பூபன் ஹசாரிகா மகன் பாரத ரத்னா விருதை ஏற்க நிபந்தனை

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 20:08

கவுஹாத்தி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு சட்டமாக்கினால்  என் தந்தைக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை ஏற்க மாட்டேன் என்று அசாம் மாநில பிரபல இசைக்கலைஞர் பூபன் ஹசாரிகாவின் மகன் தேஜ் ஹசாரிகா தெரிவித்துள்ளார்.

மகன் மற்றும் பேரனுடன் பூபன் ஹசாரிகா

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், கவிஞர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டாக்டர் பூபன் ஹசாரிகா.

பூபன் ஹசாரிகா 2011ம் ஆண்டு தனது 93 வயதில் காலமாகிவிட்டார். இந்த நிலையில் பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா  விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்த்து.

இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த மசோதாவுக்கு அசாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகாவுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை ஏற்பது குறித்து அவருடைய மகன் தேஜ் ஹசாரிகா அமெரிக்காவில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பொறுத்துதான் விருதை தாம் ஏற்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பூபன் ஹசாரிகாவின் மகன் தேஜ் ஹசாரிகா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இ ருப்பதாவது:

''மக்களுக்கு வலியைத் தரக்கூடிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றவே, என் தந்தையின் பெயரையும், வார்த்தைகளையும் செயல்படுத்தி, புகழ்பாடுகிறார்கள் என நம்புகிறேன். இது அவரின் நிலைப்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பதாகும்.

என் தந்தைக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை ஏற்பேனா அல்லது மறுப்பேனா என்று கேள்வி கேட்கிறார்கள். எனக்கு இதுவரை எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. ஆதலால், புறக்கணிக்க ஏதும் இல்லை. அதேசமயம், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எவ்வாறு மத்திய அரசு அணுகும் என்பதைப் பொறுத்தே பாரத ரத்னா விருதை நான் ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன், மணிப்பூரைச் சேர்ந்த இசையமைப்பாளரும், திரைப்படஇயக்குநரான அபிராம் ஷியாம் சர்மா தனக்கு கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.