விஷ சாராய சாவுகள்: முதல்வர்-அகிலேஷ் பரஸ்பரம் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019 19:27

லக்னோ

   உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நடந்த விஷ சாராய சாவுகள் எல்லாம் சமாஜ்வாதி கட்சியின் கைவரிசை. இந்த மாதிரி குறும்புத்தனமான வேலைகளை செய்வதில் சமாஜ்வாதி கட்சியினர் கைதேர்ந்தவர்கள் என உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வரின் குற்றச்சாட்டை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக மறுத்துள்ளார்

கள்ளச்சாராயம் ஒரு வியாபாரமாக நடக்கிறது என்றால் அதற்கு ஆளும் கட்சியின் துணை இல்லாமல் நடக்காது என்பது ஊரறிந்த விஷயம். மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் உத்தரகாண்டிலும் கள்ளச்சாராயம் கிராமத்துக்கு கிராமம் ஆறாக ஓடுகிறது என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் அரசுக்கு கூறப்பட்டது. ஆனால் தங்கள் கட்சியினர் இந்த சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பதால் உ.பி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது சமாஜ்வாதி கட்சி மீது முதல்வர் புகார் கூறுகிறார். இது அப்பட்டமான மூன்றாந்தர அரசியல் நடவடிக்கை என அகிலேஷ் யாதவ் கூறினார்.

சிபிஐ விசாரணை கோருகிறார் மாயாவதி

முதலில் இந்த சாராயச் சாவுகளுக்கு பொறுப்பேற்று இரண்டு மாநிலங்களிலும் இருக்கிற எக்சைஸ் அமைச்சர்கள் தங்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை முன்வைத்திருக்கிறார்.

இரண்டு அமைச்சர்களும் பதவியிலிருந்து விலகிய பிறகு இந்த விஷ சாராய சாவுகள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.

அதிகாரிகள் சஸ்பென்ட்

விஷ சாராய சாவுகள் குறித்து உத்தரபிரதேச அரசு தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. விஷ சாராய சாவுகள் நடந்த இரண்டு மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட எக்சைஸ் அதிகாரிகள், எக்சைஸ் ஆய்வு இன்ஸ்பெக்டர்கள் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் ஆகிய அனைவரும் பதவி பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் உடன் மாநில முதல்வர் உத்தரகாண்ட் முதல்வர் ரவாத் உடன் தொடர்பு கொண்டு ஹரித்துவாரில் நடந்த விஷ சாராய வியாபாரம் பற்றிய தகவல்களை தங்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரகாண்டில் இருவர் கைது

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் அருகே உள்ள சஹாரன்பூர் ஹரித்துவார் ஆகிய இரு மாவட்டங்களிலும் விஷ சாராயத்தினால் 70 பேர் உயிரிழந்தனர் இந்த சாவுக்கு காரணமான விஷ சாராய வியாபாரிகளை போலீசார் தேடிவந்தனர். இதன் தொடர்பாக 2 பேரை உத்தரகாண்ட் போலீசார் இன்று கைது செய்தனர். கைதான இருவரும் தந்தையும் மகனும் ஆவார்.

அவர்கள் போலீசாரிடம், உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷகரான்பூர் மாவட்டத்தில் இருந்து நாங்கள் சாராயத்தை வாங்கி கொண்டு வருவோம். அதை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்டத்தில் நாங்கள் விற்பனை செய்வோம் என்று கூறியுள்ளனர். இறந்த 70 பேரும் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் இரண்டு மாநிலங்களிலும் அருகருகே உள்ள ஹரித்துவார் சஹாரன்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேச அரசும் சாராய வியாபாரிகளை கண்டு பிடிப்பதற்காக போலீசாரை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பிரியங்கா கடும் கண்டனம்

விஷ சாராய சாவுகளுக்கு உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பாஜக அரசுகளே காரணம் என பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கிழக்கு பிரிவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி இன்று தன்னுடைய முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்திலும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த வியாழன் அன்று விஷச்சாராயம் குடித்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி இதயத்தை பிழிவதாக உள்ளது சம்பந்தப்பட்ட பாஜக அரசுகளை எவ்வளவு கண்டனம் செய்தாலும் தகும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார். விஷ சாராய சாவுகளுக்கு காரணமான குற்றவாளிகள் தப்பவிடாமல் இரண்டு மாநில அரசுகளும் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த சாராயச் சாவுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை இரண்டு மாநில அரசுகளும் வழங்க வேண்டுமென்று பிரியங்கா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழியில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு பாஜக மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்