கேபிள் டிவி புதிய கட்டண முறைக்கு மாற மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: டிராய் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 20:46

புதுடில்லி,

கேபிள் டிவி மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை புதிய கட்டண விதிமுறைப்படி தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீடித்து டிராய் அறிவித்துள்ளது.

கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இந்த புதிய கட்டண விதிமுறைக்கு மாற டிராய் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேபிள் மற்றும் டிடிஎச் சந்தாதாரர்கள் வலியுறுத்தினர்.

அதை தொடர்ந்து புதிய கட்டண விதிமுறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக டிராய் இன்று அறிக்கை வெளியிட்டது.  புதிய கட்டண முறைக்கு மாறும் வரை பழைய கட்டணங்களை நடைமுறைப்படுத்தவும் டிராய் அனுமதி வழங்கியுள்ளது. 

இதுவரை நாடு முழுவதும் உள்ள கேபிள் டிவி சந்தாதார்களில் 65 சதவீதத்தினரும் டிடிஎச் சந்தாதாரர்களில் 35 சதவீதத்தினரும் புதிய கட்டண விதிமுறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.