ஆன்மிககோயில்கள்: தீராத நோய் தீர்க்கும் வைத்யநாத சுவாமி

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019அருள்மிகு வைத்யநாத சுவாமி திருக்கோயில், சூலூர், கோயம்புத்தூர்.

கொங்கு நாடு முற்காலத்தில் 24 பகுதிகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அதில் ஒன்று வாயரைக்கால் நாடு. பல்லடம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்நாட்டில் அமைந்த ஊர் சூலூர். கோவை நகரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் கிழக்கில் 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சூலூர். சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். நொய்யல் நதியின் தென்கரையில் இத்தாவரம் மிகுதியாக காணப்பட்டதால் இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. சூரலூர் என்பது நாளடைவில் சூலூர் என்றாகி, வழக்கில் வழங்கப்பட்டு நிலைபெற்றதாகி விட்டது.

9ம் நூற்றாண்டில் கரிகாலச் சோழன் இங்கு காட்டினை அழித்து சமன் செய்து ஊராக்கும் போது சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை ஒரு கல்ஹார கோயிலாகக் கட்டி சுயம்பு மூர்த்தத்தை  பிரதிஷ்டை செய்து ‘வைத்ய லிங்கமுடையார்’ என்ற திருநாமத்தை சூட்டி கும்பாபிஷேகமும் செய்தார். நொய்யல் நதியோரம் கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர் வரை 36 சிவன்கோயில்களை கரிகாலச் சோழன் திருப்பணி செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது. அவர் திருப்பணி செய்த 36 சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தமிழ்நாடு அரசு 1950-ம் ஆண்டு வெளியிட்ட சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்செய்தியை உறுதி செய்கின்றது.

இத்தலம் நொய்யல் நதியின் தெற்காகவும் சூலூர் குளக்கரையில் இரு புறமும் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த தோற்றத்தில் விளங்குகிறது. கோயில் கிழக்கு நோக்கி இருந்தாலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தெற்கு  நுழைவாயிலை அமைத்துள்ளனர். கோயில் குளம் அல்லது நதிக்கரை ஓரம் அமைந்திருந்தால் அதற்கு சக்தியும் ஆற்றலும் அதிகம். ஸ்தலம், மூர்த்தி மற்றும் தீர்த்தம் ஆகியவை ஒருங்கே சிறப்பாக அமைந்திருந்தால், அத்தலங்கள் சிறப்பின் அடிப்படையில் தெய்வ சான்னித்யம் அதிகமாக இருக்கும். தெய்வீக அதிர்வுகளை உணரவும் இயலும். இவையனைத்தும் உள்ள இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபடுவது சிறந்த பயனைத் தரும் என்பது திண்ணம். வைத்தீஸ்வரர் செவ்வாய்க்கு அதிபதி. இத்தலம் நாகை மாவட்டத்திலுள்ள வைத்தீஸ்வரர் கோயிலுக்கு இணையாகக் கருதப் படுகிறது. ராகு-கேது தோஷ நிவர்த்திக்கு சிறந்ததோர் பரிகார தலம் என்பது சிறப்புமிக்கதாகும். இக்கோயிலில் முறையாக சிவ பூஜைகள் தங்கு தடையின்றி நடைபெற 1168- –1196 ஆண்டுகளில் அரசாண்ட மூன்றாம் வீர சோழன் வரிக்கொடை அளித்த செய்தியினை செலக்கரச்சல் மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணலாம். இதிலிருந்து இக்கோயில் 850 வருடங்களுக்கு முற்பட்ட கோயில் என்பது ஊர்ஜிதமாகின்றது. மூலவர் சுயம்பு வைத்யநாத சுவாமி மிகப் பழமை வாய்ந்த மூர்த்தம் ஆகும். முதலில் கல்ஹார கோயிலாக இருந்து நாளடைவில் பிற கோயில்களைப் போலவே இறைவியையும், பரிவார மூர்த்திகளையும் ஸ்தாபித்து ஒரு பெருங்கோயிலாக உருவெடுத்து உள்ளதை தற்போது காண முடிகிறது. கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு-கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார்.  வள்ளி தெய்வானை சமேத முருகன், வைத்யநாத சுவாமி, தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள பிரதான சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இத்தல உட்பிரகாரத்தில் மகா கணபதி, அரசமரத்தடி விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று இடங்களில் ராகு கேதுவுடன் அருள்பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்க்கை, நவக்கிரகம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமண தடை, ராகு-கேது தோஷ நிவர்த்திகள் நிறைவேறுவதால் ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர். மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று தீராத வியாதிகள் கூட இத்தலத்தில் வேண்டி பூஜித்த பின் உடல் நலம் பெற்றோர் ஏராளம். திருமண தடை நிவர்த்திக்காக சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண் நந்திகேஸ்வரருக்கு தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெய் காப்பிட்டு மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். பின் அந்த மாலையை அணிந்து கொண்டு வைத்யநாத சுவாமி பூஜையில் கலந்து கொண்டால் திருமணதடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும். கல்யாண குண நந்திகேஸ்வரர் என இவர் அழைக்கப்படுகிறார்.

கோவை மாவட்டம் - சூலூர் பஸ் நிலையத்திலிருந்து முத்துகவுண்டன் புதூர் செல்லும் வழியில் அரை கி.மீ. தொலைவில் உள்ள குளக்கரையில் உள்ளது. ஆட்டோ வசதி உள்ளது.

போன்: 0422- – 2300360