ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 11:38

சென்னை,              

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரனைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அனைத்துத் தரப்பினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய முறையில்தான் நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என்று ஆறுமுகசாமி ஆணையம் வாதத்தை முன் வைத்தது.

ஆறுமுகசாமி உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், ஆணையம் விசாரணை மட்டுமே நடத்த வேண்டும், குறுக்கு விசாரணை மற்றும் சாட்சி களிடம் விசாரணை நடத்தக் கூடாது என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசும், ஆறுமுகசாமி ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017-ம் ஆண்டு தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்போலோ மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தர்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, மருத்துவ நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களை கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.