வட துருவத்தை நெருங்கும் திமிங்கிலங்கள்!

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

பனிக்கட்டி உறைந்த துருவக் கடல் பகுதிகளில் வேட்டைத் திமிங்கிலங்கள் வசிப்பதில்லை. சுவாசிப்பதற்கு பெரிய துளைகளை உடலில் கொண்ட திமிங்கிலங்களால், அப்பகுதிகள் இயற்கையான வாழிடங்கள் அல்ல. ஆனால், கடலடி உயிரினங்கள் எழுப்பும் ஓசைகளை பதிவு செய்யும் விஞ்ஞானிகளுக்கு, சில ஆண்டுகளாக ஒரு வினோத ஒலியை வடதுருவக் கடல்களில் பதிவு செய்துள்ளனர். அது, திமிங்கிலங்கள் எழுப்பும், ‘கிளிக், கிளிக்’ என்ற ஓசைதான். ரஷ்யாவுக்கும் அலாஸ்காவுக்கும் இடைப்பட்ட பெரிங் ஜலசந்தியில், 2009 - 2015 வரையிலான ஒலிப்பதிவுகளில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை, திமிங்கில ஓசைகள் இருந்துள்ளன. புவி வெப்பமயமாதலால், துருவக் கடல் பனி உருக ஆரம்பித்துவிடுகிறது. இதனால், திமிங்கிலங்களால் எளிதில் நீந்தி அப்பகுதிகளுக்கு வர முடிகிறது என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால், அப்பகுதிகளில் வால்ரஸ் முதல் துருவக் கரடிகள் வரை, இதுவரை திமிங்கிலங்களிடம் மாட்டாத பல்லாயிரம் கடல் சார்ந்த விலங்கினங்கள் இரையாகக்கூடும் என கடல் உயிரி வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.