ராஜீவ் சக்சேனாவுக்கு பிரப்வரி 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்: டில்லி நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 20:53

புதுடில்லி,

  அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதாகியுள்ள துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவை வரும் பிப்ரவரி 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி டில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராஜீவ் சக்சேனாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லும்படி திகார் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் இன்று உத்தரவிட்டார்.
மேலும் அவருக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகளை உடன் வைத்துக்கொள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அவரது உடல்நலன் குறித்த அறிக்கையை புதன்கிழமை மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனருக்கு நீதிபதி ஆணையிட்டார்.

ராஜீவ் சக்சேனாவின் உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததால் அவர் அதிகாலை 1 மணிக்கு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான அகஸ்தா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் மோசடி வழக்கில் குற்றம்சாட்ட ராஜீவ் சம்ஷெர் பஹதுர் சக்சேனா இந்திய அரசின் முயற்சியால் ஜனவரி 30ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்ட ராஜீவ் சக்சேனாவை கைது செய்த அமலாக்கத்துறை அவரை டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரை  காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜீவ் சக்சேனாவின் காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது ராஜீவ் சக்சேவை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ராஜீவ் சக்சேனாவை பிப்ரவரி 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.