காலம் தாழ்த்தாமல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குங்கள்: மன்மோகன் சிங் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 11:41

புதுடில்லி

மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். ஆந்திரா பவனில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். இதில் பேசிய மன்மோகன் சிங்,”பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்தபோது அனைத்து கட்சிகளின் ஆதரவும் இருந்தது. ஆகையால், சந்திரபாபு நாயுடுவுக்கு உறுதுணையாக நான் நிற்பேன்” என்று உறுதியளித்தார்.

“ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றவேண்டும். மாநில மக்களுக்கு ஆதரவாக என்றும் நான் இருந்து வருகிறேன். தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்” என்று மன்மோகன் சிங் கூறினார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா,”ஆந்திர பிரதேச மாநிலம் இரண்டாக பிரிந்தபோது, அதன் இழப்பை ஈடுகட்ட மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படவே இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

“குண்டூரில் நடைபெற்ற பேரணியில் சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த மோடி பயன்படுத்திய வார்த்தைகள், பிரதமர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அடிமட்டத்திற்கு அரசியலை எடுத்துச்சென்றுள்ளார்” என்று ஆனந்த் சர்மா கடுமையாக சாடினார்.