மாங்கல்ய தோஷத்தால் என்ன தீமை ஏற்படும்? – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பெற்றோர்கள் அதிகமாக சொல்வது என்னவென்றால் என் மகள் அல்லது மகனுக்கு மாங்கல்ய பாக்கியம் இருக்கா என்று கேட்கிறார்கள். மாங்கல்ய தோஷம் இருக்கா என்று நன்றாக பார்த்து சொல்லுங்கள் என்று என்னிடம் பலர் கேட்கின்றனர். மாங்கல்ய தோஷத்தால்  என் மகளுக்கு திருமணத்திற்கு பிறகு கணவனை விட்டு பிரிந்து தனித்து வாழ்வாளோ அல்லது அவரவர் துணை திருமணம் ஆன குறுகிய காலத்தில் இறந்துவிடுவார்களோ அல்லது மாங்கல்ய தோஷம் உள்ள ஜாதகருக்கு திருமணம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணம் நடந்து விடுமா என்றெல்லாம் கேட்டு அச்சப்படுகின்றனர். மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அதில் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்று கேட்கின்றனர்.  மாங்கல்ய பாக்கியம் என்றால் என்ன? அதனால் என்ன பலன் நடக்கும் இதோ அதற்கான விடையை மற்ற மற்ற வாசகர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன-?

மாங்கல்யம் என்றாலே   தாலியை குறிக்கும். தாலி பாக்கியம் உண்டா என்று மக்கள் பலர் கேட்பதை நாம் கவனித்திருக்கலாம்.  இந்த தாலி பாக்கியம் இருந்தால்தான் தன்னுடைய கணவன் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக இல்லறத்தில் வாழ முடியும். இது பெண்களுக்கு மட்டுமா பொருந்தும் என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆண்களுக்கும் இந்த பாக்கியம் இருந்தால்தான் தன்னுடைய மனைவி நீண்ட ஆயுளுடன் வாழ வாழ முடியும். இந்த மாங்கல்ய பாக்யம் இல்லாதவர்களுக்குத்தான் மாங்கல்ய தோஷம் ஏற்படுகிறது.  தங்கள் துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். அதாவது

ஜாதகத்தில் பார்த்தோமேயானால் அஷ்டம பாவத்தைத்தான் மாங்கல்ய ஸ்தானம் என்கின்றனர். பொதுவாக மாங்கல்ய ஸ்தானம் நன்கு வலுவுடன் இருந்தால்தான் தங்கள் மனைவி அல்லது தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இயலும். பொதுவாக மாங்கல்ய ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நிற்க கூடாது. அந்த ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சனி, புதன், சுக்கிரன், சந்திரன், குரு நீச பலம் பெற்றால் அவர்களுக்கு இந்த தோஷம் உண்டாகும். மேலும், ராகு, கேது இந்த இரு சர்ப்ப கிரகங்கள் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் என்கின்றனர். இந்த மாங்கல்ய ஸ்தானாதிபதியின் நிலையையும் கருத்தில் கொண்டுதான் நாம் முடிவெடுக்க முடியும். அந்த ஸ்தானாதிபதியும் வலு குறைந்து இருந்து தீய கிரக சேர்க்கை பெற்றும் இருந்தாலும் இள வயதிலேயே விதவையாக காரணமாகின்றது. அல்லது ஆண்களாக இருந்தால் இள வயதிலேயே மனைவியை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

பொதுவாக பெண்களுக்கு மட்டுமே இந்த மாங்கல்யம் சொந்தம் என்பது இல்லை. இது ஆண்களுக்கும் பொருந்தும். தீர்க்க சுமங்கலியாக பெண்கள் மட்டும் இருக்க வேண்டியது என்பது போலத்தான் ஆண்களுக்கும் இந்த மாங்கல்ய ஸ்தானத்தை கணக்கில் கொள்ள வேண்டும். வயதான பிறகு இருவரில் யாராவது முன்பின் இறந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால், இள வயதில் இருவரும் நன்கு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதே பெற்றோர்களின் கனவாக இருக்கும்.    

மேலும், மாங்கல்ய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து இருந்தாலும் மற்றும் சுக்கிரன் ராகு இணைந்து  இருந்தாலும் அல்லது களத்திர ஸ்தானத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தாலோ அல்லது  அந்த அஷ்டம ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்களின் வலிமை மற்றும் சுப கோளின் பார்வையா அல்லது பாபரின் பார்வையா போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் களத்திரகாரகனின் நிலை அதாவது ஜாதகத்தில்  சுக்கிரன் நீசம் பெறுதலையும் மற்றும் அந்த இடத்தில் கிரகங்கள் வலிமை இழந்து இருப்பதும் மாங்கல்ய தோஷத்தை உண்டாக்கும் என்கின்றனர்,

ஆயுள் ஸ்தானம் வலு இழந்தவர்கள் என்ன செய்யலாம்?

எனது ஆய்வின் படி இவ்வாறு ஆயுள் ஸ்தானம் வலு இழந்தவர்கள் என்ன செய்யலாம் என்றால் அவருக்கு வரும் துணைவியாரின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் நன்கு வலு பெற்றால் நிச்சயம் அவர்களை மணமுடிக்கலாம். ஆகவே ஜாதக பொருத்தம் பார்க்கும் போது மாங்கல்ய தோஷத்தையும் பார்த்து விட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்.

* * *