வாசனைப்பிரியர்!

பதிவு செய்த நாள் : 19 பிப்ரவரி 2019

அமிர்தம் கலந்த மண்ணால் ஆனதால் கும்பேஸ்வரர் அமிர்தம் போல குளிர்ச்சி மிக்கவராக இருக்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. பவுர்ணமியன்று மட்டும் புனுகுச்சட்டம் சாத்தி வழிபடுவர். புனுகுவின் நறுமணம் கும்பேஸ்வரருக்கு மிகவும் பிடிக்கும்.


மங்கலமும் மந்திரமும்!

சக்திபீடங்களில் மங்கல பீடம், மந்திர பீடம் என கும்பகோணம் அழைக்கப்படுகிறது. 'மங்கலம்' என்றால் 'ஆக்குவது'. 'மந்திரம்' என்றால் 'காப்பது'. ஆக்குபவளும் அவளே, காப்பவளும் அவளே. இந்த அம்பிகையை வழிபட்டால் ஆக்கும் சக்தியும், ஆக்கியதைப் பாதுகாக்கும் திறனும் உண்டாகும்.


பிள்ளையாருக்கு ரசம், துவையல்!

பிள்ளையாருக்கு மோதகம்தான் இஷ்டம். ஆனால், கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் உள்ள ஜூரஹர விநாயகருக்கு சாதம், ரசம், பருப்புத் துவையல் ஆகியவற்றை நிவேதனம் செய்கின்றனர். இவருக்கு 'ஜூரஹர விநாயகர்' என்று பெயர். இருதய நோய், ஆஸ்துமா, அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் கொண்டவர்கள் இவற்றை நிவேதனம் செய்து இவரிடம் நிவாரணம் வேண்டுகின்றனர்.


ஒரு கால் தரையில், ஒரு கை தலையில்!

கும்பகோணம்- வலங்கைமான் சாலையில் 9 கி.மீ., தொலைவில் சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள அமிர்தவல்லி அம்பாள் ஒரு காலை உயர்த்தி, இன்னொரு காலை தரையில் ஊன்றி, ஒரு கையை தலையில் வைத்து தவம் செய்யும் கோலத்தில் அருள் செய்கிறாள். இவளுக்கு 'தபசு அம்மன்' என்றும் பெயருண்டு.