பணமும் சொர்க்கமும் கிடைக்க சாரங்கபாணி கோயிலுக்கு போங்க!

பதிவு செய்த நாள் : 19 பிப்ரவரி 2019

பணமும் வேண்டும், சொர்க்கமும் வேண்டும் என்பது பலரது விருப்பம். இந்த இரண்டையும் தரும் வகையில், திருப்பதி வெங்கடாஜலபதியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் இணைந்த வடிவமான சாரங்கபாணியை மாசிமகத்தன்று தரிசிக்க நன்மை கிடைக்கும்.

தல வரலாறு: ஒரு முறை மகாலட்சுமியின் கோபத்திற்கு பெருமாள் ஆளானார். அவளுக்கு பயந்தது போல் நடித்து (திருப்பதி) திருமலையிலிருந்து இங்கு வந்து ஒரு புதரில் ஒளிந்திருந்தார். கணவரைக் காணாமல் வருத்தமடைந்த தாயார் வெகுகாலம் தவமிருந்தார். பின் வைகுண்டம் சென்ற பெருமாள், ஒரு ரதத்தில் ஏறி கும்பகோணம் வந்து தாயாரைத் திருமணம் செய்து கொண்டார். எனவேதான் இந்த கோயில் ரத வடிவில் அமைந்துள்ளது. குதிரைகள், யானைகள் ரதத்தை இழுப்பது போன்று மூலஸ்தானம் உள்ளது.

தல சிறப்பு: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறை முன் சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியத்திற்கும், நினைத்தது நடக்கவும் இவரை வணங்குகின்றனர். தாயார் கோமளவல்லியை வணங்கிய பின்தான் பெருமாளை வணங்க வேண்டும். பெருமாள் சயன நிலையில் கண்ணயர்ந்து உள்ளார்.

இங்குள்ள உத்தராயண மற்றும் தட்சிணாயண வாசல்களைக் கடந்தாலே சொர்க்கம் நிச்சயம். இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது. பெருமாள் தன் கையில் 'சார்ங்கம்' என்ற வில் வைத்திருக்கிறார். இவரை 'சார்ங்கபாணி' என அழைக்க, மருவி 'சாரங்கபாணி' ஆனார். சார்ங்கபாணி என்றால் 'வில்லை ஏந்தியவர்' எனப்பொருள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், திருப்பதி வெங்கடாஜலபதியும் இணைந்து சாரங்கபாணியாக அருள்வதாக ஐதீகம்.

கோயில் அமைப்பு: ராஜகோபுரம் 164 அடி உயரம் உடையது. மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மாவும், தலைப்பகுதியில் சூரியனும் உள்ளனர்.

கருணைக்கடல்: சாரங்கபாணிக்கு பக்தர்கள் மீது மிகுந்த அன்பு உண்டு. லட்சுமி நாராயணசாமி என்பவர் தன் சிறுவயது முதல் இந்தக் கோயிலுக்கு சேவை செய்து வந்தார். பெருமாளுக்கு கோபுரம் கட்டினார். நிலபுலன்களை கொடுத்தார். தன்னை தந்தையாகவும், பெருமாளை மகனாகவும் நினைத்து, ஒரு மகனுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார். ஒரு நாள் அவர் பெருமாளின் திருவடி சேர்ந்தார். அவருக்கு உறவினர் இல்லாததால், எங்கிருந்தோ வந்த ஒருவர், இறுதி காரியத்தை செய்தார்.

இது நடந்த மறுநாள் கோயிலைத் திறந்து பார்த்த போது, பெருமாள் ஈர வேட்டியுடனும், மாற்றிய பூணுாலுடனும், தர்ப்பையுடனும் ஈமக்கிரியை செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன் பக்தனுக்கு ஈமக்கிரியை செய்து, கருணைக்கடலாக விளங்கினார்.

இருப்பிடம்: கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ.,

விசேஷ நாட்கள்: சித்திரை பிரம்மோற்சவம், தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி.

நேரம் : காலை 7.00 –- 12.00 மணி; மாலை 4.30 –- 9.00 மணி அருகிலுள்ள தலம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்.