறவுக்கான முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள 18.5 கோடி இஸ்லாமிய மக்களுக்கும் இஸ்லாமிய உலகிற்கு அவர்கள் அளித்த பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் கவுரமாகவும் இதை பார்க்கிறோம். இந்த அழைப்பை இந்தியா மகிழ்ச்சியுடன் ஏற்றுகொண்டுள்ளது’’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.