இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டவருடன் ஹாங்காங் நகரில் இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் கலந்துரையாடல்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 18:40

புதுடெல்லி

இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டவருடன் ஹாங்காங் நகரில் இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ் இன்று கலந்துரையாடல் நடத்தினார்.

இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் ஒருவர் வெளிநாட்டில் உள்ள இந்திய முதலீட்டாளர்களுடன் கலந்து பேசுவது இதுவே முதல் தடவையாகும்.

இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் வெளியிடும் குறுகிய கால கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள மொத்த கடன் பத்திரங்களின் மதிப்பில் 20 சதவீதத்துக்கு மேல் முதலீடு செய்யக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால காலவரையறை 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழுக்க ரத்து செய்தது.

ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டவர் முதலீடு செய்தாலும் ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த கடன் பத்திர வெளியீட்டின் மதிப்பில் 20 சதவீதத்துக்கு மேல் ஒரு வெளிநாட்டவரின் முதலீடு இருக்கக் கூடாது எனவும் இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.

அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் 20 சதவீதக் கட்டுப்பாட்டை 

வெளிநாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்த வரையறையை தளர்த்த  வேண்டும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூறிவந்தனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுடன் தனித்தனியாக பேச்சு நடத்தினார்.

இந்திய ரிசர்வ் வங்கி தலைவராக சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு பிப்ரவரி 7ஆம் தேதியன்று முதல் நாணய கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய நிறுவனங்களின் கடன் பத்திர சந்தை தொடர்பாக வெளிநாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் மீதான 20 சத வீத கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்யப்பட்டது.

20 சதவீத உச்சவரம்பு விலக்கிக் கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள இந்திய முதலீட்டாளர்களுடன்  பேசுவதற்கும் அவர்களின் கருத்தை அறிவதற்கும் ஹாங்காங் நகருக்கு சக்தி காந்த தாஸ் சென்றிருந்தார். இந்திய கம்பெனிகளில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டவருடன் செவ்வாய்க்கிழமை அவர் பேச்சுவார்த்தை நடத்தினார் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததாகவும் இது தனக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.