ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை உயர்த்த கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 18:39

சென்னை

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டில் 3534 பயணிகள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த எண்ணிக்கையுடன் இன்னும் 1500பேருக்கு அனுமதி அளிக்கும்படி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

ஹஜ் யாத்திரைக்கு அனுமதி கோரி 2019ஆம் ஆண்டு 6 ஆயிரத்து 379 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் மத்திய அரசு ஒதுக்கியுள்ள இடங்கள் 3534 தான்.

இந்நிலையில் விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுபடும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க கூடுதலாக 1,500 பேருக்கு ஹஜ் பயண அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

2018ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3542 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த எண்ணிக்கை பின்னர் 3816 ஆக உயர்த்தப்பட்டது

இந்த ஆண்டும் ஹஜ் பயணத்துக்காக அனுமதி கோரி விண்ணப்பம் செய்தவர்கள் ஏமாற்றம் அடையாமல் அனைவரையும் பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஒதுக்கீட்டை உயர்த்த கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்