அமெரிக்காவில் மீண்டும் அரசு நிர்வாகம் முடங்காமல் தடுக்க இரு கட்சிகள் இடையே உடன்படிக்கை

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 20:54

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இந்த வாரம் இறுதியில் மீண்டும் அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அரசு துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கும் மசோதாக்களுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒப்புதல் அளித்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் கடத்தல்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் பலமான சுவர் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

அதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி கடந்த ஆண்டு நாடாளுமன்றத்திடம் அதிபர் டிரம்ப் கோரினார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. அதன் காரணமாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளம் இன்றி தவித்தனர்.

முப்பது நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த அரசு நிர்வாக முடக்கம் பின் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக உடன்படிக்கையால் இந்த நிர்வாக முடக்கம் முடிவுக்கு வந்தது.

ஆனால் வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே புதிய உடன்படிக்கை ஏற்படாவிட்டால் இந்த வாரம் இறுதியில் மீண்டும் அரசு நிர்வாக முடக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து திங்கள்கிழமை ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பிக்கள் அரசு துறைகளுக்கு நிதி அளிக்கும் மசோதாக்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே சுமூக முடிவு எடுக்கப்பட்டதால் மீண்டும் அரசு நிர்வாகம் முடங்கும் அபாயம் தடுக்கப்பட்டது. பிப்ரவரி 15ம் தேதிக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தில்  அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த புதிய தீர்மானத்தில் டிரம்ப் கேட்ட எல்லை சுவருக்கான நிதியாக 100 கோடி டாலர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டிரம்ப் கேட்ட 570 கோடி டாலருக்கு இது மிகக் குறைவு.

இந்த புதிய உடன்படிக்கை குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தும் வெளியிடவில்லை.