தனிப்பட்ட முறையில் சீண்டினால் பதிலடி: மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:19

புதுடில்லி,            

ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கல் கோரி டில்லி ஆந்திர பவனில் ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை துவக்கினார். தனிப்பட்ட முறையில தன்னையும் தன மகன்களைப் பற்றியும் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படியும் அதையும் மீறிச் சீண்டினால தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சந்திர பாபு நாயுடு  எச்சரித்தார்.

ஆந்திர பிரதேச மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்பதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டில்லியில் உள்ள ஆந்திரா பவனில் இன்று காலை 8 மணிக்கு 'தர்ம போரட்ட தீக் ஷா' என்ற பெயரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

பின்னர், சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார்,”அப்பொழுது கூறியது: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்,'ஆட்சியாளர்கள் ராஜ தர்மத்தைப் பின்பற்றவேண்டும்' என்று கூறுவார். குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து அவர் கூறும்போது, அங்கு ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை என்று வாஜ்பாய் கூறினார். குஜராத்தைப் போல, இப்போது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்திலும் ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை. எங்களுடைய உண்மையான உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்து, தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

”5 கோடி மக்கள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை நான் எச்சரிக்கிறேன். ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி உறுதியளித்தவாறு சிறப்பு உரிமைகளை வழங்க வேண்டும் என நினைவுபடுத்துகிறேன்” என்று கூறினார்.

தனிப்பட்ட விமர்சனம் வேண்டாம்

மேலும் பேசிய அவர்,”தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் என் மீதும், என் மக்கள் மீதும் எந்தவிதமான பேச்சும் வேண்டாம். நான் என் மாநிலத்துக்காகப் பணியாற்றி வருகிறேன். எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறுகிறோம்” என்று கூறினார்.

தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவ் நமக்குக் கூறியது என்னவென்றால், யாரேனும் உங்களுடைய சுயமரியாதையைச் சீண்டினால், அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பித்துவிடுங்கள். ஆதலால், இனிமேல் நாங்கள் பொறுமை காக்கமாட்டோம. மோடிக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.