நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வாழும் சிறுபான்மையினரான இந்துக்கள், பௌத்த மதத்தினர், சீக்கியர்கள் பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த குடியுரிமை திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியுள்ளது. ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது. இந்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், மாணவர், இளைஞர் அமைப்புகளும், சமூக அமைப்புகளும், பல்வேறு பிரிவு மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மிஜோரமில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் பங்கேற்ற பலர் கையில் பதாகைகளும், அட்டைகளும் ஏந்தி இருந்தனர். அவற்றில் ‘பை பை இந்தியா ஹலோ சீனா’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவுக்கு எதிரான தீவிரமான கோஷம். இந்தியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கான கோஷம். இது போன்ற கோஷத்தை வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகள் தான் பயன்படுத்துவார்கள். பொது மக்கள் அல்ல. அத்துடன் குடியுரிமை திருத்த மசோதா, வடகிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளையும், மக்களையும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ஒன்று திரட்டியுள்ளது. இதனால் பா.ஜ., வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கூட்டணி கட்சிகளை பா.ஜ., இழக்க வேண்டியதுள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது பா.ஜ.,வுக்கு பின்னடைவே. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ,, தோல்வி அடைந்தது. லோக்சபா தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டால், அதை ஈடுகட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து குறைந்தபட்சம் 25 லோக்சபா தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் பா.ஜ.,உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து 14 பேர் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த மாதம் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாநில கட்சியான அசாம் கன பரிஷத், பா.ஜ,.கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. மற்ற பத்து கட்சிகளும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்க்கின்றன. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் அஸ்ஸாமில் ஐக்கிய ஜனதா தளம், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகளுடன் இணைந்துள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கும் பத்து கட்சிகளில், ஆறு கட்சிகள் பா.ஜ.,வின் தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள். வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றினைத்து, 2016ல் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது.
“நாங்கள் குறிப்பிட்ட மசோதாவை எதிர்க்கும் மக்களுடன் சேர்ந்து பணியாற்ற இங்கு கூடியுள்ளோம். இது அரசியல் பிரச்னை அல்ல. ஆனால் மக்கள் பிரச்னை” என்று மேகலாயா முதலமைச்சரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கனார்ட் சங்மா கூறினார். அத்துடன் இந்த மசோதாவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியும் இணையும் என்று சூசகமாக தெரிவித்தார். மேகலாயாவில் கனார்ச் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் பா.ஜ.வும் பங்கேற்றுள்ளது. பா.ஜ.வுக்கு சட்டசபையில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். கவுகாத்தியில் நடைபெற்ற 11 கட்சி மாநாட்டில் பங்கேற்ற மிஜோரம் முதலமைச்சரும், மிஜோ தேசிய முன்னணியின் தலைவருமான ஜோரம்தங்கா, “இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டால், தனது கட்சி பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும்” என்று எச்சரித்தார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்து, பௌத்த மத்த்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின், பார்ஸி ஆகிய அந்நாடுகளின் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறினால், மேற்கண்ட நாடுகளில் இருந்து முஸ்லீம்களை தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி, 2014, டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவிற்குள் அடைக்கலம் ஆகியிருந்தால், இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
முன்பு 11 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்தால் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று இருந்தது. இது தற்போது ஆறு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக நுழைந்து குடியேறியவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த பிரச்னை அந்த மாநிலத்தில் மிகவும் உணர்ச்சிகரமானதாகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் உள்ளது. தற்போது அஸ்ஸாமில் பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது.
மூத்த பத்திரிகையாளர் சுசானந்தா தலுக்தார் கூறுகையில், “இந்த மசோதா முன் எப்போதையும் விட மாநில கட்சிகள் ஒருங்கிணையவும், பலம் அடையவும் உதவியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச வேண்டியதுள்ளது. குறிப்பாக வடகிழக்கு தேசிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதுள்ளது. இந்த குடியுரிமை திருத்த மசோதா பற்றிய பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், இது தேர்தலில் பெரும் சவாலாக இருக்கும்” என்று கூறினார்.
இது தான் குறிப்பிட்ட பிரச்னைக்காக வட கிழக்கு மாநிலங்கள் ஒன்றாக இணைந்திருப்பது முதல் முறை எனலாம். வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மாணவர் அமைப்புகளின் கூட்டு அமைப்பான வடகிழக்கு மாணவர் சங்க தலைவர் சாமுவேல் பி.ஜெய்ரா, “ஆம், இதுதான் முதன் முறை. ஏனெனில் பிரச்னை அவ்வளவு தீவிரமானது. ஏற்கனவே அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவர்களால் திணறிக் கொண்டுள்ளோம். இதற்கு மேலும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இது எங்களின் அடையாளம் சம்பந்தப்பட்டது”என்று கூறினார்.
இந்த எதிர்ப்பலைகளால் பாரதிய ஜனதா திகைத்துபோயுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடக்கின்றன. போலீசார் போராட்டகாரர்களை ஒடுக்கி வருகின்றனர். சமீபத்தில் பிஸ்வநாத் மாவட்டத்தில் அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு பெண் ஒன்றரை வயது கை குழந்தையுடன் வந்திருந்தார். அந்த குழந்தை அணிந்திருந்த கருப்பு நிற மேல் சட்டையை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினார்கள். ஒரு பெண் தனது பர்சில் சிறிய அளவில் கருப்பு நிறம் இருந்த காரணத்தால், தன்னை பர்ஸ் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை என்று பேஸ்புக்கில் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக ஆவதை, இந்த மசோதா தடுக்கும் என்று விளக்கமளித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் இருந்து குடியேறியுள்ளவர்கள் அனைவரையும் எதிர்க்கின்றனர். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் எதிர்க்கின்றனர்.
நன்றி: அவுட்லுக் வார இதழில் அப்துல் கனி எழுதிய கட்டுரையின் உதவியுடன்.