திண்ணை 10–2–19

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

மாற்றியோசி.. வெற்றி நிச்சயம்...!

 “இடையூறுகளிலிருந்து விடுபட... இரண்டே வழிகள் உண்டு. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள் அல்லது நீங்கள் மாறுங்கள்...” பில்லி° பாட்டம் என்ற மேல்நாட்டு அறிஞர் இந்தக் கருத்தை கூறியுள்ளார். வாழ்க்கையில் அன்றாடம் இடையூறுகள் தொல்லைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதைப்பற்றி கவலை கொண்டால் செயல்பட முடியாது. செயல்பாட்டில் மாற்றம் செய், இடையூறுகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். சூழ்நிலையை மாற்றி அமைத்துக்கொண்டால் தடை விலகும். வெற்றி பெறலாம்.

அதற்குத்தேவை பொறுமை, நிதானம், சிந்தனை சூழ்நிலையை அனுசரிக்கும் மனப்பக்குவம். பேரரசர் அக்பர் அவையில் மதியூகி அறிவாளி என அடிக்கடி நிரூபித்து மன்னரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வல்லமை பெற்றவர் பீர்பால். ஒரு முகமதிய மன்னர் அவையில் இந்துவாகிய பீர்பாலுக்கு இருக்கும் மதிப்பையும், செல்வாக்கையும் பார்த்து பலரும் பொறாமைப் பட்டனர். பொறாமை பீர்பாலுக்கு இடையூறாக வந்தது. ஆனாலும், போட்டியாளர்கள் தோற்றனர். பீர்பால் மட்டும் எப்படிப்பட்ட நெருக்கடியிலிருந்தும், இடையூறுகளிலிருந்தும் தப்பி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அஞ்சாமை, தாழ்வு மனப்பான்மையின்மை எல்லாவற்றிற்கும் மேலாக அவரது அறிவுக்கூர்மை.

ஒரு சமயம் கல்விச் செருக்கோடு ஒரு அறிஞர் அக்பர் அவைக்கு வந்தார். அக்பருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பீர்பாலை தலை கவிழுமாறு செய்ய வேண்டும் எனற நோக்கத்துடன் மன்னரிடம் உங்கள் அவையில் பீர்பால் மிகச்சிறந்த அறிவாளி என்று சொல்கிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடை கூறினால் தான் நானும் அவரை அறிவாளி என்று ஒப்புக்கொள்வேன். செருக்குடன் அவர் கூறியதை பார்த்த அக்பர், பீர்பாலை திரும்பிப்பார்த்தார்.

“மன்னா... நான் தயார்” என்று சொன்னார். இப்பொழுது அவைக்கு வந்த அந்த அறிஞர் பீர்பாலிடம் “எளிதான நுhறு கேள்விகளுக்கு விடை கூற விரும்பகிறீரா... அல்லது கடினமான ஒரே ஒரு கேள்விக்கு விடை கூற விரும்புகிறீரா...” என்று ஏளனமாகக் கேட்டார். பீர்பாலும் நிதானமாக யோசித்து, “பேரரசரும் நானும் இப்பொழுது உடனடியாக வெளியில் செல்ல வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். எனவே கடினமான ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்...” என்றார் பீர்பால். அறிஞரும், ஏளனமாக புன்னகைத்தபடி உலகில் கோழி முன்னர் வந்ததா... முட்டை முன்னர் வந்ததா... என்று இடக்காக ஒரு கேள்வி கேட்க, பீர்பால் தயங்காமல் “கோழி தான் முன்னர் வந்தது” என்று பதில் கூறினார். பொறியில் பீர்பால் சிக்கிவிட்டார் என்று அறிஞர் உடனே “எப்படி என்று சொல்ல முடியுமா...” எனக் கேட்டார். உடனே பீர்பால், அறிஞரிடம் நிபந்தனையை மறந்துவிட்டு கேள்வி கேட்கிறீர்கள். ஒரேயொரு கேள்வி மட்டுமே கேட்பதாகச் சொன்னீர்கள்.. இன்னொரு கேள்வி கேட்க, உமக்கு உரிமை இல்லை... என்று கூறிவிட்டு மன்னரிடம் “மன்னா.. நாம் புறப்படலாமா... என்றார். புத்திசாலித்தனமான பீர்பாலின் பதிலை பாராட்டியபடி அக்பர் பீர்பாலுடன் வெளியே புறப்பட்டார். மடக்க நினைத்த அந்த அறிஞர் மடங்கிப்போய்விட்டார்.

இதுதான் இடையூறுகளையும சிக்கல்களையும், புத்திசாதுhர்யமாக கடந்து முன்னேறி செல்லும் வெற்றிக்கான வழிமுறை. தடை வந்துவிட்டதே இடையூறு வந்து விட்டதே என்று கவலைப்படுவதை விட சூழ்நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள் நிச்சயம் தடை விலகும். அது தான் வெற்றி.

கிருஷ்ணரா... படைபலமா...!

ஒரு விஷயத்தில் முடிவெடுப்பது என்பது பிரதான விஷயம். நாம் எடுக்கும் முடிவு தான் நம் வெற்றியை நிர்ணயம் செய்யும். இதை மனதில் கொண்டே புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். இதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.  குருட்ஷேத்ர யுத்தத்திற்கு பாண்டவர்களும், கவுரவர்களும் படை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் அர்ஜூனன், கிருஷ்ணரைப் பார்த்து தங்களுக்கு யுத்தத்தில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்பதற்காக கிருஷ்ணரின் அரண்மனைக்கு சென்றிருந்தான். கவுரவர்கள் சார்பாக துரியோதனனும் கிருஷ்ணரிடம் ஆதரவு கேட்க அங்கு வந்திருந்தான். கிருஷ்ணரோ, துhங்கிக் கொண்டிருந்தார். அவர் விழித்தெழும் வரை காத்திருப்போம் என கிருஷ்ணரின் படுக்கை அறையில் துரியோதனன் அவரது தலைப்பகுதிக்கு அருகில் அமர்ந்திருந்தான். துரியோதனனின் கணக்கு கண் விழிக்கும் பொழுது கிருஷ்ணரின் பார்வை முதலில் தன் மீதே விழும். முதல் கோரிக்கையாக நாம் ஆதரவு கேட்டால் நமக்குத்தான் கிருஷ்ணர் ஆதரவு கொடுப்பார். ஏனெனில், முதலில் கேட்பவருக்குத்தான் பலன் கிடைக்கும்.

போலீஸ் ஸ்டேஷனில் முதலில் ரிப்போர்ட் கொடுப்பவர்களுக்குத்தான் போலீஸ் ஆதரவாக விசாரிப்பார்கள். இதைத்தான் எப்ஐஆர் என்று குறிப்பிடுவார்கள். அது போல இங்கு கிருஷ்ணரை தங்கள் பக்கம் இழுக்க துரியோதனன் முந்திக்கொண்டு, கிருஷ்ணரின் தலைப்பகுதியில் அமர்ந்தான். கண் விழித்ததும் தன்னை முதலில் பார்க்க அர்ஜூனனே நேராக கிருஷ்ணரின் பாதத்திற்கு அருகில் போய் அமர்ந்து கொண்டான்.

மாயக் கண்ணனல்லவா.. ஞானதிருஷ்டியால் இருவரின் வருகையை புரிந்து கொண்டு கண் விழிக்கும் போதே கால் பகுதியில் பார்வையை செலுத்தியவாறு எழுந்தவர், அர்ஜூனனிடம், “வா... அர்ஜூனா என்ன விசேஷம் என்று கேட்க, அர்ஜூனன் ‘குரு ஷேத்ரா யுத்தத்தில் கிருஷ்ணர் தங்கள் பக்கம் ஆதரவாக இருக்க வேண்டும்’ என கேட்க வந்த விவரத்தை கூறினான். அடுத்திருந்த துரியோதனனை அடுத்த படியாக பார்த்த கிருஷ்ணர், “அடடா... துரியோதனர் வந்திருப்பதை நான் கவனிக்கவில்லையே... என்ன விஷயம் வாருங்கள் பேசலாம்..” என்று சொல்ல, துரியோதனனும் குருட்சேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் தங்கள் பக்கம் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்கிறான்.

“இருவருமே ஒரே விஷயத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள். என்ன செய்வது... என்று யோசித்த கிருஷ்ணர் இருவரையும் பார்த்து, “உங்களில் ஒருத்தருக்கு ஆதரவாக இருந்துவிட்டு அடுத்தவருக்கு எதிராக இருக்க விரும்பவில்லை. இருந்தாலும் என்னிடம் உள்ள அனைத்து போர் படைகளையும் ஒரு பக்கமும், நான் மட்டும் தனியாக ஒரு பக்கம் இருக்கிறேன். உங்களுக்கு யார் வேண்டுமோ.. அவர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்...” என்று சொன்னார்.

கிருஷ்ணர் அர்ஜூனனின் முடிவை கேட்க, அர்ஜூனனோ, “கிருஷ்ணா, எனக்கு நீ துணையிருந்தால் போதும்” என்று சொல்ல, துரியோதனனோ தனக்கு தேவை கிருஷ்ணரின் படைபலம் தான். என்று சொல்ல, கிருஷ்ணரும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டார். இந்த இரண்டு பேரின் முடிவை தேர்ந்தெடுக்கும் யுக்தியில் அர்ஜூனனே வெற்றி பெற்றான். ஆயிரம் யானைகள் பலமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்தும் அங்கு சத்துடன் நிற்கும் மாவுத்தன் பலம் தானே முக்கியம். இதை துரியோதனன் உணரவில்லை. அர்ஜூனனுக்குத் தெரியும். கிருஷ்ணரின் புத்திசாலித்தனம் அற்புதமானது. போர் தந்திரம் தெரிந்தவர், அவரை தனது தேர்பாகனாக வரவேண்டும் என்று கேட்டதால் தான் கர்ணனின நாகாஸ்த்திரத்திலிருந்து அர்ஜூனன் தப்பிக்க முடிந்தது.

பீஷ்மரை வெல்ல முடிந்தது. அந்த வகையில் கிருஷ்ணரா... கிருஷ்ணரின் படைபலமா... என்கிற இரண்டு முடிவில் எது நமக்கு வெற்றியை தேடித்தரும் என்று கணிப்பதில் துரியோதனன் தவறிவிட்டான். அர்ஜூனன் கிருஷ்ணரை தன் பக்க பலமாக்கிக்கொண்டு வெற்றி பெற்றான்.  வழிநடத்தும் வழிகாட்டி இருந்தால் தான் வாழ்க்கை பயணம் சீராகச் செல்லும். இந்த மகாபாரத சம்பவத்தில் நான் குறிப்பிட்டது போல இலக்கை நிர்ணயம் செய்து நாம் எடுக்கும் முடிவில் தான் வெற்றி நிர்ணயிக்கப்படுவது என்பது புரியும். எனவே இதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.

– ஹெச். வசந்தகுமார்