ஆந்திர மக்களிடம் இருந்து கொள்ளையடித்து அனில் அம்பானியிடம் வழங்கிய பிரதமர்: ராகுல் சாடல்

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 13:24

புதுடில்லி,            

ஆந்திர பிரதேச மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை அனில் அம்பானியிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு விலகியது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். ஆந்திரா பவனில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். அங்கு பேசிய ராகுல்காந்தி,”ஆந்திர பிரதேச மாநில மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை அனில் அம்பானியிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். அதுதான் உண்மை” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும்,”மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அவர் என்ன மாதிரியான பிரதமர்? மோடி, எங்கு சென்றாலும் பொய் சொல்கிறார். அவரிடம் எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை” என்று சாடினார்.

“நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். பாஜகவை வீழ்த்திக்காட்டுவோம்” என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.