அழிவின் விளிம்பில் காபி செடிகள்!

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

பருவநிலை மாற்றத்தால், பணப் பயிரான காபியும் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மூன்று பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் பதிப்பித்துள்ள ஒரு ஆய்வு, இந்த கசப்பான செய்தியை தெரிவித்துள்ளது. குறிப்பாக, உலகின் பல பாகங்களில் காடுகளில் விளையும், 124 வகை காபிச் செடிகளில் குறைந்தது, 60 சதவீதமாவது அழிவின் விளிம்பில் உள்ளன. புதிய காபி ரகங்களை உருவாக்க, காட்டில் விளையும் காபிச் செடிகள் முக்கியம் என்பதால், இது மிகவும் கசப்பான செய்தி தான். தற்போது, வர்த்தக ரீதியில் பயிரிடப்படுபவை, ‘அராபிகா’ மற்றும் ‘ரொபஸ்டா’ ஆகிய இரண்டு ரகங்கள் தான். இதிலும், காடுகளில் தன்னிச்சையாக வளரும் அராபிகா காபிச் செடிகள், பூமி சூடேற்றத்தால் அழிவின் விளிம்புக்கு போய்விட்டதாக, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.  இதனால், இனியும் அலட்சியம் செய்யாமல், காட்டுக் காபி ரகங்களின் விதைகளை சேமித்து, விதை வங்கிகளில் பாதுகாப்பது அவசியம், அவசரம் என, இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.