சிறுகதை : கதையல்ல நிஜம்! – தி.வள்ளி

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

‘‘ஏங்க, தரகர் இன்னைக்கு வர்றேன்னு சொல்லியிருந்தாரே இன்னும் காணோமே?’’

‘‘சேகர்தானே? வருவாரு கல்யாணி. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, பொறுமையா வேலையெல்லாம் முடிச்சிட்டு வருவாரு.’’

‘‘சந்தியாவிற்கு கூட இவ்வளவு கஷ்டப்படலே, ஏனோ ஏழெட்டு வரன்கள் பார்த்தோம். நல்ல இடமா அமைஞ்சது. மாப்பிள்ளை ஒரே பையன், சந்தியாவிற்கு எந்த பிக்கல், பிடுங்கல் இல்லை. ஆனா, சுந்தருக்கு பெண் அமைய இவ்வளவு கஷ்டப்படுதே’’ என்று அங்கலாய்த்தாள் கல்யாணி.

‘‘கடைசியா அவர் கொடுத்த ஜாதகம், நல்லா பொருந்தியிருக்கு. நல்ல இடமாகவும் இருக்கு. அது நடந்தா நல்லாயிருக்கும்.’’ ராமநாதன் கூறியதை ஆமோதித்தாள் கல்யாணி.

‘‘ஆமாங்க! அந்தப் பெண் புவனா நல்ல லட்சணமா இருக்கா. படிப்போடு அழகும் சேர்ந்து இருக்கு. சூட்டிகையான பெண்ணா இருக்கா. இந்த இடத்தை விட்டுடக் கூடாது. எப்படியாவது சுந்தருக்கு பேசி முடிச்சிடணும்.’’

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தரகர் சேகர் வந்துவிட, கல்யாணியும், ராமநாதனும் அவரை வரவேற்றனர். தங்கள் விருப்பத்தை தெரிவிக்க  சேகரும்,

‘‘அண்ணா! உங்களுக்கும் பிடிச்சிருக்குல்ல, ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்கு. நான் போய் பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட பேசுறேன். மேலே நடக்க வேண்டியதை பார்ப்போம்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்து வந்த நாட்களில், இரு குடும்பங்களும் பேசிக்கொள்ள கல்யாணம் முடிவானது. இடையே சுந்தரும், புவனாவும் தனியாக பேசிவிட்டு சம்மதம் தெரிவித்தனர். சிங்கப்பூருக்கு போயிருந்த சந்தியாவும், மாப்பிள்ளை, குழந்தையும் வந்துவிட, அவளை அழைத்துக் கொண்டு புவனாவை பார்த்துவிட்டு வந்தார்கள். எல்லோருக்கும் மனதுக்குப் பிடித்துப்போய்விட, ஒப்புத்தாம்பூலமும் மாற்றிக் கொண்டு, நிச்சயதார்த்தத்திற்கும், கல்யாணத்திற்கும் நாள் குறித்தனர்.

நிச்சயதார்த்தத்திற்கு ஒரு வாரம் இருக்கையில், நிச்சயதார்த்த புடவை, புவனாவிற்கு 5 பவுனில் ஆரம் எல்லாம் வாங்கி வந்தார்கள். சந்தியாவின் மகனுக்கும் மாமன் கல்யாண பரிசாக சுந்தர், 1 பவுன் செயின் வாங்கினான். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க வீடு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது.

அன்று மாலை தரகர் சேகர் வந்தார். சோர்வாக வந்தவரை கல்யாணி உற்சாகமாக வரவேற்றார்.

‘‘அண்ணாச்சி வாங்க! வெயில் அதிகமாக இருக்கு. மோர் கொண்டு வர்றேன் குடிங்க’’ என்று உபசரித்தவள், ‘‘நிச்சய புடவை, நகையெல்லாம் வாங்கி விட்டோம். நிச்சயதார்த்தத்தன்றே நகையை போட போறோம். புடவையை மட்டும் முன்னாடியே கொடுத்திடுவோம். அப்பதான் புவனா பிளவுஸ் தைக்க வசதியாய் இருக்கும்.’’

சேகர் பதில் பேசாமல் வாடிய முகத்துடன் இருந்தவர், மெதுவாக...

‘‘அம்மா கல்யாணி! இதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியலே. மனசுக்கு சங்கடமாயிருக்கு.’’

‘‘என்ன அண்ணாச்சி? என்ன சொல்றீங்க? பொண்ணு வீட்ல ஏதாவது பிரச்னையா? கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்றாங்களா?’’ படபடத்தாள் கல்யாணி.

‘‘தள்ளி வச்சிட்டாக்கூட பரவாயில்லேம்மா. இந்த கல்யாணமே வேணாம்னு சொல்றாங்க. இதை நான் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னுதான் எனக்கு தெரியலேம்மா.’’

அதிர்ந்து போனார்கள் கல்யாணியும், ராமநாதனும். ‘‘என்ன அண்ணாச்சி சொல்றீங்க? ெரண்டு வீட்லயும் பார்த்துப் பேசி, ஒப்புத்தாம்பூலம் கூட மாத்தியாச்சே! சுந்தரும் புவனாவும் கூட பேசிவிட்டு சம்மதம் சொன்னாங்களே! இப்ப என்ன வந்தது?

நீங்க அவங்க சொன்னதுக்கு ஒண்ணும் கேட்கலியா? முதலில் சம்மதம் சொல்லிவிட்டு இப்போ ஏன் வேணாம்னு சொல்றாங்க? நம்ம சுந்தருக்கு என்ன குறை? ராஜாவாட்டம் இருக்கான். மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறான். இதைவிட என்ன வேணும்? என்ன குறையை கண்டு கல்யாணத்தை நிறுத்துறாங்க? நம்முடைய உணர்வுகளை புரிஞ்சுக்காம திடீரென கல்யாணத்தை நிறுத்துறது என்ன நியாயம்?’’

ராமநாதன் குறுக்கிட்டு ‘‘கொஞ்சம் பொறுமையா இரு கல்யாணி. சேகர் பேசட்டும். விஷயத்தை முழுசா கேட்கவிடு.’’

‘‘என்னத்த சொல்ல போறாரு? ஏதாவது ஒரு காரணத்தை சொல்வாரு’’ என்றாள் கோபமாக.

‘‘கல்யாணி அம்மா கோபம் நியாயமானதுதான் ராமநாதன் சார்! ஆனா பெண் வீட்டாருடைய இந்த முடிவுக்கு அம்மாவும் ஒரு காரணம்.’’

கொதித்துப் போனாள் கல்யாணி. ‘‘நான் காரணமா? நீங்க என்ன சொல்றீங்க? என்னை ஏன் குறை சொல்றாங்க? நான் என்ன இவ்வளவு செய்யுங்க, அவ்வளவு செய்யுங்கன்னு கண்டிஷன் போட்டேனா? இல்லை சீர், செனத்தி என்று பட்டியல் கொடுத்தேனா? வீடு வாங்கிக் கொடுங்க, கார் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டேனா? இதிேல என் பெயரை எதுக்கு இழுக்குறாங்க?’’

‘‘அம்மா! நீங்க சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்த்த போது நடந்தது ஞாபகம் இருக்கா? ஒரு மாப்பிள்ளை பையனை பிடிச்சு, ஜாதகம் பொருந்தி, கல்யாணம் வரை வந்த போது, நீங்க அந்த பையனுக்கு ஒரு தங்கை இருக்கா. அதனால் அந்த இடத்தை வேணாம்னு சொன்னீங்களே? மாப்பிள்ளை பையனுக்கு கூடப்பிறந்தவ இருந்தா காலம் பூராவும் சீர் செய்யணும், போதாக்குறைக்கு மாமியாரோடு சேர்ந்து நாத்தனாரையும் எம் பொண்ணு சமாளிக்கணும்னு சொல்லி விரும்பி வந்தவங்களை வேணாம்னு சொன்னீங்க. அதுவும் நேரிடைய, அவங்க காதுபடவே சொன்னீங்களே ஞாபகம் இருக்காம்மா? அந்த பையனோட அத்தை பெண்தான் புவனா. அவள் வெளிநாட்ல இருந்து இப்போதான் இந்தியா வந்திருக்காங்க. அனேகமாக அவங்கதான் இந்த விஷயத்தை சொல்லியிருக்கணும். நீங்க இப்போ வருத்தப்படுற மாதிரி அந்த நேரம் அவங்க ரொம்ப மனம் புண்பட்டு போனாங்க. அவங்க சொல்லித்தான் புவனா வீட்ல உங்க சம்பந்தம் வேணாம்ங்க றாங்கன்னு நினைக்கிறேன்.

அம்மா! நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். ஒரு வீட்ல பெண் பிள்ளை இருக்கிறது அதிர்ஷ்ட தேவதை, ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிற மாதிரி அவங்களை ஒரு சுமையா பெத்தவங்களோ கூடப்பிறந்தவங்களோ நினைக்கக்கூடாது.

சந்தியா பையனுக்கு தாய்மாமான்னு சுந்தர் தம்பி உறவு இருக்கிறது எப்பேர்ப்பட்ட கொடுப்பினை! அதே மாதிரி சுந்தர் குழந்தைக்கு அத்தைங்கிற உறவில் சந்தியா இருக்கிறது எவ்வளவு அருமையான விஷயம்! எப்பேர்பட்ட பாசப்பிணைப்பு. அதனால்தான் நம்ம முன்னோர் எல்லா சடங்குகளிலும் தாய்மாமனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இவ்வளவு ஏம்மா? நான் சாதாரண ஆள்தான். என் தங்கச்சிகளுக்கு நான் பொங்கல் சீர் கொண்டு போகும்போது அவ முகத்தில் ஒரு மலர்ச்சியும், கர்வமும் தெரியும் பாருங்க. அதுக்கு ஈடு கிடையாது. அண்ணன் வீட்டு சீர் அவளுக்கு புகுந்த வீட்ல தனி கவுரவத்தை கொடுக்கிறதா அவ நினைக்கிறா. அண்ணன் – தங்கை பாசமும், பிணைப்பும் அனுபவிச்சாதாம்மா தெரியும். தாய் – தகப்பனை கவனிக்கிற பிள்ளையும், அக்கா – தங்கைக்கு சீர் செய்ற சகோதரனும் கெட்டுப்போனதா சரித்திரம் கிடையாதும்மா.

இதெல்லாம் புரியாம வாழப்போற இடத்திலே மகளுக்கு நாத்தனார் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறது உங்களை மாதிரி அம்மாக்கள் செய்கிற தப்பும்மா. உறவின் அருமை புரியாத இடத்தில் எங்க பெண்ணை கொடுக்கணுமான்னு புவனா வீட்ல நினைக்கிறதிேலயும் ஒரு நியாயம் இருக்கில்லம்மா? உங்களோட இந்த நிலைக்கு நீங்கதான் காரணம்’’ சேகர் நீளமாய் பேசி முடிக்க...

கல்யாணி விக்கித்து போய் நின்றாள். உண்மையெனும் நெருப்பு சுடத்தானே செய்யும்!

* * *