அரசுக்கு சொந்தமான 97 எண்ணெய் வயல்களை தனியாருக்கு விற்க மத்திய அரசு ஏற்பாடு

பதிவு செய்த நாள் : 18 பிப்ரவரி 2019 20:30

புதுடில்லி,

அரசுக்கு சொந்தமான 97 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அகில் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியூசி) அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் தருவாயில், இதுபோன்ற திட்டங்களை பற்றி விவாதிக்க மக்களவை கூட்டம் நடப்பதற்கான வாய்ப்பில்லாத நிலையில் மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுப்பது ஏற்புடையதல்ல என்று ஏஐடியூசி அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து ஏஐடியூசி வெளியிட்ட அறிக்கையின் விவரம் :

ஓஎன்ஜிசி மற்றும் ஓஐஎல் (ONGC and OIL) கண்டுபிடித்த 97 சிறிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை தனியார் காப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் வர்த்தகத்துறை, பெட்ரோலியத்துறை, நிலக்கரித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான இந்த திட்டம் நிதி ஆயோக் தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தின் பரிசீலிக்கப்பட்டு பின் அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான பெரிய எண்ணெய் வயல்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு எண்ணெய் கிடைக்காத பட்சத்தில் அவற்றையும் தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு எண்ணெய் வயல்களை வாங்கும் தனியார் நிறுவனங்களிடம் அந்த எண்ணெய் வயல்களை கண்டுபிடித்தது மற்றும் மேம்படுத்தியதற்கான செலவுகளை பெறக்கூடாது என்று நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

அரசுக்கு சொந்தமான எண்ணெய் வயல்களை தனியாருக்கு விற்க கூடாது என்று அரசு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்று அரசு நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மோடி அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்துவது நியாயமல்ல. இந்த திட்டம் குறித்து விவாதிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ தடுக்கவோ மக்களவை கூட்டம் நடைபெற போவதில்லை. பாஜகவின்5 ஆண்டுகால ஆட்சியின் முடிவில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பிரதமர் மோடி அளிக்கும் பரிசு இது என்று அனைத்திந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் சாடியுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி இந்திய மக்களுக்கும் பெட்ரோல் நிறுவனங்களின் ஊழியர் சங்கங்களுக்கும் ஏஐடியூசி அழைப்பு விடுத்துள்ளது.