துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 16

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2019

காந்திய பக்தர் குமாரசாமி ராஜா

மொழிவாரி மாகாணங்கள் பிரிவதற்கு முன்பு 1949ம் ஆண்டு முதல் 1952ம் ஆண்டு வரையிலும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பொறுப்பு வகித்த வரும், விடுதலைப் போராட்ட வீரருமான பி.எஸ். குமாரசாமிராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த சில முக்கிய நிகழ்வுகளை காண்போம்.

இன்றைய விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் பூசாபதி சஞ்சீவி ராஜாவின் மகனாக 1898ம் ஆண்டு பிறந்தவர் பூசாபதி சஞ்சீவி குமாரசாமிராஜா எனும் பி.எஸ்.குமாரசாமி.

15ம் நூற்றாண்டில், ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்த ராஜுக்கள் எனும் பிரிவைச் சேர்ந்தவர் இவர். குமாரசாமி பிறந்த ஒரு வார காலத்திலேயே அவரது தாயார் மரணமடைந்து விட்டார்.

மூன்று வயதிருக்கும் போது தந்தையார் சஞ்சீவி ராஜாவும் காலமாகிவிட்டார். தமது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த, செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த குமாரசாமி பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்து சமூக சேவையிலும் விடுதலை போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இளம் வயதிலேயே கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகரசபை நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட பணியாற்றினார்.

பிரபலமான சுதந்திர போராட்ட தியாகியான தீரர் சத்தியமூர்த்தி, ‘ஹோம்ரூல்’ இயக்க நிர்வாகி அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட குமாரசாமி அவர்களோடு இணைந்து சுதந்திரப் போராட்டங்களில், பொதுநலச் சேவைகளில் ஈடுபட்டார்.

1919ம் ஆண்டில் அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை சந்தித்த பிறகு அவர்மீது அளவற்ற மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட குமாரசாமி, தீவிர தேசபக்தராக மாறிப்போனார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

 காந்திய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் பல பொதுக்காரியங்களில், நற்செயலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இரட்டை ஆட்சிமுறை அமலில் இருந்த காலகட்டத்தில் 1934ம் ஆண்டில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் சார்பாக சென்னை மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில் இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949ம் ஆண்டில் சென்னை மகாணத்தின் முதல்வர் (அப்போது பிரதமர் என அழைக்கப்பட்டது) ஆந்திர கேசரி டி.பிரகாசம், மற்றும் ராஜாஜி ஆகியோர் இடையே போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் கட்சி குமாரசாமி ராஜாவை முன்னிலைப்படுத்தியது.

அதனடிப்படையல், பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதல்வர் பொறுப்பை 1949–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஏற்று, 1952ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிறப்பாக செயல்பட்டார்.

குமாரசாமி ராஜா ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  பலர் தலைமறைவானார்கள் (தோழர் ஜீவா என்ற ஜீவானந்தம், இன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு போன்றோர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.)

சுதந்திரத்திற்கு பிறகு 1952–ம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

உடனே, அன்றைய இந்தியப் பிரதமர், தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்களில்  ஒருவரான காமராஜருடன் ஆலோசனை கலந்து, ராஜாஜியை முதலமைச்சராக அறிவித்தார்.

ராஜாஜியும், அன்றைய தினம் கணிசமான எம்.எல்.ஏக்களை வைத்திருந்த உழவர் உழைப்பாளர் கட்சி, காமன் வீல் பார்ட்டி உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

மாணிக்கவேல் நாயக்கர், ராமசாமி படையாச்சியர் உள்ளிட்டோர் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

1952 வரையிலும் முதலமைச்சர் பொறுப்பு வகித்த குமாரசாமி ராஜாவை ஒரிசா மாநில கவர்னராக நியமித்தனர்.

தமிழ்நாட்டில் குமாரசாமி ராஜா ஆட்சிக் காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆலயப் பிரவேசம் சட்ட பூர்வமானது. கதர், கைத்தறி ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பூரண மதுவிலக்கும் அமலில் இருந்தது. மிகச் சிக்கலான காலகட்டத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்தாலும், அவற்றை எல்லாம் திறம்பட கையாண்டு சிறந்த ஆட்சி நிர்வாகத்தை குமாரசாமி ராஜா வழங்கியதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

காந்திஜி மீதும், அவரது அகிம்சை கொள்கை மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த குமாரசாமி ராஜா, தனக்கு சொந்தமான பிரமாண்டமான வீட்டை ‘‘காந்தி கலை மன்றம்’’ என்ற அமைப்புக்கு தானமாக அளித்தார்.

ராஜபாளையம் உள்ளிட்ட தென்பகுதி களில் ஆலைகள், கல்வி நிறுவனங்களை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியவர் குமாரசாமிராஜா.

இவரது நினைவை போற்றும் வகையில் மத்திய அரசாங்கம் குமாரசாமி ராஜா உருவம் பொறுத்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

ராஜபாளையம் நகர பேருந்து நிலையத்திற்கும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், அதைச் சுற்றியுள்ள நகருக்கும் குமாரசாமிராஜா பெயர் சூட்டப்பட்டள்ளது.

செல்வச்செழிப்பில் திளைத்த குமாரசாமி ராஜா போன்றோரும் இந்திய சுதந்திரத்திற்காக மட்டும் அல்லாது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுள்ளார்கள் என்பதை அறியும்போது இத்தகைய சான்றோர்களை, தியாகிகளை போற்றுவது நம் கடமை.