ஜவுளி துறையைச் சார்ந்த சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவ நாளை டெல்லியில் சிறப்பு முகாம்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 18:26

புது தில்லி

ஜவுளித் துறை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக டெல்லியில் சிறப்பு முகாம் ஒன்றை மத்திய அரசு நாளை ஏற்பாடு செய்துள்ளது.

சிறுதொழில் நிறுவனங்களில் தொழில் நுட்ப மேம்பாட்டுக்காக நூறு நாள் சிறப்பு திட்டமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த திட்டத்தின் கீழ் டெல்லியில் சிறப்பு உதவி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு உதவித் திட்டம் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் நிறைந்த 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

100 நாட்கள் இந்த திட்டம் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வங்கிகளின் சிறப்பு உதவியுடன் இந்த ஏற்பாடு நடைபெறும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கருவித் தொகுப்புகள் மற்றும் கைத்தொழில் கலைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு தொழில்நுட்பச் சான்றிதழ் சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள் வழங்கப்படும்.

 ஜவுளித் துறை சிறப்பு உதவி முகாம்களை நடத்த 39 மாவட்டங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்த 39 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் கைத்தறி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு உதவ தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 19 மாவட்டங்கள் கைத்தொழில் கலைஞர்களுக்கு உதவுவதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன 8 மாவட்டங்கள் அவற்றிலுள்ள விசைத்தறி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

ஜவுளி துறை சார்ந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏராளமாக உள்ளன. இந்த நிறுவனங்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம்  இம்மாநிலங்களில் அமல் செய்யப்பட உள்ளது. என சிறு தொழில் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த சிறப்பு உதவித் திட்ட முகாம் காரணமாக சிறுதொழில் நிறுவனங்களுக்கு, அவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கமும் உதவியும் கிடைக்கும் என்று நம்புவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்