முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டவில்லை என சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தகவல்

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:18

புது தில்லி:

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கேரள அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கேரள அரசின் பதில் மனுவில், முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை, மாற்று அணை அமைப்பதற்கான அடிப்படைத்  தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கில் கேரள அரசின் பதிலை ஏற்று, புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.