துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 15

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2019

ஓமந்தூரார் எனும் தியாகச்சுடர்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு என தனிச்சிறப்பிடம் உண்டு. இந்திய தேசம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர், சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்று திறம்படச் செயலாற்றிய அந்தப் பெருமகனாரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் திண்டிவனம் நகரத்திற்கு அருகே அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி பிறந்தவர் ஓமந்தூர் ராமசாமி.

இளம்வயதில் திண்டிவனம் பகுதியில் உள்ள வால்டர் சுடர் பள்ளியில் படித்து முடித்த அவர். கல்லூரிப் படிப்பை முடித்து, சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பள்ளிப் படிப்பின் போதே பிரிட்டிஷ் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு முன்னணித் தலைவர்களுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றதுடன், அவர்களின் பாராட்டுக்களைப் பெறுகிற அளவுக்கு விடுதலைப் போராட்டங்களிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டார்.

மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களின் நம்பிக்கைகளையும், நன்மதிப்பையும் பெற்ற ஓமந்தூரார், 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பிறகு, சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பல முக்கியச் சட்டங்கள் சென்னை மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சென்னை நுழைவு அதிகாரம் அளிப்புச் சட்டம் 1947ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், தலித்துகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அனைத்து இந்துக் கோயில்களுக்குள் செல்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முதல் அமலில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்து, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். மேலும் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம், மற்றும் கோயில்களில் பொட்டுக்கட்டி விடும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் என பல புரட்சிகரமான சட்டங்களையும், மாகாண நலனுக்கான பல்வேறு புதிய திட்டங்களையும் கொண்டு வந்து மக்கள் பாராட்டும் மகத்தான முதல்வராக ஓமாந்தூர் ராமசாமி செயல்பட்டார்.

இவருடைய அமைச்சரவையில், எம். பக்தவத்சலம், பி. சுப்பராயன், டி.எஸ்.எஸ். ராஜன், டி.எஸ். அவினாசி லிங்கம் செட்டியார், டேனியல்தாமஸ், வீமுல தர்மய்யா, கே. சந்திரமவுலி, கே. மாதவமேனன், காலா வெங்கடராவ், ஏ.பி. ஷெட்டி, எஸ். குருபாதம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

1949ம் ஆண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முதலமைச்சர்  பொறுப்புக்கான வேட்பாளராக களம் இறங்கிய குமாரசாமி ராஜாவுக்கு, காமராஜ் ஆதரவு அளித்ததால், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தோல்வி அடைந்து முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.

ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய தேசத்துடன் இணைவதற்கு பெரும்பங்காற்றியவர், ஓமந்தூர் ராமசாமி. பாகிஸ்தானிலிருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகிற தகவலை, அன்றைய மத்திய அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு  தெரிவித்தார்.

அதன்பின்னர்தான், ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைத்தனர். இதற்காக அன்றைய மத்திய அமைச்சர் சர்தார் படேல், ஓமாந்தூர் ராமசாமியை வெகுவாகப் பாராட்டினார். 1949ம் ஆண்டு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஓமாந்தூர் ராமசாமி, அரசியல் தளத்திலிருந்தும், தம்மை முழுமையாக விடுவித்துக் கொண்டார்.

இளம் வயது முதலே, வள்ளலார், ராமலிங்க அடிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஓமாந்தூரார், விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டே, வடலுார் நகரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார்.

இதுதவிர, வள்ளலார் குருகுலப்பள்ளி, அப்பர் அனாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்கர் தொண்டர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தொண்டு நிறுவனங்களைத் தொடங்கி பொதுநலச் சேவையில் தீவிரம் காட்டினார். ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரின் அப்பழுக்கற்ற, பொதுநலச்சேவையை, அவரது அரசியல் பங்களிப்பை, ஆட்சி நிர்வாகத்தை அனைத்துப் பிரிவினரும் வரவேற்றுப் பாராட்டினார்கள்.  

வடலுாரில் தங்கி, வள்ளலாரின் சன்மார்க்க சபையில் ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்த நிலையில் 1976ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, தமது 75வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மரணம் அடைந்தார். அவருடைய நினைப்போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு, அரசினர் தோட்ட வளாகத்திற்கு அவரது பெயரைச் சூட்டியதுடன், அவர் பிறந்த ஓமந்தூர் கிராமத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தையும் அமைத்துள்ளது.

மத்திய அரசின் சார்பில், இந்திய அஞ்சல்துறை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்புச் செய்தது. சென்னை மாகாண முதலமைச்சராக பொறுப்பு வகித்த கால கட்டத்தில், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து, மக்கள் மத்தியில் சிறந்த நன்மதிப்பைப் பெற்ற ஓமாந்தூர் ராமசாமி போன்ற அப்பழுக்கற்ற, நேர்மையான தலைவர்களை கொண்டாடி மகிழ வேண்டியது நம் கடமை.