சவுதி அரேபியாவில் இந்திய முதலீட்டுக்கு உதவும் நிறுவனம் அமைப்பு

பதிவு செய்த நாள் : 18 பிப்ரவரி 2019 19:44

புதுடெல்லி

சவுதி அரேபியாவில் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு உதவ நிரந்தர முதலீட்டு உதவும் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 16, 17, 18, ஆகிய மூன்று நாட்களில் நிதி ஆயோக் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த்  தலைமையில் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சு வார்த்தயின் போது முதலீட்டு உதவி நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு பிப்ரவரி 19 20 ஆகிய இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்வதற்கு முன் இந்திய அதிகாரிகள் குழு சவுதி அரேபியாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை குழுவில் இந்திய தூதர் அகமது ஜாவீதும் கலந்து கொண்டார்.

இந்திய அதிகாரிகள் ஆறு சிறு குழுக்களாக பிரிந்து சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது சவுதி அரேபியாவில் நிரந்தரமாக இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு உதவி செய்வதற்காக அலுவலகம் ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்த அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் குழுவொன்று நிரந்தரமாக இருக்கும். சவுதி அரேபியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு இக்குழுவினர்  உதவுவார்கள்.

இது தவிர இந்தியாவில் 40 முதலீட்டு முடிவுகள் பேச்சுவார்த்தைகளின்போது எட்டப்பட்டதாக நிதி ஆயோக் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எவ்வளவு முதலீடு கிடைக்கும் என்று தெரிவிக்கவில்லை.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 2324 கோடி டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகம் நடந்ததாக நிதி ஆயோக் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது