கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 50

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

கானா பாடலுக்கு பிள்ளையார் சுழி!

ஆறு ஏக்கர் விஸ்தீரணம் உள்ள தனது அருணாசலம் ஸ்டூடியோவில், இரண்டு படப்பிடிப்பு தளங்கள், நிவால் கேமரா, கிளாங் ஒலிப்பதிவு சாதனம், பவுர் டபிள் புரொஜெக்டர் என்று படங்கள் உருவாக்கத் தேவையான சாதனங்களுடன் இருந்தார், ஏ. கே. வேலன். அவர் இந்த ஸ்டூடியோவுக்கு சொந்தக்காரர் மட்டும் அல்ல, ஸ்டூடியோவை பிசியாக வைத்திருக்க, தனது அருணாசலம் பிக்சர்சின் சார்பாக படத்தயாரிப்பும் செய்யவேண்டியவராக இருந்தார்.

தனக்கு வெற்றியையும் இந்த சொத்துக்களையும் வாரித்தந்த, மகாதேவன் இசையமைத்த ‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ (1958) படத்திற்குப் பிறகு, ‘பெரிய கோயில்’  படத்தை தயாரித்து இயக்கியதில் அவருக்குத் தோல்விதான் மிஞ்சியது. அவருடைய கற்பனை, மீண்டும் சொந்த மண்ணான தஞ்சையை சுற்றி வந்தது. 1959க்கான தனது தயாரிப்பாக அவர் உருவாக்கிய படம், ‘காவேரியின் கணவன்’.

பால்ய விவாகத்தையும் அதன் தொடர்பாக நடக்கும் ஒரு பழிவாங்கும் படலத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது, வேலனின் திரைப்படம். சவுகார் ஜானகி,  முத்துக்கிருஷ்ணன், பக்கிரிசாமி, சூர்யகலா ஆகியோர் நடித்தார்கள்.

வேலனுக்கு என்றால் மகாதேவனின் இசை அருவி கொட்டத்தொடங்கிவிடும் போலும்...முத்து முத்தாக  அவர் வெற்றிப்பாடல்களைத் தொடுத்துவிட்டார்.

இளம் சிறார்களுக்கு அறியாப்பருவத்தில் மணமுடிப்பது, பொம்மை கல்யாணத்திற்கு ஒப்பாகும் என்பதைக்  குறிப்பதுபோல் அமைந்த வெற்றிப்பாடல்,

‘மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்

மாட்டு வண்டியிலே

பொண்ணு வந்தா பொண்ணு வந்தா

பொட்டி வண்டியிலே’ (பாடல்: தஞ்சை ராமய்யா தாஸ், குரல்: எம்.எஸ். ராஜேஸ்வரி).

மகாதேவனுக்கு வரப்பிரசாதமாக  வாய்த்த ஒயிலான திஸ்ர நடையில் அமைதியாகச் செல்கிறது குழந்தைப் பாடல்.

‘அம்மா’ என்று குழந்தை அழைக்கும் போது பீறிட்டெழும் தாய்மையும், தாய்க்கு அது தரும் சிலிர்ப்பும் சந்தோஷமும்,

‘சின்ன சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்

அமுதகானம் பொழியுதடா’ என்று பி. சுசீலா பாடிய பாடலில் அழகாக வெளிப்பட்டன.  சந்தோஷமாக ஒரு முறையும் சோகச் சித்திரமாக ஒரு முறையும் பாடல் ஒலிக்கிறது.

இன்றும் நினைவில் நிற்கும் இன்னொரு பல்லவி,  ‘கன்னி வயது இளம் பருவத்திலே’. இந்த இரண்டு பாடல்களை  வேலனின் நண்பரான புலவர் பி.கே.முத்துசாமி எழுதினார்.

ஒரு சில இனிமையான பாடல்களால் மட்டும் ‘காவேரியின் கணவன்’ வெற்றிப்படம் ஆகிவிடுமா என்ன? பிரபல நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுப்பதில் வேலனுக்கு நம்பிக்கை இல்லை. தன்னுடைய எழுத்து, இயக்கம், தயாரிப்பு, சொந்த ஸ்டூடியோ என்று சொந்தக் காலில் நிற்க விரும்பினார் அவர். ஆனால் திரை உலகமோ, பெரும்பாலும் நட்சத்திர பலத்தை நம்பியே இருந்தது. அதற்கு முரண்பட்டுப்போன வேலனின் வெற்றி வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால், வேலன் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் , அவருடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இசையமைத்துக் கொடுத்து,  மகாதேவன் அவருக்குத் தொடர்ந்து தோள்கொடுத்தார்.

மகாதேவன் இசையில் ‘பொம்மை கல்யாணம்’ எடுத்த அருணா பிலிம்ஸ் நிறுவனம், கல்கியில் பணிபுரிந்த  எழுத்தாளர் கி.ரா. கோபாலனின் கதையின் அடிப்படையில், ‘அபலை அஞ்சுகம்’ என்ற படத்தைத் தயாரித்தது. ஜனரஞ்சக நாவல் பாணியில், கல்கியில் தொடர் நாவலாக  வந்து பலராலும் பாராட்டப்பட்ட கதை இது.

இந்த அருணா பிலிம்சின் முதல் வெற்றித் தயாரிப்பான ‘ராஜாம்பாள்’, எம்.எஸ். ஞானமணியின் இசையில் அமைந்தது. ஞானமணியை மீண்டும் ‘அபலை அஞ்சுக’த்தில் ஈடுபடுத்தும் முயற்சி இருந்தது. அவர் ‘இளைய கன்னியின் அழகிய வதனம் மலர்ந்ததெவ்விதமோ’ என்ற கண்ணதாசனின் இனிய பாடலுக்கு அழகாக இசையமைத்தார். ஆனால்,  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் ஒரு துரதிர்ஷ்டம் ஞானமணிக்குத் தொடர்ந்து இருந்தது! வந்த படங்கள் அவரை விட்டு விலகிப்போகும். ‘ஞானசவுந்தரி’, ‘ஜெனோவா’, ‘தூக்குத் தூக்கி’ என்று தொடர்ந்த படலத்தில் ‘அபலை அஞ்சுகம்’ இணைந்து கொண்டது.  

ஞானமணியும் மகாதேவனும் பரஸ்பர புரிதல் உள்ளவர்கள்தான். ஞானமணியின் இசையமைப்பில், ‘உலகம்’ படத்தில் மகாதேவன் பின்னணிப் பாடல் பாடியும் இருந்தார்!

இந்நிலையில், ஞானமணியின் ஒப்புதலுடன்  ‘அபலை அஞ்சுகதிற்கு மகாதேவன் இசையமைத்தார். ஞானமணி இசையமைத்த ஒரே பாடலும் படத்தில் இடம்பெற்று, வெற்றிப்பாடலாக அமைந்துவிட்டது.

‘அபலை அஞ்சுக’த்தில், மகாதேவனும் ஒரு டூயட்டுக்கு இசையமைத்தார். அதை டி.ஆர். மகாலிங்கமும் பி. சுசீலாவும் பாடினார்கள். ஒரு சில ஆண்டுகளில் வரப்போகிற ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’க்கு முன்னோட்டம் போல் அமைந்தது, இந்த ‘வெண்ணிலா குடைபிடிக்க’ பாடல். அதன் ராகம் அப்படி.

‘அபலை அஞ்சுக’த்தில், ரவுடி சொக்கனாகவும், மேகராஜபுரம் ஜமீந்தாரிணியின் மருமகனாகவும் இரட்டை வேடங்களில் நடித்தார் டி.ஆர்.மகாலிங்கம். சொக்கன் வேடத்திற்காக சபாஷும் பெற்றார்.

அங்காடிப்பேட்டை அஞ்சுகமாக நடிக்கும் சவுகார் ஜானகி மீது ஆசையும் காதலும் கொண்ட சொக்கனாகப் பாடும் போது, மகாலிங்கத்தின் பாடல் மொழி, சென்னைத் தமிழில் அமைந்தது.

அந்தப் பாஷையில் நிபுணரான படத்தின் வசனகர்த்தா ஏ. எல். நாராயணன் எழுதிய ஒரு பாடலில் (தூண்டிப்போட்டு என் மனசு துடிக்குது),  

‘பொண்ணு அவ நேரா - என்னை பாக்காமலே போறா - அவ

கண்ணழகுக்கீடா - இங்கு

யாருதான் கீரா

யாருதான் கீரா’ என்று பின்னாள் கானா பாணியில் அன்றே எழுதினார் ஏ.எல்.என்.

‘அழகில் அவ மானு - அவ

வார்த்தையோ செந்தேனு

போகுதே காதல் மூணு

சொக்கன் லைபு வீணு’ என்றும்,

‘ஆசையெல்லாம் லாஸ்டு  - இந்த

வாழ்வில் ஏது டேஸ்டு

அவ இல்லாமே உலகில் நானு

இருப்பதுதான் வேஸ்டு

இருப்பதுதான் வேஸ்டு,’’ என்றும் கானாவுக்கு ஆனா ஆவன்னா போட்டுவிட்டுப் போனா(ர்) ஏ.எல் நாராயணன்!

பேண்டு வாத்திய இசையுடனும் அழகான தொகையறாவுடனும் மகாதேவன் இந்த பாடலை அமைத்து, கானா ராகத்திற்கு அழுத்தமான தொடக்கத்தை ஏற்படுத்தி வைத்தார்.

(தொடரும்)