மத்திய அரசின் திட்டங்கள் வாய் பேச்சுக்காக தொடங்கப்பட்டவை: சீதாராம் யெச்சூரி விமர்சனம்

பதிவு செய்த நாள் : 18 பிப்ரவரி 2019 19:26

புதுடில்லி

மேக் இன் இந்தியா உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் வெறும் வாய் பேச்சுக்காக தொடங்கப்பட்ட திட்டங்கள் என மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக சாடினார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்னும் இந்தியாவின் அதிவேக ரயில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் டில்லி-வாரணாசி இடையில் சேவையை தொடங்கியது. தன் முதல் பயணத்தில் வாரணாசியில் இருந்து டில்லி திரும்பிய அந்த ரயில் பழுதாகி நின்றது. இந்த சம்பவம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தீனியாக அமைந்தது.

இந்நிலையில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மோடியின் திட்டங்களை விமர்சித்துள்ளார். சீதாராம் யெச்சூரி டுவிட்டரில்,”மோடியின் ”மே இன் இந்தியா” திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் வெறும் வாய் பேச்சுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய உற்பத்தி துறையில் முதலீடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவை கடந்த 5 ஆண்டுகளாக சரிந்துகொண்டே வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

“விவசாயம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, வருவாய் வளர்ச்சி ஆகியவை இந்த அரசின்கீழ் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்திய மக்களுக்கு தேவைப்படும் இந்த அனைத்தும் மோடி அரசில் குறைந்துகொண்டே செல்கின்றன. நம் நாட்டில் அதிகரிப்பது ஒன்றே ஒன்றுதான். மோடியின் பொய்யான வாக்குறுதிகள், வாய் பேச்சுகள் தான்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

”இந்த அரசின் நண்பர்களாக உள்ள 12 தொழிலதிபர்கள், பொதுமக்களின் பணத்தை வைத்துள்ளனர். ஒட்டுமொத்த விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் தொகையின் இரட்டிப்பான தொகையை அவர்கள் அபகரித்துள்ளனர். 3 லட்சம் கோடி அளவிலான பணத்தை தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்வதில் மோடி மகிழ்ச்சியடைவார். ஆனால், கடும் நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்கு எதுவும் செய்ய முன்வரவில்லை” என்று சீதாராம் யெச்சூரி சாடினார்.