தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள் : 18 பிப்ரவரி 2019 11:30

புதுடில்லி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018, மே மாதம் 22ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களின் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்தது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. பின்னர், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஆலையை திறக்க அனுமதி மறுப்பு

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு ஆணை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.