45 ஆண்டுகளில் இல்லாத கடும் வேலை இல்லாத் திண்டாட்டம்: வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தம்பித்துரை பேச்சு

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:38

புதுடில்லி

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத கடும் வேலை இல்லாத் திண்டாட்டம் இந்தியாவில் நிலவுகிறது. தமிழநட்டிலும் வேலை இல்லாத் திண்டாட்டம் கடுமையாக உள்ளது. வேலை இல்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்று மத்திய  வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் பொழுது மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை இன்று கூறினார்.

தம்பித்துரை இன்று பேசும் பொழுது ஆளுங்கட்சி எம்பிக்கள் குறுக்கிட்டுப் பேசினார்கள். ஆனால் அவர்களை அலட்சியம் செய்துவிட்டு தனது உரையை தம்பித்துரை நிறைவு செய்தார்.

தம்பித்துரை உரை விவரம்:

நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது உயர்ந்திருக்கிறது. அதுவும் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேலையில்லா திண்டாட்டத்தை ஒப்புக்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கூறினார்.  பல திட்டங்கள், பல நடவடிக்கைகள், எடுத்த போதிலும் வேலையில்லாத் திண்டாட்டம் குறையாமல் இருந்து வருகிறது.

 உணவு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆனால் 1995ம் ஆண்டு ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்குள் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மொத்தம் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது .

இந்தியா உலகில் உணவு உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தை படித்தாலும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள நாடுகளின் பட்டியலில்  இந்தியா இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கை உள்ள இடத்தில்தான்  உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட் டில் ஆண்டுக்கு  6,000  ரூபாய் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

உண்மையில் இது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள விவசாயிக்கு போதுமானதா? நீங்கள் தான்சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் இந்த தொகை ரூபாய் 12000 ஆக உயர்த்தப்பட வேண்டும் .

நூறு நாள் வேலைத்திட்டம் முழுத் தோல்வி

கிராமப்புறங்களில் வேலை காப்புறுதித் திட்டம் தோல்வியடைந்து விட்டது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையில் 60% தொழிலாளர்களின் சம்பளத்திற்காகவும் 40% அந்தப் பணியில் பயன்படுத்தப்படும் பொருள்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது .

இந்த விகிதாச்சார நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது பல இடங்களில் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை.

 நான் என்னுடைய தொகுதிக்காக கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் போது அங்குள்ள ஆண்களும் பெண்களும் காப்புறுதி திட்டத்தின் கீழ் வேலை இப்பொழுது வழங்கப்படுவதே இல்லை என்று கூறுகிறார்கள்.  

உண்மையில் என்னதான் நடக்கிறது?

கிராமப் பகுதிகளில் உள்ள ஆண் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக துவக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டம் முழுக்க தோல்வியடைந்துவிட்டதாக கூறலாம்.  இந்த திட்டத்தின் கீழ் கட்டடங்களை அமைப்பதற்கும் தண்ணீர் தொட்டி போன்றவற்றை நிறுவுவதற்கும் கிராம மக்களுக்கு இதுவரை தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்கப் படவில்லை. அதனால் அவர்களால் இந்த மாதிரி பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. இத்தகைய பணிகள் எல்லாம் காண்ட்ராக்டர் வசம் போய் சேருகின்றது. அவர் பணத்தை வாங்கிக் கொண்டு போகிறார்கள். கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

மாநிலங்களில் மத்திய திட்டங்களை அமல் செய்யும் பொறுப்பை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. ஆனால் அந்த திட்டங்களுக்கு தேவையான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அதனால் ஏற்கனவே நிதி இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் மாநில அரசுகள் மத்திய திட்டங்களை அமல் செய்வதற்கு பெரும் சிரமப்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மை வகுப்பினரின் மக்கள் தொகை அளவு 21.9 சதவீதம் ஆனால் அவர்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் தொகையின் அளவு 4.5% . இந்தத் தொகையைக் கொண்டு சிறு பான்மையோர் நலனுக்கான திட்டங்களை  எப்படி முழுமையாக  நிறைவேற்ற முடியும்.

இந்தியாவில் மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  பெரிதும் பாராட்டுகிறேன். இந்தியாவில்  பொருள்களை உற்பத்தி செய்யலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்களை எங்கு கொண்டு போய் விற்பது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மிகவும் கடினமான நடவடிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டில் மக்கள் இந்திய பொருட்களை வாங்குவதற்கு அதன் விலையை குறைவான அளவில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். அதே நேரத்தில் பொருட்கள் தரம் உள்ளதாக இருக்கவேண்டும். இதற்காக பை இந்தியா (BUY INDIA) திட்டம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.  ஆனால் இது நடைபெறவில்லை .

சீனாவிலிருந்து எல்லாப் பொருள்களும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன.

ராணுவம், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை நாம் உற்பத்தி செய்யலாம்.

 ஆனால் அன்றாடம் வாழ்க்கையில் பொதுமக்கள் பயன் படுத்துகின்ற நுகர்வுப் பொருள்கள் உற்பத்தியில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம். அந்த இடத்தை வெளிநாடுகளில் குறிப்பாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் பிடித்துக்கொண்டு இந்தியாவில்  பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன.

கருப்புப் பணம் - பண மதிப்பிழப்பு

 மற்றொரு முக்கியமான விஷயம் கருப்பு பணம். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது . ஆனால் பின்னால் அதே அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டார்கள்.

 இப்படி ரூபாய் நோட்டுகளை ரத்து செய்வது, அதற்கப்புறம் அதற்கு சமமான அளவு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவது  இதனால் என்ன பயன்?  ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ததும் பொதுமக்கள் மத்தியில் பணப்புழக்கம் கடுமையாக குறைந்தது .

நிதி குறைந்த காரணத்தினால் சிறு வர்த்தக நிறுவனங்கள் ,சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜவுளித் தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அழிந்தே போய்விட்டன.

 அரசு கொண்டு வந்த மற்றொரு திட்டம் ஜிஎஸ்டி வரி.

ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்தது நாங்கள் தான் என பாஜக கூறுகிறது. இல்லை இல்லை… நாங்கள் தான் என்று காங்கிரஸார்  கூறுகின்றனர் .

 ஜிஎஸ்டி வரி யாருடைய குழந்தை என்பதற்காக  இரண்டு தேசியக் கட்சிகளும் ஓய்வில்லாமல் போராடிக் கொண்டிருக்கின்றன . ஆனால் ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தப்படுத்திய  சமயத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கூட இன்னும் தீர்வு காணப்படவில்லை . அந்த பிரச்சினைகள் அப்படியே தொழில்துறையை அழுத்திக்கொண்டிருக்கின்றன.  

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகையை , பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தொகையை வழங்காமல் கிடப்பில் போட்டுவிடுவது தான் மத்திய அரசின் பழக்கமாக உள்ளது.

தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து பல்வேறு இலாகாக்களில் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை. மத்திய அரசு தர வேண்டிய  மொத்த தொகை ரூ. 12742 கோடியாகும் .

தானே, வர்தா, ஒக்கி, கஜா புயல்களின் நிவாரணத் தொகையும் கூட இன்னும் பாக்கி இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

 மற்றொரு பிரச்சனை எம்பிக்கள் தொகுதிகளில் செலவிடுவதற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியும் வழங்கப்படவில்லை.

எம்பி லாட் என்ற திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் விருப்பமான வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது திட்டங்களுக்கு அனுமதி அளித்தால்  போதுமா? திட்ட்த்துக்கான நிதி வழங்கப்படுவதில்லை என்பதுதான் பிரச்சனை. நாடாளுமன்ற உறுப்பினர் தன்  தொகுதியில்  புதிதாக இந்த திட்டம் என்னுடைய சொந்த தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து அமைக்கப்படும் என்று கூறுகிறார். ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

 மத்திய அரசு நிதி ஒதுக்காத காரணத்தினால் சொந்த தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் கூட நிதி கிடைக்காத நிலை உள்ளது .இதனால் சொந்தத் தொகுதியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட இயலாத நிலை உள்ளது.

அணைகளுக்கான அனுமதிகளை விலக்கிடுக

 இறுதியாக என் சொந்த மாநிலம் சார்பாக ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

 காவிரி ஆற்று நீர்ப் பாசனம் மாநிலமாக தமிழகம் உள்ளது.

 மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காவிரி நீர் பங்கீட்டுத் தீர்ப்பு கிடைத்து. அதை அமல் செய்வதற்கு உரிய அமைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கீழ்ப்பகுதியில் உள்ள பாசன மாநிலங்களில் சம்மதம் இல்லாமல் புதிதாக எந்த திட்டத்தையும் மேல் பகுதியில் உள்ள கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.

ஆனால் அங்கு மேகதாதுஎன்ற இடத்தில்  அணை கட்டுவதற்கு தேவையான அடிப்படை புள்ளி விவரங்களைத் திரட்ட மத்திய  நீராதாரக் கமிஷன் அனுமதி வழங்கியிருக்கிறது. ஏன் இப்படி செய்கிறார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை?

அதேபோல, முல்லைப்பெரியாறு கேரளத்தில் உள்ள அணை தமிழகத்திற்கு சொந்தமான அணைக்கட்டு. அங்கு அந்த அணைக்கட்டுக்கு பதிலாக மாற்று அணை கட்ட கேரள அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. அதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மாற்று அணைக்கான புள்ளி விவரங்களைத் திரட்ட அனுமதி வழங்கியிருக்கிறது.

 சட்ட அனுமதி  இல்லாத விஷயத்தில் இப்படி அனுமதிகளை முன்கூட்டி தருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கீழ்ப்பகுதி பாசன மாநிலங்களிடம் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.  

இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே தேவையில்லாமல் மனக்கசப்பு உருவாகும் நிலைக்கு மத்திய அரசு காரணமாக அமைகிறது. எனவே, தமிழகத்தின் நலனை பாதிக்கக்கூடிய தமிழகத்தை பாலைவனமாக மாற்றக் கூடிய இந்த இரண்டு அனுமதிகளையும் மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, மக்களவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார்.