முப்பெரும் தெய்வங்கள்!

பதிவு செய்த நாள் : 19 பிப்ரவரி 2019

கும்பகோணத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன், ஆதி காமாட்சி அம்மன், படவெட்டி மாரியம்மன் கோயில்கள் பிரசித்தமானவை. பெண்கள் இவர்களை, தங்கள் காவல் தெய்வங்களாக கருதுகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயில்களில் அதிக கூட்டம் இருக்கும்.


குற்றவாளிக்கு ராஜமரியாதை!

திருச்சூர்- – எர்ணாகுளம் சாலையில் 11 கி.மீ., துாரத்தில் திருக்கூர் சிவன் கோயில் உள்ளது. இதை 'வழுக்குப்பாறை சிவன் கோயில்' என்பர். இக்கோயிலின் வடக்கு வாசலில் உள்ள பெரிய பாதாளத்தில், குற்றவாளிகளை தள்ளி கொல்லும் வழக்கம், திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் இருந்தது. யாராவது அதில் தள்ளப்பட்டும் தப்பிவிட்டால், அவரை சிவனே மன்னித்ததாக கருதி, ராஜ உபசாரம் செய்வர். அரசு செலவிலேயே வைத்தியம் செய்து, மானியமாக நிலம் வழங்கப்படும். பரமேஸ்வரனாக அவர் மதிக்கப்படுவார்.


பைரவருக்கு நாய் வாகனம் ஏன்?

சோமாசிமாற நாயனார் செய்த யாகத்திற்கு, சிவன் நான்கு நாய்களை அழைத்து வந்தார். அந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாகும். சிவ அம்சமான பைரவருக்கு, நாய் வாகனமும், காவல் தெய்வங்களுக்கு 'வேட்டை நாய்' வாகனமும் உள்ளன. எவ்வளவுதான் அடித்தாலும், நாய் தன்னை வளர்த்தவனை விட்டுப் பிரிவதில்லை. அதே நேரம், தனது எஜமானனுக்கு துன்பம் நேர்ந்தால் எதிரியை மிரட்டவும் தயங்குவதில்லை. மனிதன் நன்றியுள்ளவனாகவும், பிறருக்கு துன்பம் வரும் நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவனாகவும் இருக்க வேண்டும் என கருதியே, பைரவருக்கும், காவல் தெய்வங்களுக்கும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. குழந்தை இல்லாதவர்கள், சிறிய நாய் வாகனம் வாங்கி வைப்பதாக பைரவரிடம் வேண்டிக் கொள்வதுண்டு.