ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது; திருப்பூர் பாஜக மேடையில் பிரதமர் மோடி உறுதி

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019 18:47

திருப்பூர்

   அனைவருக்கும் சமமான வாய்ப்பு தர வேண்டுமென்ற நோக்கில் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அரசு. இதனால் ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீடு எந்தவிதத்திலும் பாதிக்காது என உறுதி அளிக்கிறேன்  என பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்ட மேடையிலேயே உறுதி அளித்தார்.தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது: ``காவிரி, பவானி, அமராவதி, வைகை ஓடும் பூமியில் வாழும் தமிழ் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்’’ எனத் தமிழில் தன் உரையைத் தொடங்கினார்.

 ‘இந்த திருப்பூர் மண்ணுக்கு நான் தலை வணங்குகிறேன். இது துணிச்சலுக்கான தைரியத்துக்கான மண். இங்கு திருப்பூர் குமரன், தீரன் சின்னமலையின் தைரியம் இந்த நாட்டு மக்களுக்குப் பெரிய உத்வேகத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது. நாம் தொழில் முனைப்பு பற்றி சொல்லும் போது சமீபத்தில் நடக்கும் ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும்.

சமீபத்தில் 'மீண்டும் நமோ (Namo Again)’ என்ற வாசகங்களைத் தாங்கிய டி-ஷர்ட்டுகளும், தொப்பிகளும் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. அது இந்த திருப்பூர் மண்ணில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது’’ என்றார் மோடிnநான் இப்போது பல திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு வருகிறேன். 

திருச்சியில் அதிக போக்குவரத்து இருக்கும் திருச்சி விமான நிலையத்தில் 500 பேர் தான் ஒரே நேரத்தில் முழு வசதிகளைப் பெறமுடியும். ஆனால் இப்போது நான் ஒருங்கிணைந்த திருச்சி விமான நிலையத்துக்காக அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இது கட்டி முடிக்கும் 3000 பயணிகள் ஒரே நேரத்தில் வசதிகளைப் பெறமுடியும். அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. நம் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வைச் சுலபமாக்கும் பணிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

சென்னையில் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையை திறந்து வைத்து திருப்பூரில் புதிய இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைக்கு, அடிக்கல் நாட்டியுள்ளேன்.

சென்னை மெட்ரோ ரயில் 3வது கட்ட சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெயை மணலி சுத்திகரிப்பாலை வரை கொண்டு செல்ல புதிய பைப் லைன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும்.

முறைசாரா தொழில்கள், சிறு குறு தொழில்கள் அதிகமுள்ள பகுதி திருப்பூர். சமீபத்தில் பட்ஜெட்டில் சிறுதொழிற்சாலைகளில், பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக தொழலாளர் நல திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. 15 ஆயிரம் ரூபாய் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்கள்,ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால்  60 வயது நிறைவு பெற்றவுடன் மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்கப்படும்.

பாதுகாப்பு தொழில் தாழ்வாரம்

முந்தைய அரசு,இடைத்தரகர்களை வைத்து அவர்கள் நலனுக்காக செயல்பட்டனர். கடல் முதல் விமானம் வரை ஊழல் செய்தனர். இன்று கைது செய்யப்படும் இடைத்தரகர்கள், யாரோ ஒரு தலைவருடன் தொடர்பில் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற விரும்புகிறது. இதற்காக அரசு உதவி செய்து வருகிறது. 2 பாதுகாப்பு தொழில் தாழ்வாரம் அமைய உள்ளது. இதில், ஒன்று தமிழகத்தில் அமைகிறது. இதனால், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 40 ஆண்டுக்கு மேல் நமது முன்னாள் வீரர்கள் ஒன்ரேங்க் ஒன் பென்சன் கோரிக்கை வைத்தனர். 40 ஆண்டாக அது நிறைவேற்றவில்லை. தேஜ கூட்டணி அரசு நிறைவேற்றியது. ராணுவத்தை சிறுமைப்படுத்த எதிர்க்கட்சிகள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தின. சர்ஜிக்கல் தாக்குதலை கொச்சைபடுத்துகின்றனர். ராணுவம் புரட்சி செய்ய முயற்சித்ததாக காங்கிரஸ் கதை கட்டி விட்டு உள்ளது. நமது ராணுவம் அப்படி செய்யாது.

பாஜக அரசு, ஒவ்வொரு இந்தியனுக்கான அரசு. ஒவ்வொருவரின் எதிர்காலத்தை உறுதிபடுத்த அரசு முயற்சி செய்கிறது. எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் ஓய விட மாட்டோம்.

சாலைகள் அமைக்கும் வேகம் இருமடங்காகி உள்ளது. பாரத்மாலா திட்டம் மூலம் அனைத்து பகுதிகளையும் இணைத்து வருகிறோம்.

சாகர் மாலா திட்டம் மூலம், கடலோர பகுதிகளை மேம்படுத்தி துறைமுகங்களை வலுப்படுத்தி வருகிறோம். சென்னை உட்பட நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை துவக்கி வைத்து உள்ளோம்.

உலகில் பெரிய காப்பீட்டுத் திட்டம் 

உலகிலேயே பெரிய காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் , இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 11 லட்சம்பேர் பயன்பெற்று உள்ளனர். 18 ஆயிரம் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் இருந்தது. தற்போது ஒளி கிடைத்து உள்ளது. 2022க்குள் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. வீடு என்பது நமக்கு மரியாதை ,பாதுகாப்பு அளிக்கும் விஷயம்.

நடுத்தர குடும்பத்தினருக்காக, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினர் பற்றி கவலைப்படுகிறோம் என கடந்த ஆட்சியில் நினைத்து இருந்தால், அது நடவடிக்கையில் வெளிப்பட்டிருக்கும். அப்போது, தான் ஒருவர் மட்டுமே பெரிய அறிவாளி என கருதும் அமைச்சர், ஒருவர் தமிழகத்தில் இருந்து வந்தார். அவர் ரீகவுன்டிங் அமைச்சர். உலகில் உள்ள அறிவு முழுவதும் தன்னிடம் உள்ளதாக கருதுகிறார். நடுத்தர வர்க்கத்தினர் ஏன் கவலைப்பட வேண்டும் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர் என்றார். இதுபோன்ற காங்கிரசின் கேலி பேச்சுகளை ஏற்காமல் தான் மக்கள் தோற்கடித்தனர். மீண்டும், மீண்டும் தோற்கடிப்பார்கள்.

தேஜ அரசின் செயல்கள் சிலரின் மகிழ்ச்சியை குறைத்து உள்ளது. ஆள்வது உரிமை என நினைக்கின்றனர். அப்படி எண்ணியர்கள், பா.ஜ., அரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசின் செயல்பாட்டை பார்த்து கவலைப்படுகின்றனர் . அது விரக்தியாக மாறி அரசை வசைபாடுகின்றனர். அவர்களிடம் எந்த கேள்வியை கேட்டாலும் மோடி, மோடி என பதில் வரும். விவசாயி, சிறு குறு தொழில் பிரச்னை பற்றி கேட்டால், மோடி என பதில் சொல்வார்கள். எதிர்க்கட்சிகளுக்கு மோடியை வசைபாடுவதே கொள்கையாக உள்ளது. வசைபாடுவதில், உங்களுக்கு வாய்ப்பு டிவியில் தான் இருக்கும்.தேர்தல் எதன் மீது நடத்தப்படுகிறது. நாடு பற்றிய நமது கண்ணோட்டம் குறித்து தான் தேர்தல் நடத்தப்படுகிறது. மத்திய அரசு தவறுகளுக்கும் ஊழலுக்கு எதிராக செயல்படுகிறது. இது போன்ற ஆட்சி தான் வேணடும் என காமராஜர் விரும்பினார்

மாற்றம்

இன்று போலி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. போலி நபர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இடைத்தரகர்கள் அரசை சுற்றி வந்தது நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன் ஐஸ்கிரீமுக்கும் மொபைல் போனுக்கும் பேக்கேஜ் இருந்தது. தற்போது, குடும்பமே பேக்கேஷ் முறையில் ஜாமீன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளது. அவர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைத்தனர். தற்போது, அவர்கள் கொள்ளையடித்த பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டியள்ளது. இதுதான் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றம்

மோடியை எதிர்ப்பதே நோக்கம்

மோடி அரசு தோல்வியை சந்திக்கும் என சொல்லும் சிலர்  மகா கூட்டணியை தேடி செல்கிறார்கள். உங்களின் கொள்கை என்ன. என்று கேட்டால் ஒரே நோக்கம் பிரதமர் மோடியை எதிர்ப்பது தான். என்கின்றனர். நாட்டு மக்கள் புத்திசாலிகள். இவர்களின் விளையாட்டை பார்த்து விட்டார்கள். கலப்படமான கூட்டணியை தூக்கி எறிவார்கள்.
அவர்கள், வறுமையை பற்றி கவலைப்படாதவர்கள். குடும்ப ஆட்சியை வளர்ப்பதே அவரகள இலட்சியம்.. அது பணக்காரர்களின் குழுமம். அவர்களின் குடும்பத்தை முன்னேற்றுவது முக்கியமாகும். நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளின் நோக்கம். விவசாயிகள், இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றனர். திட்டமிடாத கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்கு பயன் இல்லை. சுமை குறையாது.

ஏழ்மையில் இருந்து விவசாயிகள் வெளியே வந்தால், எதிர்க்கட்சிகளால் அரசியல் செய்ய முடியாது. இதனால் மத்திய அரசு திட்டத்தால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.10 ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாய கடன் தள்ளுபடி பற்றி காங்கிரஸ் பேசுகிறது. இதில் விவசாயிகளுக்கு பலன் ஏற்படுவது கிடையாது. எந்த ஆட்சி விவசாயிகள் பற்றி கவலைப்படுகிறது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். மீனவ ஆண்களுக்கும், பெண்களுக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்த தனி இலாகா ஏற்படுத்தப்படும். அரசின் திட்டம், அவர்களின் வீட்டிற்கு வந்து சேரும்.இத்தனை ஆண்டுகள் ஏன் சிந்தித்து பார்க்கவில்லை என எதிர்க்கட்சிகளை கேட்கிறேன்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது நமது நோக்கம். இதற்காக பொதுப்பிரிவில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும், பட்டியல் இனத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இது பாதிக்காது. நம்மை பொறுத்தவரை சமூக நீதி கணக்கியல் இல்லை. நம்முடைய நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. நீண்ட காலமாக எதிர்க்கட்சிகள் இதில் பதற்றத்தை ஏற்படுத்தினர். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இதனை செய்தனர். ஆனால், எங்களது அரசு சமூக நீதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது கிடையாது.
பட்டியல், மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை திமுக, காங்., அரசு நீக்கியது. ஆனால், அவர்களின் நலனை காக்க வாஜ்பாய் அரசு தான் உறுதியான சட்டத்தை கொண்டு வந்தது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி, இளைஞர்களுக்கு எதிர்காலம் விவசாயிகளுக்கு நீர்பாசனம் கிடைக்கவும், தமிழ் மக்களும் , இந்தியாவும் சேர்ந்து புதிய உயரத்தை எட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.