பேரங்கள் தொடங்கியது!

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2019

இந்திய அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. பிரதான அரசியல் கட்சிகள் வலைவீசி, விலைபேசும் பேர அரசியலைத் தொடங்கிவிட்டன. கொள்கை, லட்சியம், தத்துவம், சித்தாந்தம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு எல்லோரும், எல்லோரிடமும் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

இந்திய அளவில், தற்போது ஆளுங்கட்சி யாகவுள்ள பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து வெற்றி பெற்று, 2019லிலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வலுவான கூட்டணியை உருவாக்கும் பேர அரசியலை கையில் எடுத்துள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தவிர்த்த, மாநிலக் கட்சிகளை அணி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ மாநிலங்களில் ஓரளவு செல்வாக்குள்ள பெரிய கட்சிகள், ஜாதி ரீதியாக, சமுதாய ரீதியாகச் செயல்பட்டு வரும் சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் கூட வளைத்துப்போடும் வேலையை செய்து வருகிறது.

மோடி தலைமையிலான ஆட்சியை அப்புறப்படுத்துவது ஒன்றே தங்களது லட்சியம் எனப் பேசித்திரியும் காங்கிரஸ் கட்சியும், அவர்க ளோடு ஒருமித்த  கருத்துக் கொண்ட மாநிலக் கட்சிகளும், ஒருங்கிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டனர்.

கடந்த மாத தொடக்கத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் முன்னெடுப்பில் நடை பெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், சுமார் 21 கட்சிகள் பங்கேற்று, ஒரு கூட்டத்தை நடத்தி மோடி எதிர்ப்பு ஒன்றையே பிரதானப்படுத்தி பேசிக் கலைந்தனர்.

மோடிதான், அடுத்து வரும் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளர் என பா.ஜ. தரப்பு பிரகடனப் படுத்தியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக தேசிய அளவில், முன்நிறுத்தப்படுகிற, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சியே தயங்குகிறது.

மாநிலக் கட்சிகளின் துணையுடன், அவர்களின் தயவுடன் ‘மெகா’ கூட்டணியை உருவாக்கி, வெற்றி பெற்றதற்குப் பிறகு. பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம் என்ற கருத்தும், எண்ணமும்தான், காங். உள்ளிட்ட அந்தக் கூட்டணியில் இடம்பெறும் எனக் கருதப்படுகிற கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், இந்நிலையில் கடந்த மாதம், சென்னையில் நடைபெற்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழாவில் பேசிய அக்கட்சியின் இப்போதைய தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து பேசினார்.

ராகுலின் பாட்டி இந்திராகாந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும், தமது தந்தையார் கருணாநிதி முன்னிலைப்படுத்தி ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக’ எனவும், ‘இந்திராவின் மருமகளே வருக!’ இந்தியாவின் திருமகளே வருக!’ என அழைப்பு விடுத்ததைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அவரது வழியில் ராகுலே வருக, நல்லாட்சி தருக! எனப் பேசி கைதட்டல் வாங்கிச் சென்றார்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் உள்பட, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதாகக் கருதப்படும் எந்தக் கட்சியும் ஏற்றதாகத் தெரியவில்லை. அன்றைய தினம் சிலை திறப்பு விழா மேடையில் இருந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நாயுடு மற்றும் கம்யூனிஸ்டு தலைவர் உள்ளிட்ட யாரும் ஸடாலினின் பேச்சை ரசிக்கவில்லை.

மாறாக, அது அவரது தனிப்பட்ட கருத்து, நாங்கள் யாரும் பிரதமர் வேட்பாளரை எங்கள் அணியின் சார்பில் முன்னிலைப்படுத்தவில்லை. தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கூடிப்பேசி கலந்தாலோசித்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்தனர். இதைத்தான் விமர்சித்துப் பேசிய அமித்ஷா எதிரணியில் 6 பிரதமர் வேட்பாளர்கள் இருப்பதாக கிண்டலடித்தார்.

தேசிய அளவில் நிலைமை இவ்வாறிருக்க தமிழ்நாட்டில், இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எத்தனை அணிகள் சந்திக்கும் என்பது இன்றளவும் தெளிவாகத் தெரியாத நிலையே உள்ளது.

தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாகவுள்ள அதிமுக சார்பில் கருத்துத் தெரிவித்து வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘தேசியக் கட்சிகள், மாநிலக்கட்சிகளோடு கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். அது பரம ரகசியம்’’ பேச்சு வார்த்தை முடிந்ததும் தெரிவிக்கிறோம் என்கிறார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் கூட்டணி பற்றிய முடிவு தெரியும் என்கிறார்.

அமைப்புச் செயலாளர் டி. ஜெயக்குமார், திமுக மற்றும் தினகரனின் அமமுக, தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுடன் பேசி வருவதாகக் கூறுகிறார்.

பா.ஜ.வுடன் கூட்டணி உறுதிப்படுத்தப்  படுத்தப்பட்டு விட்டது. இந்த அணியில் பா.ம.க. மற்றும் தேமுதிகவும் இடம் பெறுகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கி விட்டன. அதிலும் ஒருபடி மேலே போய், பா.ஜ. சார்பில் எந்தெந்த தொகுதிகளில் யார், யார் வேட்பாளராகப் போட்டியிடப் போகிறார்கள் என்ற விவரமும் கூட செய்தித்தாள்களில் இடம் பெறுகிறது. இருந்த போதும், தம்பிதுரை உள்ளிட்டோர். பா.ஜ.வுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் நாட்டிலுள்ள இரு கழகங்களுடனும் கூட்டணி சேர மாட்டோம் என அறிவித்த பா.ம.க. தலைமை, இப்போது திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பினரோடும் பேசி வருவதாகக் கூறுகிறது. (பேரம் படிந்து விட்டது என்ற தகவல்களும் கூட உலா வருகிறது.)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவரது மைத்துனருடன், அதிமுக தரப்பும், பா.ஜ. தரப்பும் பேசி கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுக அணியில் இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என்று வருகிறபோது, அங்கும் கூட இடப்பெயர்ச்சி நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

 அதிமுக – பா.ஜ கூட்டணியை விட ஒன்றிரண்டு இடங்களைக் கொடுத்து பா.ம.க.வை திமுக அணிக்கு இழுப்பதற்கான பேரப் பேச்சுக்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ. அணியில் இடம் பெற முடியாத ஜி.கே. வாசனின் த.மா.கா.வின் நிலை என்ன? புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் யாரோடு செல்லும், காங். பா.ஜ. ஆகிய தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை எனப் பிரகடனப்படுத்தியுள்ள தினகரனின் அமமுக நிலை என்ன? என்பது உள்ளிட்ட விடை தெரியாத, கேள்விகள் பல இன்னும் இரண்டு வார காலத்திற்கு உலாவரும். அதன்பிறகுதான் கூட்டணி குறித்தும், எத்தனை அணிகள் போட்டியிடும் என்பது பற்றியும் தெளிவுபிறக்கும். அதுவரை பொறுமை காப்போம்.